நாம் சேர்த்து வைக்கும் ஆவணங்களுக்கு என்னாகும்?
- சேவியர்
நண்பர் ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அவரது தந்தையின் பொழுதுபோக்கைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவரது தந்தை பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தவர். அவருடைய வாழ்க்கையில் பெரும்பாலான பகுதியை வாசிப்புக்காகவே உயில் எழுதி வைத்தவர். அவரது வீட்டில் எங்கெல்லாம் அவர் உலவுகிறாரோ அங்கெல்லாம் சில புத்தகங்கள் தவறாமல் இருக்கும். எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்போதெல்லாம் அதை எடுத்து வாசிப்பார். குறைந்த பட்சம் நூறு பக்கங்களையாவது வாசிக்காமல் அவர் தூங்குவதே இல்லை.
நூல்களைக் குழந்தைகளைப் போலப் பாவிப்பார். மெதுவாகக் கையாள்வார், மென்மையாய் தடவிக் கொடுப்பார். மிக நேர்த்தியாய் அடுக்கிவைப்பார். அடிக்கடி எடுத்து துடைத்து, தூய்மைப்படுத்தி வைப்பார். அவற்றைப் பார்வையாலேயே நேசிப்பார்.
அபூர்வமான நூல்களைத் தேடி பயணிப்பார். சில நூல்களுக்காக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் கூட பயணித்திருக்கிறார். சில நூல்களுக்காக தனது நிலத்தில் இருந்த மரங்களையெல்லாம் வெட்டி விற்றிருக்கிறார். சில நூல்களுக்காக பலரிடம் கெஞ்சிக் கூத்தாடியிருக்கிறார்.
நூல்களின் மீதான அவரது வேட்கை, கேட்கக் கேட்க மகிழ்ச்சியாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. கடைசியாக அவர் சொன்ன வார்த்தை தான் தூக்கி வாரிப் போட்டது.
‘அப்பா இறந்து சில வருஷம் வரைக்கும் அவர் ஞாபகார்த்தமா அந்த புத்தகங்களை எல்லாம் வெச்சிருந்தோம். எனக்கு வாசிக்கிற பழக்கம் இல்லை. என் பிள்ளைகள் ஆங்கில புத்தகம்தான் தான் படிக்கிறாங்க. இடம் அடச்சுட்டே இருந்துச்சு. என்ன பண்றதுன்னே தெரியல. அப்பாவோட ஹாபி எங்களோட தலைவலியா போச்சு. கடைசில போன வாரம் தான் அதையெல்லாம் பேப்பர் கடைக்கு போட்டேன்’ என்றார்.
வாட்…. எல்லாத்தையும் வித்துட்டியா ?
ஆமா, கிட்டத்தட்ட மூவாயிரம் புத்தகங்கள் இருந்துச்சு. பழைய பேப்பர் கடையில போட்டேன். நல்ல ஒரு தொகை கிடைத்தது. பையனுக்கு நாலஞ்சு உடுப்புகள்; எடுத்தேன் என்றார்.
தந்தையார் தவமாய்த் தவமிருந்து வாசித்து, நேசித்து, சேகரித்த நூல்கள் ஏதோ ஒரு காகிதக் கடையில் குப்பையோடு குப்பையாய் குவிந்து கிடப்பதை நினைக்க மனம் வலித்தது. தந்தையின் கனவுகள் தந்தையின் பிரிவோடு காலொடிந்த பறவையாய் விழுந்து கிடந்ததை மனம் உணர்ந்தது.
நாம் இன்றைக்கு ஆசை ஆசையாய் சேமித்து வைக்கின்ற ஆவணங்களுக்கு நாளை என்ன நேரும் ? இந்தக் கேள்வியே நமது மன வெளியில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கக் கூடியது. நாம் சேமிக்கும்போது காலா காலமாக அது நிலைபெறும் எனும் சிந்தனையில் சேமிக்கிறோம். ஆனால் உண்மை என்ன ?
சிலர் ஓவியங்களைத் தேடித் தேடி சேமிக்கின்றனர், சிலருக்கு பழைய சிலைகள், சிலருக்கு ரூபாய் நோட்டுகள், சிலருக்கு நூல்கள், சிலருக்கு வரலாற்றுத் தடையங்கள். எல்லாமே அடுத்த தலைமுறைக்கு அவசியமாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. எத்தனையோ வீடுகளில், எத்தனையோ மனிதர்களின் மரணத்தோடு அவர்களுடைய பொக்கிஷங்களெல்லாம் தேவையற்றவைகளாகிவிடுகின்றன.
