உன்னையன்றி இன்பமுண்டோ?

  • Divya Sujan

உன்னையன்றி இன்ப முண்டோ
உலகமிசை வேறே!
பொன்னை வடிவென் றுடையாய்
புத்தமுதே,திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
மேடை யுயர்ந்த மாளிகைகள்
வன்ன முடைய தாமரைப் பூ
மணிக்குள முள்ள சோலைகளும்,
அன்ன நறு நெய் பாலும்
அதிசயமாத் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும்
நிலைத்திருப்பேன்,திருவே!

செயற்கரிய செய்யத் துணிந்த திகட சக்ர அமைப்பின் ” திருவடிக்கீழ் சொல்லிய பாட்டு ” என்னும் தொடர் நிகழ்வு பிரதி வெள்ளிக்கிழமைகளில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு வந்தது.
பக்தி இலக்கியங்களைச் சமகால இளம் மனங்களில் நிரப்பும் பெரும் நோக்கினோடும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திரவியங்களை பதிவாக்கிட வேண்டும் என்ற முனைப்போடும் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டு முத்தமிழ் படைப்பாக வெளிவந்தது. திருமுறைகளை பண்கொண்டு இசைக்க, அதன் பொருளுணர்ந்து கூறி, அபிநயமும் காட்டும் இப்படைப்பு 98 பாகங்களைத் தொட்டுவிட்டது.

இதன் 50 ஆவது அத்தியாயம் நிறை நறையென இன்பம் தந்து பார்வையாளர் மனங்களை ஈரப்படுத்தியதற்குப் பல காரணங்கள் உண்டு. 50 ஆவது பொன் அத்தியாயம் அல்லவா ? பொன்னென மின்னும் திருமகளைத் துதிக்கும் பாடல் மீது நாட்டம் வந்தது. அதிலும் பொன் என்ற சொற்சேர்க்கை இருந்தால் மேலும் சிறப்பெனப் பட்டது. ஐயன் பாரதி இருக்கப் பயம் ஏன் ?
பொன்னை வடிவென் றுடையாய்
புத்தமுதே,திருவே!

பாரதியின் இயலைப் பெற்றதால், இதற்கான இசையை அமைக்க பாரதியின் கொள்ளுப் பெயரன் ராஜ்குமார் பாரதி ஐயாவிலும் பிறிதோர் பொருத்தம் உண்டோ? அணுகினோம் அம்மகானை, இசை மட்டுமா பொன் விழா நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராகவும் வருகை தந்து பேரின்பம் தந்தார். 50 ஆவது அத்தியாயம் என்பதால் ஜனக ராகத்தில் 50 ஆவது ராகமான நாமநாராயணி ராகத்தில் இப்பாடலுக்கான இசை அமையவேண்டும் என்பது பக்தையென் விண்ணப்பமானது. நாமநாராயணி பெயரிலும் திருமகள் இருப்பது உச்ச பொருத்தம்.

இந்த ராகத்தை கையாள்வது எளிதல்ல.ஸ்வரங்களுக்கூடாக ராகத்தை அணுகாது இயலுக்கூடாக இசையை அணுகுவது ராஜ்குமார் பாரதி ஐயாவின் தனிச் சிறப்பு. இயற் சேவையை அறிந்து அதன் ரசத்தின் சாரத்தில் ராகத்தை தெளிப்பவர். பாரதி உதிரம் அல்லவா, மொழிப் பிரதானமும் ரசசேர்க்கையும் இசையும் அவர் பிறப்பின் பரிசு.
பீடுடைய வான் பொருளே,பெருங் களியே,சுடர் மணியே,புத்தமுதே,மெத்த மையல் கொண்டு விட்டேன் மேவிடுவாய், நின்னருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன், உன்னையன்றி இன்ப முண்டோ உலகமிசை வேறே? என்று திருமகள் மீது அதி காதல் கொண்டவராய் உணர்வூறுகிறார்.

மின்னொளி தருநன் மணிகள், மேடையுயர்ந்த மாளிகைகள், வன்ன முடைய தாமரைப் பூ,மணிக்குளமுள்ள சோலைகளும்,அன்ன நறு நெய் பாலும், ஆடுகளும் மாடுகளும்,அழகுடைய பரியும்,வீடுகளும் நெடுநிலமும் வேண்டுகிறார்.இவர் வேண்டிய ஒவ்வொரு பொருளுக்குள்ளும் உள்ள பெரும் உண்மையை விரித்துச் சொல்ல முயன்றால் கட்டுரை நீளும். ஒன்று மட்டும் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகிறது. பாரதி சாமானியல்ல. அவதாரம்.
உனக்கு ஈடாக எந்த தெய்வம் உண்டு? உன்னை விட்டால் எனக்கு யார் கதி ? என இறைஞ்சி கேட்கும் வரிகளில் சொட்டும் ரஸ விஸ்தாரம் மிக உச்சம். இப்பாடலை படிக்கும் போது எமக்குள்ள உணர்வு நிலைக்கேற்ப அதன் ரசம் மாறுபடும் வண்ணம் விசால பொருள் பொதிந்திருக்கிறது. இது தான் பாரதி பாடல்கள் தரும் சுதந்திரமும் கூட.
பக்தி வேறு காதல் வேறு என்ற பேதமைகளைத் தகர்த்தெறிகிறது. பக்தி மார்கத்தினூடாக சமத்துவம் வேண்டிய காரைக்கால் அம்மை போல, காதலினூடாக ஐக்கியமாகிய ஆண்டாளைப் போல அனைத்துமே ஒன்றாகி எல்லை கடந்த காதல் பக்தியைக் காட்டி நிற்கிறது இப்பாடல்.

திருஞான சம்பந்தர் குறிப்பிட்ட ” காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ” என்பதும் இவ்வகை ஒத்ததே. காதலால் கண்ணீர் மல்குதல் என்னும் நிலையை கண்டார்,அமர வாழ்வு எய்துவர் என்பது திண்ணம். அந்த கண்ணீரின் தன்மையை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே இப்பொருள் புரியும். அது வெறும் கண்ணீர் அல்ல, உயிர் நீர். உயிர் கசிந்து விழி வழி வழியும் தேவ நீர். அக்காலத்தில் நம் பழந்தமிழ் கற்றுத் தந்த நற்க்காதலை இக்காலத்திலும் எம்மால் உணர்ந்தனுபவிக்க முடியுமெனில், எத்தனை கோடி இன்பம் கொண்டோராய் இருப்போம்?
வாழ்தல் இனிது. காதல் மிக இனிது.
நித்தமுனை வேண்டி மனம்
நினைப்ப தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப்போல் வாழ்வதிலே
பெருமையுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்
செய்கை யெல்லாம் வெற்றி கொண்டே
உத்தமநிலை சேர்வ ரென்றே
உயர்ந்த வேதமுரைப்ப தெல்லாம்,
சுத்த வெறும் பொய்யோடீ?
சுடர் மணியே!திருவே!
மெத்த மையல் கொண்டு விட்டேன்
மேவிடுவாய்,திருவே!

572 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *