தேர்தலுக்கு அஞ்சும் ரணில்?
-பாரதி
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களைப் பின்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சூட்சுபமான உபாயமொன்றை முன்னெடுத்ததையடுத்து எதிர்;;கட்சிகள் அனைத்துமே உஷாரடைந்திருக்கின்றன. குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தலை நடத்தவில்லையென்றால், போராட்டக்களத்தில் இறங்கப்போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பதையடுத்து அரசியல் களம் பரபரப்பாகியிருக்கின்றது. பலப்பரீட்சை ஒன்று உருவாகியிருக்கின்றது.
இன்றைய தருணத்தில் தேர்தல்களை யாரும் வரவேற்கத் தயாராகவில்லை என்பது உண்மை. பிரதான எதிர்க்கட்சிகள் கூட அதற்குத் தயாராகவில்லை. ஆனால், தன்னுடைய நலன்களுக்காக தேர்தலை பின்போடுவதில் ரணில் வெற்றிபெற்றால், எதிரணிகளை அது அரசியல் ரீதியாகப் பாதிக்கும். அதனால்தான் பிரதான எதிர்க்கட்சிகள் இப்போது வரிந்துகட்டிக்கொண்டு போராட்ட களத்தில் இறங்கப்போவதாக எச்சரிக்கைகளை விடுத்துக்கொண்டுள்ளன.
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போதோ நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஒன்பது மாகாண சபைகளும் இப்போது ஆளநர்களால்தான் நிர்வகிக்கப்படுகின்றது. “நல்லாட்சி” எனப்படும் “மைத்திரி – ரணில் கூட்டாட்சி” இடம்பெற்ற காலத்திலேயே வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட பெரும்பாலான மாகாண சபைகளின் பதவிக்காலங்கள் முடிவுக்கு வந்துவிட்டன.
மாகாண சபைத் தேர்தல் முறையில் மாற்றம் ஒன்றைச் செய்வதற்காக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் ஒன்றை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்தத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுகின்றது. இருந்தபோதிலும், பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவது என அனைத்து அரசியல் கட்சிகளும் பின்னர் முடிவுக்கு வந்தன. அதற்கான திருத்தம் மீண்டும் பாராளுமன்றத்தில் செய்யப்பட வேண்டும்.
தேர்தல்களை நடத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் மாகாண சபைகளின் நிர்வாகத்தை ஒப்படைப்பதற்கு அரசாங்கம் விரும்பியிருந்தால் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றக்கூடிய சட்டத் திருத்தம் ஒன்றின் மூலமாக இதனைச் செய்திருக்கமுடியும். இன்று கூட செய்யமுடியும். ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களைச் சந்திப்பதற்குள்ள தயக்கம் காரணமாக அதனைத் தவிர்க்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட அதனைச்செய்வதற்குத் தேவையான அழுத்தங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதுடன் தமது பணியை நிறுத்திக்கொள்கின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரி காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டை வரையில் வாகனப் பேரணியை நடந்தும் சுமந்திரன் ூ சாணக்கியன் குழவினர் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த வேண்டும் எனக் கோரி இதுவரையில் எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான அதிகாரம் இப்போது தேர்தல்கள் ஆணைக் குழுவின் கைகளுக்கு வந்திருக்கின்றது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட முடியும்.
உள்ளுராட்சிமன்றங்களின் பதவிக்காலம் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்ட நிலையில் அதனை மேலும் நீடிக்கமுடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதுதான் தேர்தல் ஆணைக்குழுவின் திட்டம். அதற்கான அதிகாரமும் ஆணைக்குழுவுக்கு இருக்கின்றது.
இந்த நிலையில்தான் ரணில் விக்கிரமசிங்க முந்திக்கொள்ளப்பார்க்கின்றார். தனியொருவனாக வந்து நிறைவேற்று அதிகாரங்களையும் கைப்பற்றிக்கொண்டிருக்கின்ற ரணில், அரசியலில் இரண்டு இலக்குகளுடன் இப்போது காய்நகர்த்துகின்றார். ஒன்று தனது பதவியைப் பயன்படுத்திக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்துவது. இரண்டாவது, அதன் மூலமாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கி அதிகாரத்தைக் கைப்பற்றுவது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களின் மொட்டு அணி தன்னை ஆதரிக்கும் என அவர் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
ஆனால், அதற்கு முன்னர் வரக்கூடிய தேர்தல்கள் – குறிப்பாக உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் தமது பலவீனத்தை பகிரங்கமாக்கிவிடும் என்பதால்,அவற்றைத் தவிர்ப்பதற்கு அவர் நினைக்கின்றார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக களமிறங்கும் போது, ஐக்கிய தேசியக் கட்சி காணாமல்போய்விடும் என ரணில் அஞ்சுகிறார். கடந்த பொதுத் தேர்தலிலும் அவரது கட்சிக்கு அதுதான் நடந்தது.
