லண்டன் மாநகரில் ராகவீணாவின் அரங்கப்பிரவேசம்
- கலாசூரி திவ்யா சுஜேன்
முப்பது மாத வேள்வியின் பின் முழுநிலவென அரங்கேறிய ராகவீணாவின் ஆடலைக் கண்டு மகிழ்ந்து நெகிழ்ந்தவளாய் என் அனுபவப் பகிர்வை எழுதவும் விளைகிறேன்.லண்டன் மாநகரில் நடைபெற்ற முக்கிய அரங்கேற்றமாக பலரது ஏகோபித்த பாராட்டைப் பெற்றமைக்கு பல காரணங்கள் இருப்பினும் ஒருசிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்
1) பெற்றோர்
பிறந்து மொழி பயின்ற பின்னெலாம் காதல் என்பது போல் பிஞ்சுப் பாதம் மண் கொஞ்சிய போது முதல் ராகவீணாவை நாட்டியத்தோடு பயணிக்கச் செய்த பெற்றோரைப் பெற்றது பெரு வரம். சென்னை பரதகலாஞ்சலியில் அரங்கேற்றம் கண்டு , பரதநாட்டியத்தில் இளமானிப் பட்டமும் பெற்றுள்ள தாயார் நிறைஞ்சனா இன்று வரை கடந்த நான்கு தசாப்தங்களாக நாட்டியத்தைக் கற்றுக் கொண்டு இருக்குமளவு கலைமீது அளப்பரிய ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டுள்ளார். தன் மகளே உயிரென எண்ணி ஆவன செய்து அன்பும் அக்கறையும் சுதந்திரம் வழிகாட்டலும் தரும் நிறை தந்தை சுரேஸ்குமார்.
இவ்விருவரினதும் ஆத்ம தாகத்தின் விளைவால் ராகவீணாவை நற்குருவிடம் ஒப்படைந்தனர்.
பெற்றோராய் பெருங் கடன் ஆற்றினர்.
2) குரு
மீனாட்சி ரவி, குரு ஏ.P தனஞ்சயன் ஐயா, சாந்தா தனஞ்சயன் அம்மாவின் புகழ்பூத்த பரத கலாஞ்சலியின் சிரேஷ்ட மாணவர்களான ;,ஸ்ரீமதி,ஸ்ரீலதா வினோத், ஸ்ரீமதி புஷ்கலா கோபால் ,ஸ்ரீமதி ஷாலினி சிவசங்கர் போன்றோரிடம் சீராக நடனம் பயின்று, தேடலும், நேர்த்தியும், பண்பும் உள்ள ஆசிரியராக லண்டனில் பௌர்ணமி ஆட்ஸ் அக்கடமியில் நாட்டியம் கற்றுத் தருகிறார். தனது முதல் அரங்கேற்றமாக இருந்தாலும் தான் கற்றுக் கொண்டதைத் தவிர புதிய விடயங்களை உள்வாங்கும் துணிவும், தெளிவும், பரந்த மனமும் இருப்பதால் மார்க்க உருப்படிகளைச் சீராக அமைக்கும் முதற்கட்ட செயற்பாட்டிற்காய் என்னை இணைத்துக் கொண்டனர். அன்றிலிருந்து அரங்கேறும் வரை உடன் பயணிக்கும் வாய்ப்பும் கிட்டயதில் மகிழ்வே.
3) மார்க்க உருப்படிகள்
தமது குரு பாரம்பரியத்தை டிஜிட்டல் உலகக் குழந்தைக்கும் வழங்க வேண்டும் எனத் திண்ணம் கொண்டு பரதகலாஞ்சலி உருப்படிகளாக முதல் உருப்படி ( நடன பூஜை ), சப்தம் ( தண்டை முழங்க ),நிறைவு உருப்படி
( பேஹக் தில்லானா ) மூன்றும் சேர்க்கப்பட்டிருந்தது. மிகுதி உருப்படிகளுக்கு என் பணி ஆரம்பமானது.
“ பஞ்சமம் “வர்ஜ்ஜமாக உள்ள ராகங்களின் மீது ஏற்பட்ட திடீர் காதலால், ஹம்சவிநோதினி ராகத்தில் ஜதீஸ்வரம் அமைத்துத் தருமாறு அந்த இசைமேதையிடம் அன்புடன் அணுகினேன்.
தியாகராஜ சிஷ்ஷப் பரம்பரையில் ஐந்தாம் தலைமுறை கலைஞராக, சாகித்ய இசை வழங்கியதுடன், பல்வேறு தில்லானாக்களையும்,ஆடல் உருப்படிகளையும்,நாட்டிய உலகிற்கு தந்த லால்குடி இசை பாணியில், ராகவீணாவிற்காக அமைத்துத் தந்திருந்தார் சங்கீத கலாநிதி லால்குடி புதுசு கிருஷ்ணன் ஐயா.
