நடக்கும் என்பார் நடக்காது! நடக்காது என்பார் நடந்துவிடும்!
— விமல் சொக்கநாதன்-இங்கிலாந்து
இலங்கை போன்ற தமிழ்கூறும் நல்லுலக நாடுகளில் இருந்து ஊரையும் உறவுகளையும் வீட்டையும் நாட்டையும் துறந்து பிரிட்டன் என்ற ஒரு தீவிற்கு புலம்பெயர்ந்து வந்து வாழத்தொடங்கும் குடும்பங்களின் மனதில் நிரந்தரமாக சுடர்விடும் ஒரே எண்ணம்: தத்தம் குழந்தைச் செல்வங்கள் படிப்பிலே சிறந்து விளங்க வேண்டும், படிப்பிலே பாருக்குள்ளே தலைசிறந்த நாடான பிரிட்டனில் பட்டம்பெற்று பெரிய பதவிகளை வகிக்க வேண்டும் என்பது மட்டும்தான்! நாம் அனைவரும் பிறந்த எங்கள் அருமைத் தாயகத்தில் எங்கள் தாய்மொழியை அலட்சியம் செய்து அவமானப்படுத்தி எங்கள் மண்ணைப் பறித்து, எங்கள் ஆலயங்களை இப்போது பறித்துக் கொண்டிருக்கும் பேரினவாத ஆட்சியாளர்கள் எம் இனத்தை நசுக்க எடுத்த முதல் நடவடிக்கையே கல்வியிலே தரப்படுத்தல் (Standardization) என்பதுதான். தமிழ்க் குடும்பங்கள், மேனாடுகளை நோக்கி புலம்பெயர ஆரம்பித்தமைக்கு இதுவே முதல்காரணம்.
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து இங்கு பிரிட்டனுக்கு குடியேறிய தமிழ்க் குடும்பத்தினரில் மொத்தமாக எல்லோருமே – பிள்ளைகளின் படிப்புக்காக தம்மையும் தமது சுகபோகங்களையும் தியாகம் செய்தார்கள். அப்படித் தியாகங்கள் புரிந்த பெற்றோர் ஒரேநாளில் இரட்டைநேரம் (Double Shift) வேலை செய்து பிள்ளைகளுக்கு கல்விச் செல்வத்தை வழங்கி பெருமைப்படுவதை நான் என் சட்டத்தொழில் வாழ்வில் கவனித்திருக்கிறேன். நேற்றுவரை தங்கள் சிறுவயது மகனையும் மகளையும் காரில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கும், தனிப்பட்ட வகுப்புக்களுக்கும் அலைந்து திரிந்த தமிழ் தம்பதிகள், இப்போது தமது புதல்வி Goldman Sachs நிதி நிறுவனத்தில் பெரிய அதிகாரியாக பதவி வகிப்பதாகவும், தமது புதல்வன் டாக்டர் பட்டம் பெற்று இருதய நோய் மருத்துவ நிபுணராக Consultant பதவி வகிப்பதாகவும் என்னிடம் விபரிக்கும்போது அவர்கள் முகத்தில் காட்டிய பெருமையையும் பூரிப்பையும்விட, மிகவும் அதிகமான பெருமையும் பூரிப்பும் எனக்குள் ஏற்பட்டன. காரணம், அவர்கள் என் ஈழத்து தமிழ் உறவுகள். அவர்கள் அனுபவித்த எல்லா கஷ்டங்களையும் மிக நன்றாக அறிந்தவன் நான். எனவே அந்த தம்பதிகளை நான் சாதனையாளர்களாகவே கருதினேன். இன்றும் அப்படியே மதிக்கிறேன்.
தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்ற உயரிய இலட்சியம் எதுவுமே இல்லாமல் இந்த இங்கிலாந்து நாட்டில் தாம் ஜாலியாக வாழ்க்கை நடத்த வேண்டும், உழைக்கும் பணத்தை இலண்டன் நகைக்கடைகளிலும் புடவைக் கடைகளிலும் செலவிட்டு, ஊருக்கு பறந்துபோய் அங்கு நடக்கும் கோவில் திருவிழாக்களிலும், நல்லூர் தேர் சமயத்திலும் கிராமத்து அப்பாவி மக்கள் முன்னால் காட்சி தரவேண்டும். தமது ஐபோனில் அந்த கிராமத்து விழாவில் தாங்கள் சர்வ அலங்கார பூஜிதைகளாக காட்சி தருவதை படம் பிடித்து கொண்டு வந்து FaceBookல் விளம்பரப்படுத்தி பெருமைப்படவேண்டும் என்று எண்ணும்; சில தாய்மாருக்கு, மகனும் மகளும் அதே FaceBook என்ற மோசமான வயிற்றுவலியால் கெட்டு குட்டிச் சுவராகிப் போய் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணமோ கொஞ்சமும் இல்லை.
நான் முன் சொன்ன தியாக மனப்பான்மையும் குழந்தைகள் நலனும் உள்ளத்தில் கொண்டிருந்த சாதனையாளர் குடும்பந்தான் மருத்துவர் Yashveer Sunak திருமதி Usha Sunak குடும்பமும்! இந்தியாவின் பஞ்சாப் இனத்தவர்களான இவர்கள் ஆபிரிக்க நாட்டிலிருந்து பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்தார்கள். மருத்துவர் யஷ்வீர் மருத்துவம் படிக்க ஆரம்பித்ததே இங்கு பிரிட்டனில்தான். எதிர்கால மனைவி உஷாவை திருமணம் செய்ததும் பிரிட்டனில்தான். யஷ்வீர் உஷாவின் மூத்த புதல்வாரன ரிஷி பிரிட்டனின் Southampton நகரில் 1980ஆம் ஆண்டில் பிறந்தார். ரிஷிக்கு இப்போது வயது 42 மட்டுமே. பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் வயதில் இளைய பிரதமராக இருந்த டேவிட் கமெரொனின் சாதனையை ரிஷி இப்போது தகர்த்திருக்கிறார்.
புதல்வர் ரிஷி பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் தமது பெற்றோரின் கடின உழைப்பை பார்த்து மனமுருகி யிருக்கிறார். தந்தையார் அரசாங்க மருத்துவராகப் பணியாற்ற, தாயார் உஷா மருந்தியல் பட்டம் பெற்று மருந்தகம் – Pharmacy ஒன்றை நடத்தி சமூகத்திற்கு சேவையாற்றி வந்தார். புதல்வன் ரிஷியை மேற்படிப்பு படிக்க உயர்கல்லூரி ஒன்றுக்கு அனுப்ப அந்த தம்பதிகள் ஆண்டு தோறும் 42,000 British Pound கட்டணத்தை Winchester கல்லூரிக்கு கட்ட வேண்டியிருந்தது. அம்மாவின் மருந்தகத்தின் வரவு செலவுக் கணக்குவழக்குகளையும் ரிஷி அவ்வப்போது பதிவுசெய்து உதவினார். அத்தோடு Winchesterல் படிக்கும் காலத்தில் இந்திய உணவகம் ஒன்றில் றயவைநசஆக ‘சப்ளை’ வேலை பார்த்ததாகவும் ரிஷி பெருமையுடன் நினைவு கூர்கிறார். என் பெற்றோரின் அளப்பரிய தியாகங்களினால்தான், நான் உலகின் மிகவும் அதிக கட்டணம் வசூலிக்கும் செல்வாக்குமிக்க Winchester கல்லூரியில் படித்து அங்கிருந்து Oxford பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். Oxford தொடர்ந்து அமெரிக்காவின் California – Stanfordக்கு அனுப்பப்பட்ட ரிஷி MBA பட்டப்படிப்பில் இணைந்தார். ரிஷிக்கு தெரியாமல் மன்மதனும் அதே பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தான்.
இந்தியாவின் 6ஆவது கோடீஸ்வரர் Infosys அதிபர் N.R.நாராயணமூர்த்தியின் புதல்வி அட்சதா மூர்த்தியும் ளுவயகெழசன ல் படிக்க வந்திருந்தார். கண்கள் பேசிக்கொண்டன. மன்மதன் தன் பாணங்களை எய்து இருவரையும் தாக்கினான். 2009இல் பங்கற்ரில் நடந்த திருமணக் கொண்டாட்டங்கள் இரண்டு நாட்களுக்கு நீடித்தன! திருமணத்தின்போது மொத்தம் ஆயிரம் விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள்.
தம்பதிகள் பிரிட்டனுக்கு திரும்பியபின் மிகப் பெரும் வங்கிகளில் ரிஷிக்கு உயர்பதவிகள் காத்திருந்தன. 2015 வரை பிரிட்டிஷ் வங்கிகளில் பணியாற்றிய ரிஷி 2015,ல் கன்சவேடிக் கட்சியில் இணைந்து அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். “ஆசிய வம்சாவளி ,ந்தியர்கள் சில்லறை News Agent Shop நடத்த, சாப்பாட்டுக்கடை நடத்த மட்டும்தான் லாயக்கு! பெரிய பதவிகளுக்கு ஆசைப்படக்கூடாது!” என்று கருதும் ஒரு இனவெறிக் கும்பல் இங்கு பிரிட்டனில் வாழ்கிறது! என் தாய் மண்ணில் இதே கருத்துடன் வாழும் பேரினவாதிகள் ஒரு சாரார் “தமிழர்களுக்கென்று ஒரு வரலாறே கிடையாது! இராவணன் என்று ஒரு மன்னனே இருக்கவில்லை. அவன் சிவபக்தனும் அல்ல” என்று கூறி ஈழத்தமிழர்களை கடலில் தள்ளிவிட விரும்பும்போது, இந்த பிரிட்டன் நாட்டில் இந்த பிரிட்டிஷ் மண்ணின் மைந்தர்களான சில வெள்ளையர்கள் ரிஷியின் மனைவி அட்சதாவின் கையில் உள்ள பலகோடி பணம் பற்றியும், தந்தையார் நாராயணமூர்த்தியின் கோடிக்கணக்கான செல்வம் பற்றியும் பொறாமை கொள்வதில் தவறென்ன இருக்கிறது?
இனி ‘WhatsApp’ பற்றி ஒரு குறிப்பு. இந்த தகவல் பரிமாற்ற செயலிக்கு உலகம் முழுவதும் மொத்தம் 2 பில்லியன் பாவனையாளர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 390 மில்லியன் பேர் இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி, பிரதமர் ரிஷி அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார். தன் வலது கையில் பாதுகாப்பு நூல் அணிந்திருக்கும் ரிஷி, தம்மை ஓர் இந்து பிரதமர் என்று பெருமையுடன் கூறுகிறார். பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யும்போது பகவத்கீதையை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் புள்ளிவிபர ஆவணங்களில் ஒரு British Asian என்றே தம்மை விபரித்திருப்பதாக கூறுகிறார். தன் பெற்றோரை தியாகம் புரிந்த தெய்வங்களாக மதிக்கிறார். நரகாசுரனை அழித்து ஒளியேற்றப்பட்ட தீபாவளி தினத்தன்று பிரிட்டனின் பிரதமராக ரிஷி அறிவிக்கப்பட்டதை உலகெங்கும் இந்திய மக்கள் பெரு மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.
இலண்டனில் இயங்கும் வடிவேலு ரசிகர் சங்கம் தமதுWhatsApp Groupல் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பிய WhatsApp தகவலில் “வந்துட்டானய்யா! நம்மாள் வந்துட்டான்!!” என்று காணப்பட்டதாம்!
798 total views, 3 views today