மலையக மக்களின் 200 வது வருடமும் அறிவு முதலீடும்.
- பாலேந்திரன் பிரதாரிணி. இலங்கை
மலையக மக்களின் 200வது வருடத்தை முன்னிட்டு மலையக புத்திஜீவிகளால் பல முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. அதில் ஒன்றாக அக்டோபர் மாதம் 07,08,09 ஆகிய மூன்று நாட்கள் மகாவலி ரீச் ஓட்டலில் ஆய்வுக் கருத்தரங்கம் ஒன்றை பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ் (இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் பேராசிரியர்) மற்றும் கலாநிதி இரா. ரமேஷ் (அரசியல் விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனை பல்கலைக்கழகம்) ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
தெரிவுசெய்யப்பட்ட கல்விசார் சமூகம்சார் செயற்பாட்டாளர்கள் 30 பேரை இணைத்து புலமைசார் அறிவுஜீவிகளான பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ் (இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் பேராசிரியர்), கலாநிதி இரா. ரமேஷ் (அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனை பல்கலைக்கழகம்), திரு பி.முத்துலிங்கம் (சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (ISD) நிறைவேற்றுப் பணிப்பாளர்), திரு.கௌத்தமன் (சட்டத்தரணி சிவில் சமூகச் செயற்பாட்டாளர்), என்.வாமதேவன் (தோட்ட வீடமைப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்), திரு.பி.ஏ.காதர் (சமூக அரசியல் செயற்பாட்டாளர்), பேராசிரியர் ஆர்.சேனாதிராஜா (கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதியியல் துறை), கலாநிதி எஸ்.கருணாகரன் (தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்) ,கலாநிதி எஸ். கே. நவரட்னராஜா (பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் துறையின் விரிவுரையாளர்), திருமதி எஸ். வசந்தகுமாரி (கிழக்கு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்), கலாநிதி என்.மொராயஸ் (திறந்த பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் பேராசிரியர்) , கலாநிதி எஸ்.பத்மநேசன் (திறந்த பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் பீடாதிபதி), பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன் (பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புவியியல் துறை), திருமதி. சோபனாதேவி ராஜேந்திரன் (பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் விரிவுரையாளர்) போன்றவர்களால் ஆய்வு முறையியல் சார்ந்த ஆழமான விரிவுரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வுக்கு பாரிய செலவினை மார்ல்போ நிறுவனத்தின் உரிமையாளர் திரு. மணிமுத்து அவர்கள் பொறுப்பேற்றார். அத்துடன் சமூக அபிவிருத்தி நிறுவனம் (ISD)பங்குபற்றுனர்களுக்கான எழுத்து உபகரணங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.
மேலும் 200வது வருட பூர்த்தியில் மலையகக் கல்வி நிலையில் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் அதன் வளர்ச்சி வேகத்தில் பாரிய தடைகளும் சிக்கல்களும் தவிர்க்க முடியாதவையாகவுள்ள இந்த சூழ்நிலையில் ஆய்வுகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் பற்றாக்குறையாக உள்ளது. இலங்கையின் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறான செயலமர்வுகளையும் கலந்துரையாடல்களையும் அமைப்பது பாரிய சவாலான விடயமாகும். இந்த ஆய்வு செயலமர்வும் நிதி பற்றாக்குறை காரணமாக சில கால பின்னடைவின் பின்னரே அரங்கேற்றப்பட்டது. மாணவர்களுக்கும் ஆய்வுத் துறைகளில் சாதிக்க விரும்புபவர்களுக்கும் பொருளாதார நிலைமையே பாரிய தடையாக இருக்கின்றது.
அறிவுஜீவிகளை ஊக்குவிக்கும் தேவை இன்றியமையாதச் சூழலில் சமூகஆர்வலர்களின் பொருளாதார ரீதியிலான முன்வருகையென்பது மிக அவசியமாகின்றது. இவ்வாறான சூழலிலும் மலையக மக்களின் இருநூறாவது வருட பூர்த்தியை முன்னிட்டு தமிழில் ஆய்வு நூலும் புத்திஜீவிகளினால் ஆங்கில மொழியிலும் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூல்கள் தொகுக்கப்படயுள்ளது. ஆய்வுத் துறையை மேம்படுத்த வேண்டிய அவசியத்தின் புரிதலுடன் பண்பாடு அரசியல் வாழ்வியல் நிலைமைகளின் தனித்துவம் என்பதற்கப்பால் ஆவணப்படுத்தலும் ஆர்வலர்களை ஆய்வுத்துறையில் பயணிக்க வைத்தலுமே இங்கு முக்கிய தேவையாகும். இம்முயற்சிகள் இருத்தல் சார்ந்தவையாகும்.
944 total views, 2 views today