ரணில் ஜனாதிபதியாக வந்தபோது நாட்டின் பொருளாதார நெருக்கடியை அவர் முடிவுக்குக்கொண்டுவருவார் என்ற நம்பிக்கை இருந்ததுது. ஆனால், நெருக்கடியை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அவர் எதிர்பார்த்த இடங்களிலிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் இன்றுவரை திருப்திகரமான பிரதிபலிப்பு கிடைக்கவில்லை. ஜப்பானில் ஒரு மாநாட்டை நடத்தும் திட்டமும் தோல்வியடைந்துவிட்டது. இந்த நிலையில்தான் இலங்கையை வருமானம் குறைந்த நாடாகப் பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை அமைச்சரவை இப்போது எடுத்துள்ளது.
இதன் மூலமாகவும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன. ஆனால், வரிகள் அதிகரித்துள்ளன. புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விலைவாசியை மக்களுக்கு எட்டாத உயரத்துக்கு கொண்டுசெல்வதற்கு அவை காரணமாகவிருந்துள்ளது. ஆனால், சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ள விலைவாசியை, தமது வழமையான மாத வருமானத்துடன் சமாளிக்க முடியாமல் பல குடும்பங்கள் வறுமையின் எல்லைக்குச் சென்றுவிட்டன. இந்த நிலை இன்னும் மோசமடையலாம் என பொருளாதார நிணர்கள் எச்சரிக் கின்றார்கள். இது ரணிலுக்கும் தெரிகிறது.
தேர்தல் ஒன்றை எதிர்கொள்வதற்கான தருணம் இதுவல்ல என ரணில் கருதுவதற்கு இதுவும் காரணம். இந்த வேளையில் தேர்தல்களை நடத்துவது முகத்தில் சேறை அப்பிக்கொள்வதற்கு சமன். மக்கள் தமது சீற்றத்தை தன்மீது காட்டுவார்கள் என அவர் அஞ்சுகிறார். அதனால்தான், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் தொகையை அரைவாசியாகக் குறைக்கப்போவதாகவும், தேர்;ல் சட்டத்தை மாற்றப்போவதாகவும் ரணில் கடந்த வாரம் அறிவித்திருக்கின்றார் இதனைக்காரணமாகச் சொல்லி உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களையும் ஒத்திவைப்பதுதான் ரணியின் உபாயம். மாகாண சபைகளுக்கான தேர்தல்களை தள்ளிப்போடுவதற்கு கை யாண்டது போன்ற ஒரு உபாயத்தை இங்கு ரணில் பயன்படுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள மொட்டு அணியும் இதனை ஆதரிக்கும். ராஜபக்ஷக்கள் மீதான மக்களின் சீற்றம் இன்னும் முற்றாகத் தணியாத நிலையில் மீண்டும் மக்கள் முன்பாகச் செல்வதற்கு மொட்டுவும் தயாராகவில்லை. ஆக, பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் தான் நினைத்ததை சாதித்துவிட முடியும் என ரணில் எதிர்பார்க்கின்றார். பிரதிபலிப்புக்கள் எவ்வாறுள்ளது என்பதை அறிவதற்காகவும் இந்த அறிப்பை ரணில் வெளியிட்டிருக்கலாம்.
இந்த நிலையில் விழித்துக்கொண்டுள்ள எதிர்க்கட்சிகளால் தேர்தல்களை நடத்துவதற்கான அழுத்தங்களை கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள் என்பன இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டுக்காக இணைந்து களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளன. போராட்டங்களை ஒடுக்குவதற்கான சில உபாயங்களையும் கடந்த சில வாரங்களில் ரணில் பரீட்சித் துப்பார்த்துள்ளார் இந்த நிலையில், உள்ளுராட்சி தேர்தல்களை மையப்படுத்தியதான ஒரு பலப் பரீட்சையை அடுத்துவரும் வாரங்களில் எதிர்பார்க்கமுடியும்!
977 total views, 4 views today