நேற்று எப்படி இருந்தோம் என்பதுதான் நாம் இன்று எப்படி இருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது.
ஜெர்மனியின் ‘அகம் புறம்’ என்று தமிழில் எழுதப்பட்ட மணிக்கொடி பட்டொளி வீசி லின்டன் அருங்காட்சியகத்துக்கு வெளியே பறக்கிறது இந்தியாவின் தலைநகரில் கூட இப்படி தமிழைப் பார்த்ததில்லை.
அருள் மெர்வின் சுவிஸ்.
கொரானோ பிரச்சனையை புடின் முடித்து வைத்தார். பொன்னியின் செல்வன் (ராஜராஜ சோழன்) பிரச்சனையை நயன்தாரா முடித்து வைத்திருக்கிறார். பிக் பாஸ் மிச்சமுள்ள எல்லா பிரச்சனைகளையும் இன்னும் மூன்று மாதத்தில் முடித்து வைத்துவிடுவார்.
நேற்றைய கொரோனாவே என்னவென்று தெரியாத ஒரு தலைமுறை சில மாதங்களில் உருவாகிவிடும். இரண்டாம் அலை, மூன்றாம் அலை, பிணங்கள் மிதந்தது, மணியடித்தது, விளக்கு பிடித்தது என்றெல்லாம் எதுவுமே இந்தியாவின் வரலாற்றில் நடக்கவில்லை, வரலாற்றை எவனோ மாற்றி எழுதியிருக்கிறான் என்றெல்லாம் நம்மை நம்பவைத்துவிடலாம். பரபரப்பான நிகழ்வுகள் எவ்வளவு பரபரப்பைக் கிளப்பினாலும் அச்சென்று தும்மிவிட்டு கடவுளே ரட்சியும் என்று அடுத்த வேலையைப் பார்க்கச் செல்லும் அளவில்தான் அவற்றின் ஆயுட்காலத்தை வைத்திருக் கிறோம்.
நேற்று எப்படி இருந்தோம் என்பதுதான் நாம் இன்று எப்படி இருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. இன்று தலைவலித்தால் நேற்று பார்ட்டி பயங்கரமாக இருந்திருக்கும். நேற்று எப்படி இருந்தோம் என்பதை மறந்து கோமாவிலிருந்து எழுவது போல தினமும் காலையில் உள்ளங்கையைப் பார்த்து எழுந்து கொண்டிருந்தால், ‘நேற்று நீ இப்படிதான் இருந்தாய்’ என்று அவர்களது கதையை தினமும் நம் கதையாக போதனை செய்து நம்மை நம்ப வைக்க ஏதோ ஒரு கூட்டம் ரெடியாக இருக்கும். அவர்கள் சொன்ன கதையை நம் வரலாறு, நம் நாடு, நம் மதம், நம் கலாச்சாரம், நம் வாழ்க்கைமுறை என்று நம்பிக் கொண்டிருப்பதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. மேட்ரிக்ஸ் படம் போல இன்னொருவர் நம் உலகத்தை உருவாக்க அவரது உலகத்துக்குள், அதிலிருக்கும் சுக துக்கங்களுக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம். இதிலிருந்து விழித்தால் இது அநியாயம் என்று முதலில் கோபம் வரும். பிறகு மாற்றமும் வரும்(ரலாம்). எப்படி விழிப்பது? நேற்று நடந்தைவைகளை நம் கண்முன்னே சிசிடிவியில் படம் பிடித்தது போல ஆதாரங்களுடன் யாராவது காண்பித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படிக் காட்டி நம்மை விழிப்பாக வைத்துக் கொண்டிருக்க வைப்பதில் அருங்காட்சியகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
ஜெர்மனியின் ‘அகம் புறம்’ என்று தமிழில் எழுதப்பட்ட மணிக்கொடி
பட்டொளி வீசி லின்டன் அருங்காட்சியகத்துக்கு வெளியே பறக்கிறது.
