தேவரடியார் சமூகத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள்!

-கவிதா லட்சுமி. நோர்வே
2017 இல் கும்பகோணத்தில் வாழ்ந்துவரும் தேவரடியார்களான ஜீவரத்தனமாலா சகோரதரிகளைச் சந்தித்த பின் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றேன்.
தேவரடியார் சமூகத்தைச் சேர்ந்த நடனக்கலைஞரான முத்துக்கண்ணம்மாளோடு ஒரு நாள் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
விராலிமலையில் வசித்துவரும் முத்துக்கண்ணம்மாள் ஆறுமாதங்களுக்கு முன்பு பத்மஸ்ரீ விருதினைப் பெற்றமை பலரும் அறிந்ததே. பலர் அறியாத அல்லது பலரும் அறிந்து கொள்ளவிரும்பாத, கடந்து போகின்ற பல விடயங்களை கண்ணம்மாள் பகிர்ந்து கொண்டார். நானும் அவற்றை பிரிதொரு நாளில் விரிவாகப் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
84 வயதினைக் கடந்துவிட்ட கண்ணம்மாள் இப்போதும் தான் கற்ற பல நடனங்களை நினைவு வைத்திருப்பது மட்டுமல்லாமல் அதை பலருக்கும் கற்றுக் கொடுப்பதில் பேரானந்தம் கொண்டிருக்கின்றார். அவரிடம் சில நடனங்களையும் சில பாடல் வடிவங்களையும் அறிந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி.
விராலிமலையில் இருந்து சிறுதொலைவில் இருக்கும் மூவர் கோவிலுக்குச் சென்றோம். வெயில் அதிகம் என்றாலும் சளைக்காமல் தனது கம்பீரமான குரலிலும் கை அசைவுகளிலும் பல நடனங்களை ஆடிக்காட்டினார்.
‘எல்லாரும் என்னிடம் படித்துவிட்டு மேடையில் ஆடும் போது ராகத்தை அடவுகளை மாற்றி விடுகின்றனர். நீ எதையும் மாற்றிவிடாது விராலிமலைப் பாடல்களை ஆடிக்காட்ட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். சரி அம்மா என்றேன்.
‘சதிர்’ என்பதும் ‘பரதம்’ என்பதும் வேறு
மீண்டும் எப்போது வருவாய் என்றார். வரும்போது என்னை மீண்டும் வந்து பார்க்கவேண்டும் என்றும் தொலைபேசியிற் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆசீர்வதித்தார். எனக்கிருந்த சில சந்தேகங்களைக் கேட்டறிந்தேன். புதிய பல நடனம் சார்ந்த சொற்களையும் அறிந்து கொண்டேன். ‘சதிர்’ என்பதும் ‘பரதம்’ என்பதும் வேறு என்று அவர் நம்பும்படி செய்திருந்த காரணிகளையும் அவதானிக்க முடிந்தது. மனது பாரமானது.
விராலிமலைத் தேவரடியார் சமூகத்தின் கடைசி மனுஷியாக வாழும் முத்துக் கண்ணம்மாளைக் கண்ட உவகையும், அவர் மனச்சுமைகள் தந்த வலியையும் ஒருசேரப் பெற்ற பயணம், விராலிமலை.
விரிவான பதிவு விரைவில்.