முப்பெரும் தேவிகள் மீது வர்ணம் அமைய வேண்டும் என ஆசிரியை மீனாட்சி சிட்டைப்படுத்தித் தர, இயலாளமும், இசைவளமும், நாட்டிய உணர்வும் கொண்டமையும் உருப்படிகளைத் தந்து நாட்டிய இசைக்கு புது வடிவம் வழங்கிக் கொண்டிருக்கும் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கொள்ளுப் பெயரன் கலாநிதி ராஜ்குமார் பாரதி ஐயாவை அணுகினோம்.
ஐயாவின் இசைச்செறிவு இவ்வர்ணத்திலும் கதி பேத ஜதிகளாலும், மிக நுண்ணிய கமக பிரயோகங்களாலும், ஸ்வராக்ஷ்ர சிறப்புக்களாலும் ஸ்வர சேர்க்கைகளாலும்,குறிப்பாக மூன்று ஸ்தாயிகளையும் தொட்டு வரும் பேரழகாலும் வியப்பூட்டியது.
அதே போல யாழ்ப்பாணம் வீரமணி ஐயாவின் கல்யாண வசந்த மண்டபத்தில் பதத்தினை, நாட்டிய அமைப்பிற்கு ஏற்ப சுவைகூட்டி ரசமேற்றி ராஜ்குமார் பாரதி ஐயா வழங்கினார்.ஆயிரம் யானைகள் புடை சூழ, இந்திரன் முதல் வானவர் யாவரும் வரவேற்க, தோரணம் நாட்டி, பூரண பொற்குடம் வைத்து,மத்தளம் கொட்ட,வரிசங்கம் நின்றூத, சதிரிள மங்கையர் எதிர் கொண்டு நடமாட, நாராயணன் நம்மை வந்து ஆண்டு, செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி, அம்மி மிதித்து தீவலம் செய்யக் கனாக் கண்ட கோதை நாச்சியார் போல, பொன்னாலைப் பதி வாழும் வரதராஜனை எண்ணி நினைந்துருகும் நாயகியாக இப்பதத்தின் அபிநயத்தினை அமைக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
அபிநயஷேத்ராவின் மார்க்க உருப்படிகளில் அநேகரால் பாராட்டப்பட்ட “புதிய ஆத்திசூடி அலாரிப்பு”ராகவீணாவின் மார்க்கத்திலும் சேர்க்கப்பட்டு அபிநயஷேத்ராவையும் பாரதியையும் மகிழ்வித்தனர்.ராமனை பஜித்தால் கிருதியை ராகவீணாவிற்கு ஏற்றவிதத்தில் நெறியாள்கை செய்திருந்தார் ஆசிரியை மீனாட்சி. ஆக இம் மகான்களின் உருப்படிகளிற்கு நடனமாடியது பெரும் பயனும் சிறப்பும்.
- பேராதரவு
ராகவீணாவின் அரகேற்றத்தை மகா கோவிலாக மாற்றிட 4 தூண்களாக ஒரு புறம் அனுபவமிக்க குயிலுவக் கலைஞர்கள், மறு புறம் மஹான்களின் ஆசிகள், உருப்படிகள், மற்றொரு புறம் பெற்றோரும், குருவும் அவர்தம் குடும்பமும் நான்காவதாக மண்டபம் நிறைந்த மூத்த நடன ஆசிரியர்கள், கலைஞர்கள், ரசிகர்கள், நண்பர்கள்.
இவற்றை விட இங்கிலாந்திற்கான இலங்கை உயிர்ஸ்தானிகர் கௌரவ சரோஜா சிறிசேன அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.ஆங்கே என்னையும் இவ்வரங்கேற்றம் காண கௌரவ அதிதியாக அழைத்தமைக்கு பேரன்பும் நன்றிகளும்.ஆஹா, இத்தனையும் வரமாய் அமைய இந்நாட்டிய அரங்கேற்றம் வாழ் நாள் முழுவதும் இனிமை சேர்க்கும் என்பது திண்ணம்.என் குருநாதர் பத்மபூஷன் உ.எ சந்திரசேகர் ஐயாவின் பரிபூரண ஆசிகளும், எம்பெருமான் தில்லை கூத்தனின் அருளும் என்றும் ராகவீணாவிற்கு நிலைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தித்து வாழ்த்துகிறேன்.எல்லா உயிர்களும் இன்பம் எய்துக !
548 total views, 3 views today