ஜெர்மனியின் லின்டன் அருங்காட்சியகத்தில் தமிழர் வரலாறு மற்றும் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பொருட்கள் உலகத்தின் பல இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு ‘அகம் புறம்’ என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். ‘அகம் புறம்’ என்று தமிழில் எழுதப்பட்ட மணிக்கொடி பட்டொளி வீசி அருங்காட்சியகத்துக்கு வெளியே பறக்கிறது. மெர்சிடிஸ்-பென்ஸ், போர்ஷ போன்ற மாபெரும் கார் நிறுவனங்களின் தலைமையகமான ஸ்டுட்கார்ட் நகரின் மத்திய ரயில்வே நிலையம் முதல் பல முக்கிய இடங்களை அலங்கரிக்கின்றன ‘அகம் புறம்’ என்று எழுதப்பட்ட ஆளுயர போஸ்டர்கள். இந்தியாவின் தலைநகரில் கூட இப்படி தமிழைப் பார்த்ததில்லை. தமிழ்க்கண்காட்சி என்றால் உடனே இந்தியத் திருநாட்டின் ஒன்றிய எல்லைக்குள் வாழும் தமிழர்கள் பற்றி (மட்டும்) என்று நினைத்துவிட வேண்டாம். தமிழர்கள் அனைவருக்குமானது. அதில் ஆதிச்சநல்லூரும் உண்டு, ஈழமும் உண்டு, எண்பது சொச்சம் நாடுகளும் உண்டு. தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலப்பரப்புகளின் ஓர் அழகான வரைபடத்திலிருந்து கண்காட்சி ஆரம்பிக்கிறது. அடுத்து அரிக்கமேடு மற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பொருட்கள், சங்க காலம், ஓலைச்சுவடி, ஒளவையார் சிலை, திருவள்ளுவர் சிலை என்று ஒரு ஆழமான அடித்தளம் போடப்படுகிறது. திரும்பிப் பார்த்தால் திருக்குறட்பாக்கள், பழந்தமிழ் இலக்கிய வரிகள், திணைகள், துறைகள் என்று டிஜிட்டல் மீடியா துணையுடன் கூரையிலும் தரையிலும் சுவர்களிலும் அமைக்கப்பட்ட திரைகள், ஒலி ஒளிக்காட்சிகள் மூலம் நம்மை ஒரு ‘தமிழ் நாட்டிற்குள்’ இழுத்துச் செல்கிறார்கள். அடுத்தடுத்து அழகியலுடன் திட்டமிட்டு அமைக்கப்பட்ட அறைகள். சமண, பௌத்த காலம், பக்தி காலம், சுதந்திரப் போராட்ட காலம், திராவிட எழுச்சி, ஈழப் போராட்டம், சினிமா தமிழ் என்று கண்காட்சி விரிந்து நம் பெற்றோர் காலம், நம் காலம், தேங்காய்த் துருவி, கேஸ் சிலின்டர் என்று ஒரு மிக நீண்ட காலவெளிக்கான தமிழர்களின் உலகத்தை அந்தந்த காலத்தைச் சார்ந்த பொருட்களின் உதவியுடன் மெய்சிலிர்க்க வைத்து நினைவூட்டுகிறார்கள்.
