சில நேரத்து மௌனங்கள்! ஆயிரம் ஈட்டிகளின் வலியை விட!! வலியானது!!!
காககத்தை கல்லால் எறிந்து கலைத்துவிட்டு
இப்போ! கா!! கா!!! காவாம்.
-மாதவி.
புரட்டாதிச் சனி, ஒரு நாள், (ஒரு நேர) விருந்தினராக ஊரில் காகங்களுக்கு அழைப்பு விடப்படும். கோவில்களில் எள்ளெண்ணை எரித்துவிட்டு வீடு வந்து காகத்திற்கு சோறு வைத்து, அது உண்டபின் தாமும் உண்ணுவர்.
காகமும் மனிதர்களின் கல்லெறிகளை மறந்து, அவர்கள் வைத்த உணவை தான் மட்டும், உண்ணாமல் தன்னினத்தையும் அழைத்து சேர்ந்தே உண்ணும். அந்தக் காட்சியைப் பார்த்து சிறிது வெட்கம் மனிதனுக்கு வந்தாலும், அதனையும் சுதாகரித்துக்கொண்டு, தன் இயல்புக்கு திரும்பிவிடுவான்.
புரட்டாதிச் சனி அன்று, ஆலயங்களில் அன்னதானம் வழங்கப்படும், ஊரில் என்றால் அது அன்று, உண்ண வசதியற்றவர்களுக்கு மட்டும் முதலிடம் கொடுத்து, பின் யாவரும் உண்பார்கள்.
புலம் பெயர்ந்து வாழ்கின்ற வசதிபடைத்த நம்மவர்களுக்கும், ஆலயங்களில் அன்னதானம் இங்கு வழங்கப்படுகின்றது. விரத நாட்களில், அவர்கள் வீட்டில் சைவ முறைப்படி சமைத்து, உண்ண வசதியில்லாமல் இருக்கலாம், முதியவர்களாக இருக்கலாம், வேலையில் நின்று நேராக வீடு சென்று ஆலயத்திற்கு வருபவர்களாக இருக்கலாம்.
ஏன் அவர்கள் பெரும் செல்வந்தர்களாகவும் இருக்கலாம், அவர்கள் ஒரு கவளம் சோறு என்றாலும் ஆலயத்தில் உண்ண விரும்புவார்கள்.
ஒரு புரட்டாதி சனி விரதநாள் ஆலயத்தில் எள்ளெண்ணை எரித்து விட்டு, கையிலே ஏந்திய உணவை சில முதியவர்கள் அருகில் போடப்பட்டு இருந்த மேசையில் இருந்து உண்டார்கள்.
இருந்தவர்கள் பலர் நிலத்தில் இருந்தால் தனித்து எழமுடியாமவர்கள். ஆனால் யாவரும் வசதி படைத்தவர்கள்.
காகங்கள் வழமையான நாட்களில் உணவைக் கொத்தி உண்ண வாய் வைக்கும் போது, கல்லடி விழுமே, அதேபோல் ஒரு சொல்லடி அங்கு விழுந்தது.
மேசையில் இருந்து எல்லோரும் எழுப்பவும், கிட்டத்தட்ட தமிழ் தெரிந்த ஒரு ஆமிக்காரன் குரல் போல் இருந்தது.
மேசையில் இருந்து உணவுண்ட முதியவர்கள் எல்லோரும் எழும்பி நின்று, கையில் வைத்து சாப்பிட்டனர். சிலர் ஒரு கையில் தண்ணீர்க் கோப்பை, ஒரு கையில் உணவு. இன்னுமொரு கையை தேட முடியாது, உண்ண முடியாது, தவித்தனர்.
இந்த மேசையும், வாங்கு உங்கள்; பாவனைக்கு அல்ல, என்று முதியவர்களை எழுப்பிவிட்டு, ஏனைய ஆலய தொண்டர்களை பேசுவது போல்,முதியவர்களை பேசிக்கொண்டு,சென்றார். முதியவர்கள் வெட்கப் பட்டார்கள். தமது செயலுக்காக அல்ல.அவர்களை எழுப்பியவரது செயலுக்காக. நடந்த இடம் ஒரு உணவு விடுதி அல்ல. அது ஒரு ஆலயம்.
உரக்கப் பேசியது யார் அவர் என்று பார்த்தபோது, அவர் ஆலய நிர்வாகிகளில் ஒருவர்தான். இது புலம் பெயர்ந்த நாடுகளில் அமைந்த ஆலயங்களில் இது நடக்கவில்லை. ஆனால் நாளை நடக்கலாம்.
உண்ணும் ஒருவரை இடையில் எழுப்புவது எமது பண்பாட்டுக்கு முரனானது. ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும், ஒரு பணக்காரனாக இருந்தாலும் இது நாகரீகம் அல்ல.தாயகத்தில் எவரும் உண்ணும்போதும், உறங்கும்போது ஏன் எதிரியாயினும் பேசுவதில்லை.திட்டித்தீர்ப்பதும் இல்லை. அப்படி வளர்ந்த ஒரு சமூகம்..
அன்னதானம் என்பது பிச்சைக்காரனுக்கு உணவு கொடுப்பதாக எண்ணும் மன நிலையே சிலரிடத்தில் உள்ளது.
முதல் சனி வயதானவர்களை எழுப்பிவிட்டு வீட்டுக்கு போனவருக்கு இரண்டாவது புரட்டாதி சனி அன்று வீட்டில் உண்ண முடியாது தவித்துக்கொண்டு இருப்பதைக் காணமுடிந்தது. ஒரு காகமும் அவர் வைத்த உணவை, உண்ணத்தயாரக இல்லை. வேலி பொட்டுக்குள்ளால், நுழைந்து நுழைந்து அடுத்த வீட்டுக்காகங்களையும், கெஞ்சுகிறார். எனக்கு காககத்தை பார்க்க தன்மானம் உள்ள காகம் போல் தெரிந்தது.
நான் கண்ட காட்சி நாளை நீங்கள் செல்லும் இடங்களிலும் காணலாம். கண்டால் நீங்களும் அந்த தன்மானம் உள்ள காகமாகுங்கள். அல்லது அவர் நாண நன்னையம் செய்துவிடுங்கள்.
ஆனால் அவருக்கு ஏதோவிதத்தில் ஒரு செய்தி சொல்லுங்கள்.
சில நேரத்து மௌனங்கள் ஆயிரம் சொற்கள் விட வலிமையானது. சில நேரத்து மௌனங்கள் ஆயிரம் ஈட்டிகளின் வலியை விட வலியானது.
677 total views, 3 views today