என் பெயர்,அம்மா,அப்பா,தம்பி தங்கை பெயரில் ஒரு அர்ச்சனை!
-மாதவி
இங்கிலாந்தில் லிவர்பூல் நகரில் எங்கள் இனிய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது அவர்களின், வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பல அறிஞர்கள் பேசினார்கள். அப்துல் ஹமீத் அவர்களும் உரையாற்றினார். 1970 களில் 18,20 வயதை அடைந்தவர்களுக்கு அவரது குரலை வானொலியில் கேட்டு இருக்கவாய்ப்பு இருக்கும், மற்றவர்கள் தொலைக் காட்சியில் பார்த்து கேட்டு மகிழ்ந்து இருப்பார்கள்.
சொற்களின் உச்சரிப்பு, வசனங்களுக்கு இடையிலான, இடைவெளி, சொல்லும் விடையங்களின் தரவுகள் சரியானதா என்பது போன்ற விடையங்களில் அதிகம் கவனம் செலுத்துபவர். மருத்துவ தகவலாக இருந்தால், மேடையிலேயே ஒரு மருத்துவர் இருந்தால் தான் சொல்வது சரியா என பேச்சின் நடுவே கேட்டும் வைப்பார். இவையாவும் இன்றும் எவரும் விரும்பும்வண்ணம் அவரைச் செதுக்கியுள்ளது எனலாம்.
விழா முடிவில் அவரது புத்தகம் விற்பனையானது, அதனை வேண்டியவர்கள் படம் முடிந்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு முன்பு எப்படி ஒடுவோமோ, இதுபோல் அன்றி யாவரும் அவரை மொய்த்த வண்ணம் இருந்தனர்.
அவர்கள் பெற்ற புத்தகத்தில் அவரது கையொப்பம் பெறவே சுற்றி நின்றனர். அவரும் கையொப்பம் சாதாரணமாக
அன்புடன் அப்துல் ஹமீத் என்று போட்டு இருக்கலாம். ஆனால் அவர் ஒவ்வொருவரது பெயரையும் கேட்டு கேட்டு, கையொப்பம் இட்டார். பலர் தமது பெயரையும், சிலர் தமது அப்பா, அம்மா, பெயரையும் சொல்லி கையொப்பம் பெற்றனர். ஒரு அர்ச்சகர் ஆலயத்தில் ஒவ்வொருவரது பெயரையும் கேட்டு கேட்டு அர்ச்சனை செய்வதுபோல் இருந்தது. இதில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் தங்கள் பெயரைச்சொல்லி ஒப்பம் பெற்றவர்கள் பலர் 16 வயதிற்கும் குறைந்தவர்கள் என்பதே.
யானும் பெற்றேன். என்பெயரோடு, என் தந்தை ஆரம்பித்த வெற்றிமணியை முதல் பெயராக்கி வெற்றிமணி சிவகுமாரன் என்று ஒப்பமிட்டார். இந்த அர்ச்சனையில் பலன் உடனே கிடைத்த மகிழ்ச்சி எனக்கு.
1,073 total views, 3 views today