ஒவ்வொருவருடைய சேமிப்பும் அவருடைய கனவுகளின் துளிகள்
ஒவ்வொருவருடைய சேமிப்பும் அவருடைய கனவுகளின் துளிகள், அவர்களிடைய ஆசைகளின் பதிவுகள், அவர்களுடைய தேடல்களின் தடயங்கள், அவர்களுடைய சாதனைகளின் உச்சரிப்புகள். ஆனால் அவை எல்லாமே ஒரு வாழ்க்கை முடிந்தவுடன் முடிந்து போகிறது. கொஞ்ச நாள் அந்த நினைவுகளின் நீட்சி மனிதர்களுக்கு தேவையாய் இருக்கிறது. அதன் பின் அவை ஆறாவது விரல் போல அவசியமற்றுத் தொங்குகின்றன.
எல்லோருமே அவர்களுடைய ஆவணங்கள் காலங்களைக் கடந்து அவர்களுடைய பெயரைச் சொல்ல வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஆனால் எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. சிலருடைய ஆவணங்கள் சரியான இடத்தில் சேர்ந்து சில தலைமுறைகள் தாக்குப் பிடிக்கின்றன. ஆனால் மற்றவர்களுடைய வாழ்நாள் சேமிப்புகளெல்லாம் சிதிலமடைந்து போகின்றன.
அப்படி காலங்களைக் கடந்து நிலைக்க வேண்டுமெனில் நாம் சில சிறப்பான ஆவணங்களைச் சேமிக்கலாம். உதாரணமாக, மனித நேயத்தைச் சேமிக்கலாம். அன்பின் இழைகளினால் நாம் இந்த வாழ்க்கையில் செய்கின்ற நல்ல செயல்கள் நமக்காய் விண்ணகத்தில் ஒரு இருக்கையை உருவாக்கும். இந்த உலகில் ஏராளமான மனிதர்களின் இதயத்தில் நமது பெயர் அன்பின் தூரிகையால் வரைந்து வைக்கப்படும்.
அன்னை தெரசா சேமித்த ஆவணம் என்பது அன்பின் செயல்கள் தானே !. அந்த செயல்கள் அவரது பயணத்தின் பாதைகளெங்கும் நிரம்பியிருக்கின்றன. அவை காலத்தால் அழிவதில்லை. அவை இதயங்களிலிருந்து இதயங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த உலகில் அன்பின் ஆவணம் வேண்டாம் எனும் ஆணவம் இதுவரை யாருக்கும் வரவில்லை. ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு அன்பை எதிர்பார்ப்பவர்களாகவே எல்லோரும் இருக்கிறோம்.
இல்லையேல் அறிவின் பகிர்தலை நிகழ்த்தலாம். அன்பைப் போலவே அறிவும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறி மாறி பயணித்துக் கொண்டே இருக்கும். கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை போல அறிவின் பதிவுகள் ஒருவரை விட்டு ஒருவருக்குத் தாவி சென்று கொண்டே இருக்கும். அத்தகைய அறிவின் இழைகளை சேமிக்கலாம். அறிவின் இழைகளை அடுத்தவரின் சிந்தனைகளில் சேமித்து வைக்கலாம்.
அது காலத்தால் சேதமடைவதில்லை. வருடங்களால் திருடப்படுவதில்லை. அவற்றுக்கு வயதானாலும் இறந்து விடுவதில்லை. தேவையில்லை என யாரும் உதறிவிடுவதும் இல்லை.
நாம் சேமிக்கின்ற பொருட்கள் நாளை பயனற்றதாய் இருக்குமா, பயனுடையதாய் இருக்குமா என்பதை நாம் எதை சேமிக்கிறோம் என்பதே முடிவு செய்யும். இவ்வுலகின் ஆசைக்கானவற்றைச் சேமித்தால் அவை பிற்காலத்தில் பயனற்றதாகலாம். இவ்வுலக மனிதர்களின் தேவைக்கானவற்றைச் சேமித்தால் அவை காலம் காலமாய் நிலைக்கலாம்.
அன்பைச் சேமிப்போம், மனிதத்தைச் சேமிப்போம், உறவுகளைச் சேமிப்போம். நாம் சேமிப்பவை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
வாழையடி வாழையாய் நாளைகளைத் தாண்டியும் அவை வாழ்ந்து கொண்டே இருக்கும்.
845 total views, 3 views today