அமெரிக்கர்களோ பேய்களுக்காக ஒரு திருவிழாவையே கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள்.


மூட நம்பிக்கைகளுக்கு நாம் மட்டும்தான் சொந்தக்காரர் என்று
இனி எவரும் மார்பு தட்டவேண்டாம்.
பிரியா.இராமநாதன்.இலங்கை.

நாமெல்லாம் கடவுள்களுக்காக விழா எடுப்போம், திருவிழா கொண்டாடுவோம். ஆனால் அமெரிக்கர்களோ பேய்களுக்காக ஒரு திருவிழாவையே கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள். அதுதான் ஹாலோவீன் ! பேய்களைப் பற்றிய பயம் உலகெங்கும் உள்ளது. இறந்துபோனவர்களின் ஆன்மாக்கள், திருப்தியடையாமல் உலவிவந்தால், அவை மனிதர்களைத் தாக்கும் என்ற நம்பிக்கை, எல்லா நாடுகளிலும் எல்லா மனிதர்களிடையேயும் இருந்துவருகிறது. இனம், மொழி, நாடு, படித்தவர், படிக்காதவர் என எந்த வித்தியாசமும் இன்றி பேய்களைப் பற்றிய பயம் இருந்துவருகிறது.அந்தவகையில், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31 ஹாலோவீன் தினமாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கொண்டாடி வருகின்றன.
பேய்களை விழா கொண்டாடி மகிழ்வைத்தால், தங்களுக்கு எந்த விதமான கெட்டதையும் அவை செய்யாது என்பது மேற்கத்தியவர்களின் நம்பிக்கை. முதன்முதலில் இந்தப் பேய்களின் தினம் அயர்லாந்தில் அகாலமாக உயிர் நீத்த புனிதத் துறவிகளின் நினைவாகவே ரோமன் கத்தோலிக்கர்களால் பிப்ரவரி 21,மே13 திகதிகளில் கொண்டாடப்பட்டது. பின்னர், அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் இந்நாள் அக்டோபர் 31-ம் தேதியானது.

பூச்சாண்டிகள் தினம் என்று வர்ணிக்கப்படும் இந்த நாளில், ஆரம்பத்தில் உருளைக் கிழங்கை வெட்டி, அதன் உள்ளே மெழுகுவர்த்தியை வைத்து, மந்திரித்து,பேய்களை விரட்டினர். பின்னர், பெரிய பரங்கிக் காய்களை வெட்டி, பயங்கரமாக அலங்கரித்து, அதை வீட்டுக்கு வெளியே வைத்துப் பேய்களைத் துரத்த ஆரம்பித்தனர்.காலவோட்டத்தில் ,இந்த ஹாலோவீன் தினம் பயங்கரமான கற்பனை திறன்களால் காய்ந்த சருகுகள், எலும்புக்கூடுகள், சூனியக்கார பொம்மைகள், பிரமாண்ட சிலந்திகள், ஓநாய் பொம்மைகள் எனப் பலவிதமான உருவங்களைக்கொண்டு படு திகிலாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவின் 16 மாநிலங்களிழும் உள்ள ஹாலோவீன் அருங்காட்சியகங்களில் உள்ள உருவங்கள், இந்த நாளில் வீதிகளில் உலா வரத்தொடங்கிவிடுமாம் . இந்த நாளின் இரவு முழுக்க விதவிதமான பேய்களின் அலங்கார அணிவகுப்புகள், காண்பவரை மிரளச்செய்யும். பேய்களின் முகமூடியை அணிந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் சாலையெங்கும் திரிந்து பீதியைக் கிளம்புவைத்து மட்டுமன்றி, இன்றெல்லாம் சிறுவர்கள் ரசிக்கும் கார்ட்டூன்களில்கூட இந்த ஹாலோவீன் அதிகப்படியாக காட்டப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.(இதனாலேயே பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியிடப்படுகின்றனவாம்)

திருமணம் ஆகாத பெண்கள் ஒரு இருட்டான அறையில் ஆலோவீன் வெளிச்சத்தில் உட்கார்ந்து கண்ணாடியைப் பார்த்தால் எதிர்கால கணவனின் உருவம் கண்ணாடியில் தெரியும் என்றும் திருமணத்திற்கு முன்பாக வருங்கால கணவன் இறக்க நேரிடின் ஒரு மண்டையோடு கண்ணாடியில் தோன்றும் என்பதும் அமெரிக்கர்கள் பலரது பழங்கால நம்பிக்கைகளில் ஓன்று .

“கேல்” நாகரிகத்தின் அறுவடைக் காலங்களில் உருவானதாக நம்பப்படும் இந்தவிழா, அறுவடை செய்து வைத்திருக்கும் பொருட்களை பேய்கள் அழித்து விடாமல் இருப்பதற்காக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டதாக கூறப்படுகின்றது . அறுவடை செய்த பொருட்களை குவித்து வைத்து பக்கத்திலேயே சிறிய அளவில் நெருப்பு மூட்டி வைத்து பேய்கள், பிசாசுகள், சூனியக்காரிகள் போல பலரும் வேடமணிந்துக்கொண்டு அன்றைய நாளில் தங்களது முன்னோர்களின் ஆவிகளுக்கு மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர்.( தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்வதை வழக்கமாகக்கொண்டுள்ளனர்) .

எரிகின்ற நெருப்பில் அகற்றப்பட வேண்டிய பொருட்கள் இடப்படுகின்றன. பல்வேறு வகையான ஆடைகளும் மூகமூடிகளும் கெட்ட ஆவிகள் செய்வதைப் போல கிழிக்கப்படுகின்றன. அல்லது அவ்வாறு செய்வதன்மூலம் கெட்ட ஆவிகள் சமாதானமடை வதாக நம்பினர் பலர். மூட நம்பிக்கைகளுக்கு நாம் மட்டும்தான் சொந்தக்காரர் என்று இனி எவரும் மார்புதட்டவேண்டாம்.

884 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *