சங்க இலக்கியம்!
நற்றிணை காட்டும்
மணலும் மகளும்!
இரா.சம்பந்தன் கனடா
அது மலைகள் நிறைந்த குறிஞ்சி நிலமும் அல்ல. காடுகள் சூழ்ந்த முல்லை நிலமும் அல்ல. அவை இரண்டும் இடையே அமைந்து வரண்டு கிடந்த பாலை நிலம் அது. நீர் நிலைகள் இல்லாததால் பயிர் வாய்ப்பும் இல்லை. வேட்டைக்கு விலங்குகளும் இல்லை. தங்கள் ஊர் வழியால் செல்வோர் கொண்டு செல்லும் பொருட்களைப் பறித்து அதனால் உயிர்வாழும் ஆறலைத்தல் என்ற தொழிலை மேற்கொண்டு வாழ்ந்த அந்த வறிய சமூகத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பணக்கார வீடுகளும் இருக்கத்தான் செய்தன. அத்தகைய ஒரு வீட்டில் தட்டில் போடப்பட்டிருந்த உணவை உண்ணாமல் பிசைந்து கொண்டிருக்கின்றான் ஒரு கணவன். மனைவி கேட்டாள் ஏன் சாப்பாடு பிடிக்கவில்லையா? இனி வேலையாட்களை சமைக்க விடாமல் நான் தான் உங்களுக்கு ஏற்ற மாதிரிச் செய்து தர வேண்டும் போல இருக்கு. இன்றைக்கு மட்டும் சாப்பிடுங்கோ என்றாள் அவள்.
அப்படியில்லை. காலம் காலமாக செல்வச் செழிப்போடு வாழ்ந்த எங்களுக்கே இந்த ஊரின் வரட்சி அச்சத்தைத் தருகின்றது என்றால் ஓரளவு வசதியோடு இருந்த குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டுப் போய் எங்களுடைய பிள்ளை என்ன துன்பங்களை எல்லாம் அனுபவிக்கின்றதோ நேரத்துக்கு சாப்பிடுகிறாளோ சாப்பிட அந்தக் குடும்பத்திடம் போதுமான பொருட்கள் இருக்கிறதோ. ஓன்றுமாகத் தெரியவில்லை. அவள் பிஞ்சுக் குழந்தையடி. அது தான் யோசிக்கின்றேன். சாப்பிட மனது வருகுதில்லை.
தலை கவிழ்ந்து சொன்னான் கணவன். மனைவி எதுவும் பேசவில்லை.
ஒன்று செய். இருக்கிற பொருள் பண்டங்களோடு நிறையச் சமைத்து எங்கள் மாட்டு வண்டியிலேயே அவளை வளர்த்த எங்கள் வேலைக்காரக் கிழவியிடம் கொடுத்து அனுப்பிவிடு. பிள்ளைக்கு உதவி செய்ததாகவும் இருக்கும். நிலமையைப் பார்த்து வந்ததாகவும் இருக்கும். நாளைக்கே செய் என்ன.
ஏன் வேலைக்காரர். நாங்களே போய் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு அவளையும் பார்த்துக் கொண்டு வருவோம்.
இல்லை. உண்மையாகவே அந்தக் குடும்பம் சிரமத்தில் இருந்தால் நாங்கள் போய் அவர்களுடைய மனத்தை மேலும் நொருக்கிவிட்டு வரக்கூடாது. கிழவியே போய் வரட்டும்.
மறு நாள் கட்டி நின்ற ஆடு மேய்ந்து வந்த பன்றி என்று அனைத்தையும் கறியாக்கி வரகுச் சோற்றுடன் வண்டியில் ஏற்றினாள் அந்தத் தாய். மகளுக்கு நிறையப் பொருளும் கொடுத்து அனுப்பிவிட்டு மாலையில் திரும்பி வரும் வண்டிலை எதிர்பார்த்து இருந்தாள் அவள்.
கிழவி வந்தாள் அவள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. தாயை அழைத்துக் கொண்டு தனியிடம் சென்றாள். நீ தந்த அனைத்தையும் அவளிடம் கொடுத்தேன். மகிழ்ச்சிக்கு மாறாக என்ன இதெல்லாம் என்ற வெறுப்பின் சாயலை அவள் கண்களில் கண்டேன். வறுமை காரணமாக அவள் சரியாக உண்பதில்லை. அவள் மெலிந்து விட்டாள். உடம்பிலே தெம்பில்லை. ஒரு பொழுது விட்டு இன்னொரு பொழுது மட்டும் உண்டு வாழ்கின்றாள். ஆனாலும் புகுந்த வீட்டைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்ற வைராக்கியம் மட்டும் குறையவில்லை.
அந்த நிலையிலும் சிறு வயதிலே பெற்றார் வீட்டில் எவ்வளவு செல்வச் செழிப்போடு இருந்தேன் என்ற எண்ணம் துளி கூட அவளுக்கு இல்லை. வெளியே சென்று வரும் போது அப்பா என்னவெல்லாம் சாப்பிடக் கொண்டுவந்து தருவார் இன்று என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற சிந்தனையும் அவளுக்கு இல்லை. நீர் கிடைக்கும் போது குளிர்ந்தும் நீர் இல்லாத காலத்தில் உலர்ந்தும் கிடக்கும் மணல் போல வாழப் பழகி விட்டது அவள் தேகம் என்றாள் கிழவி.
அழுதாள் தாய். உனக்கு ஞாபகம் இருக்கா தேன் போலச் சுவை சொட்டும் பாலைக் காச்சிப் பொன்மயமான கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு இதைக் குடி என்று மெல்லிய தடியெடுத்து அடிப்பது போல தலை முடி நரைத்து முதிந்த நீங்கள் எல்லாரும் வற்புறுத்த குடிக்க மாட்டேன் என்று சொல்லி இந்த வீடு முழுவதும் ஓடுவாள் அவள்.
அவளோடு ஓடமுடியாமல் நீங்கள் கால் தளர்ந்து இருக்க தெளிந்த நீர் போன்ற முத்துப்பரல்கள் ஒலிக்கும் கால் சிலம்போடு முற்றத்திலே போடப்பட்டிருந்த பந்தலில் நின்று உங்களைப் பார்த்துச் சிரிப்பாள். அப்படிப்பட்ட விளையாட்டுப் பெண்ணான அவளுக்கு இவ்வளவு அறிவும் பொறுமையும் எங்கிருந்து வந்தது. எந்த வறுமையிலும் தான் புகுந்த வீட்டு நிலை பற்றி உனக்கு வாய் திறக்கவில்லையே எப்படி ஒரு பண்பட்ட குடும்பத்துப் பெண்னாக மாறியிருக்கிறாள் என் பெண். அது போதும் எனக்கு என்றாள் அந்தத் தாய் கண்களைத் துடைத்துக் கொண்டு!
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல்
உண் என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,
அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே?
இந்தப் பாடல் சங்க இலக்கியங்களில் ஒன்றான நற்றிணையில் 110 வது பாடலாக இடம் பெற்றிருக்கின்றது. போதனார் என்ற புலவர் இதைப் பாடியிருக்கின்றார். பெண்ணைப் பெற்றவர்கள் பலர் உங்கள் காலத்தில் மட்டுமல்ல எங்கள் காலத்திலும் கண்ணிலே ஈரம் காயாமல் தான் வாழ்ந்து மடிந்திருக்கின்றார்கள் என்று படிப்போர் ஒவ்வொருக்கும் இந்தப் பாடல் சொல்லிக்கொண்டிருக்கின்றது.
நன்றி:கனடா தமிழர் தகவல் (5.4.2021)
659 total views, 3 views today