நம்மை நாமே செல்பி எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டு நாமே லைக் போடுவது ஒரு வகையான பெருமை. நம்மை இன்னொருவர் போட்டோ எடுத்து அதற்கு மக்களெல்லாம் லைக் போடுவது இன்னொரு வகையான பெருமை. இந்தக் கண்காட்சி இரண்டாவது வகை. தமிழர்கள், ஐரோப்பியர்கள், உலக அருங்காட்சியகங்கள், அரசாங்கங்கள் என்று பலபேர் இந்தக் கண்காட்சிக்குப் பின்னால் தங்கள் உழைப்பையும், ஆராய்ச்சிகளையும், பொருட்களையும் வழங்கியிருக்கிறார்கள். இந்த அருங்காட்சியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் பணியைத் தமிழ் மரபு அறக்கட்டளை (THF) சிறப்பாகச் செய்து வருகிறது. இல்லாவிட்டால் மேட்ரிக்ஸ் உலகத்தில் கோமாவில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இப்படி ஒரு விஷயமே தெரிந்திருக்காது. ‘வாழ்க வளமுடன்’ என்று யாராவது வாழ்த்தும் போது எது வாழ்க்கை, எது வளம் என்று கேள்வி கேட்டு யோசிக்க ஆரம்பித்தால் அந்த வரியை வைத்துக் கொண்டு பிஎச்.டி. செய்ய வேண்டும். தமிழர்களுக்கு அந்தக் கேள்வி அவசியமில்லை. ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்’ என்று பாவேந்தர் முழங்கியது ஆழமான விஷயம். வாழ்க வளமுடன் என்பதற்குப் பதிலாகத் தமிழை வாழ வைத்தாலே போதுமானது. வாழ்வும் வளமும் தமிழுடன் வந்து சேரும். (முதல் பத்தியில் பிக்பாஸில் ஆரம்பித்தேன். பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருந்தால் அதில் கமலஹாசன் வரலாறு பற்றி சொல்லிய விஷயத்தைச் சிந்தியுங்கள்.)
ஜெர்மனியில் தமிழர் பெருமித கண்காட்சி- தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு! முதல்வர் வாழ்த்து!
ஸ்டுட்கார்ட் : ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வுப் பொருட்களின் கண்காட்சியை தமிழக தொழில்துறை, மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.இந்த கண்காட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் ஜெர்மனி தமிழ் அமைப்புக்கள் முன்முயற்சியில் அகம் புறம் என்ற 6 மாத கால கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது வாழ்த்து செய்தியை அனுப்பி இருந்தார். இந்த வாழ்த்துச் செய்தியை தமிழக அரசின் சுற்றுலாத்துறை செயலர் டாக்டர் சந்திரமோகன் வாசித்தார்.
ஸ்ட்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகம் மற்றும் சென்னை அருங்காட்சியகம்
இரண்டிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்ட்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகம் மற்றும் சென்னை அருங்காட்சியகம் இரண்டிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான சந்திப்பு கூட்டம் ஸ்ட்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் இரண்டு அருங்காட்சியகங்களுக்கு இடையே ஆக்கபூர்வமான செயல்பாடுகள் எவ்வகையில் அமையலாம் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது. இதன் அடிப்படையில் இரண்டு அருங்காட்சியங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜெர்மனி லண்டன் அருங்காட்சியகத்தின் இயக்குனர் டாக்டர் டி காஸ்ட்ரோ, தமிழ்நாடு அரசின் சுற்றுலா பண்பாடு அருங்காட்சியங்கள் மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் டாக்டர் சந்திரமோகன் ஐஏஎஸ் அவர்களும் கையெழுத்திட்டனர்.
தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சுபாஷினி ஒருங்கிணைப்பில் இச்சந்திப்பு கூட்ட நிகழ்வு நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைச் செயலாளர் கௌதம சன்னா, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் உறுப்பினர்கள் இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜெர்மனி மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு நாடுகளுக்கு இடையே வரலாறு மற்றும் ஆய்வுகள் தொடர்பான முயற்சிகளை ஆக்கபூர்வமான வகையில் முன்னெடுக்கும் எண்ணத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநில அமைச்சர் பெட்ரா ஓல்ஷோவ்ஸ்கி, ஜெர்மனிக்கான இந்திய தூதர் எஸ்.ஈ. ஹரிஷ் பர்வதனெனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில் தமிழகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், ஐரோப்பிய தமிழறிஞர்களின் தமிழ் கொடைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
686 total views, 3 views today