யேர்மனியில் படைப்பாளர் நூல்வெளியீட்டு விழா

”எழுத்தின் வேரே மொழியின் உயிர்ப்பு காலத்தின் பதிவே வரலாற்றுச் சிறப்பு” என்னும் தூரநோக்குச்சிந்தையும் புலம்பெயர் வாழ்விடத் தேட்டமும் துலங்கும்தூரிகைகளே எழுத்தாளப் பெருந்தகைகள்
காலத்தின் வலிமைகருக்கொள்ள, புலத்தின் பொக்கிசமாக ஜேர்மனி டோட்மூன்ட் நகரில் 24,09,22 இருபெரும் கலைஞர்கள்,பலநூல்கள்,ஆலயப்பதிவுகளை சம்பவத்திரட்டாக காப்பரண் செய்யும் இரு படைப்பாளர்கள் இணைந்து 83 எழுத்தாளர்களின் சுயவிபரத்திரட்டினை சேகரித்து ”படைப்பாளர்கள்” என்னும் அரிய நூலினை வெளியீடு செய்து வைத்தார்கள்.

பல அறிஞர்கள்,கலைஞர்கள்,எழுத்தாளர்கள் சங்கமித்த அரங்காகவும்,இலக்கியத்தாகம் நிறைந்த மொழிப்புலமை பிரவாகிக்க வெளியீட்டு அரங்கம் வியாபித்திருந்தமை வெற்றிவெளியீட்டிற்குச் சான்றுரைத்தது. பல அறிஞர்கள், இலக்கிய வாதிகளின் தொகுப்புரைகள், விமர்சனங்கள்,வாழ்த்துரைகள் ஜேர்மனிய நாட்டில் கல்விகற்று பலதொழில்களில் புலமைபெற்ற இளைய சமூகத்தினர் உரையாற்றியமை இன்னொரு இணைவுப்பாலத்தை வலுவாக்கியது. ‘படைப்பாளர்’ நூலனாது கருத்தரித்து 30 திங்களிலே தனது பிரசவத்தை முழுமையாக்கிய பாரிய பணியைக் கொண்டது.

நூலின் முகப்பு அட்டைப்படம் கணனி தொழில்நுட்பவியாலாளர் கருக்கொள் சிந்தையின் செறிவை எம்முன் விரவிநிறைக்கிறது. ஆதிமனிதர் எழுத்தாணி, நூல்த்தேட்டம், புலத்தில் பதிவானது என்னும் அத்தாட்சி நிலைப்பட,நூலின் கனதி, தரமான காகிதங்கள்,ஒவ்வொரு எழுத்தாளர்களின் துறைசார் தகுதிகள் , சுயங்கள், எண்ணத்தின் திறவுகோல்கள் என அவர்களின் அட்டைப்படங்களுடன் பிரசுரமாகி இருப்பது கலைஞர்களை மேலும் ”செதுக்கி வடித்த சிற்பமாக” எம்மனக்கண்ணில் ஆழவேரூன்றி நிலைக்க வைக்கிறது.

இருபெரும் படைப்பாளர்கள் முன்னிற்க துணைசேர் கலைஞர்களாக பலரின் ஒத்துழைப்பு ”படைப்பாளர்” நூலின் மாபெரும் சேவையாக மிளிர்ந்துள்ளது; ஒன்றுதிரட்டல் , நெறிப்படுத்தல், சரிபார்த்தல், வடிவமைத்தல், நூலாக்கல் என எண்ணற்ற பணிகள் வலுப்பட்டே வெளியாகிய இந்நூல் காலத்தின் கருத்தரிப்பு, தேடற்கரிய பொக்கிசம், ஜேர்மனியில் புலத்தின் சான்றுரைக்கும் சம்பவத்திரட்டு எனில் மிகையாகாது.நீண்டநாள் உழைப்பின் படைப்பாளர் பிரசுரம் தடம்பதித்து, தமிழ்நிலைத்து உலகில் உலா வர ஒத்திசைந்த அத்துணை சேவையாளர் களுக்கும்முன்மொழிந்து முனைப்பாக்கி முத்திரைபதிக்க வைத்த திரு. பாக்கியநாதன் (B.A).தமிழ்மணி சி.இராஜகருணா அவர்களுக்கும் எம்தலை சாய்ந்து நன்றிகளையும் வாழ்த்துக்களையும் மனம் நிறைந்து சமர்ப்பிக்கிறோம். அளப்பெரும் பணியிது. ஆணிவேராகி அகிலத்தில் நிலைக்கும். சாலவும் சிறப்பு சரிதமாய் தொடரட்டும் முனைப்பு. 83 மலர்களுடன் எண்ணற்ற கலைஞர் குழாமுடன் திருமதி. வசந்தா ஜெகதீசன்

551 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *