உடல் எனும் உன்னத கருவி

-கரிணி.யேர்மனி

ஆழிசூழ் இவ்வுலகில் பிறப்பு, இறப்பு என்பது இயற்கையின் சூத்திரம். இதற்கு இடைப்பட்ட காலமே உடலோடு பயணிக்கும் இந்த வாழ்வு. இந்த உயிர்வாழ்வின் பயணத்துக்கு ஆதாரமாக ஒரு தேர் போன்று விளங்குவது இந்த அற்புத உடல். இவ்வுடல் தாய்,தந்தை ஊடாக வந்தாலும் அதன் நுண்ணிய உருவாக்கம் இயற்கையினுடையதே. தேகம், மேனி, மெய், யாக்கை, சரீரம், காயம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்த உடலானது மகத்தான முறையில் நுணுக்கமாக இயற்கையினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பலகோடி உயிரணுக்களின் கூட்டு முயற்சியே ஒரு உடல். இவ்வுடலில் ஏழு தலைமுறையின் உயிரணுக்கள் அவற்றின் இயல்போடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. காலாகாலமாக எம் முன்னைய தலைமுறையினர் எத்தகைய சூழலில் வாழ்ந்தார்களோ அத்தகைய சூழலுக்கு மிகவும் ஒத்திசையவும், அவர்கள் உண்ட உணவுகளை இலகுவாக உட்கிரகிக்கும் தன்மையையும், அறிமுகமற்ற விடயங்களை ஆராய்ந்து எதிர்க்கும் தன்மைகளையும் உடல் பெற்றிருக்கிறது. இத்தகைய உயிரணுக்கள் ஒரு துளி தசையில் பல இலட்சம் காணப்பட்டாலும் அவை ஒவ்வொன்றும் சுவாசிக்கின்றன, உணவு உட்கொள்கின்றன, கழிவகற்றுகின்றன. ஆனால் இவை தமக்கான பணிகளையும் மேற்கொண்டபடிதான் இருக்கின்றன. அதாவது மொத்த உடலையும் உயிர்ப்புடன் பார்த்துக் கொள்ளுதல்.

உடலினுள் மிகப்பெரும் தொழிற்சாலையே நடைபெறுகிறது எனலாம். ஒவ்வொரு உறுப்புகளும் மிக முக்கிய பங்காற்றுகின்றன. அத்தோடு ஒன்றுடன் ஒன்று சார்ந்து செயற்படுகின்றன. இவற்றில் ஒன்று ஓய்வு பெற்றுவிட்டாலே பெரும் சிக்கலாகிவிடும். உதாரணமாக சிவப்பு நிறத்தினால் ஆன ஒரு இனிப்பு பாண்டத்தை சுவைக்கின்றோம் என வைத்துக் கொள்வோம். வாயினில் வைக்கும் போது மூக்கு நுகர்ந்து மூளையோடு செயற்பட்டு அது சமிபாடடையக்கூடிய நொதியம் சுரக்க வேண்டும். வாயினுள் விழுங்கப்பட்டதும் அது உடலுக்கு பழக்கமான பொருட்களாலான உணவா என ஈரலினால் பரிசோதிக்கப்படும், சீனி முதற்கொண்டு சேர்ந்துள்ள எல்லாப் பொருட்களும் பரீட்சயம் என்றாலும் அந்த பாண்டத்தில் சேர்ந்துள்ள சிவப்பு நிறமூட்டிபற்றி புரியவில்லை. எனவே ஈரல் மூளையிடம் தகவல் கேட்கும் இதுபற்றி ஏதும் பதிவு உள்ளதா என. மூளையிடமும் அப்பதிவு இல்லை எனில் ஒட்டு மொத்த பண்டத்தின் சத்துக்களையும் குடலில் உள்ளுறிஞ்ச தடை விதித்து அவற்றை வெளியேற்றிவிடும்.
இப்பேற்பட்ட விலக்கக்கூடிய உணவு வகைகளை உண்டபின் மிகவும் இளக்கமாக மலம் கழிவதையும் அதன்பின் உணவு உண்ட பலமற்ற சோர்வுநிலையையும் உணரமுடியும். அதனால்த்தான் குழந்தைகளுக்கு முதற்கட்டமாக சிலகாலம் உணவுகளை தொட்டு நாக்கில் துளியளவு தடவி விடுவார்கள். மூளை தன்னை பழக்கப்படுத்திக்கொள்ளும் செயன்முறை இது.

அதுபோல் சுவாசிக்கும் மூக்குத்துவாரத்தின் இரு பக்கமும் வெவ்வேறு அளவான சுவாசமே நடைபெறுகிறது. வலதுபக்கம் குறைவாகவும், இடதுபக்கம் அதிகமாகவும் காற்று வெளியேறி உடலின் தட்வெப்பத்தை பாதுகாக்கின்றன. உறங்கும் பொழுது வலதுபக்கம் கீழிருந்தால் இடது சுவாசமும், இடதுபக்கம் கீழிருந்தால் வலது சுவாசமும் நடைபெறும். வலது சுவாசமே காற்றினை குறைவாக வெளியேற்றி உடல் வெப்பத்தை பாதுகாப்பதனால் இரவில் இடப்பக்கம் கீழேவைத்து படுத்து வலதுசுவாசம் நடைபெறச்செய்தல் வேண்டும். அது போல உடலின் ஒருபக்க செயற்பாட்டிற்கு மறுபக்க மூளையே செயற்படுகின்றது. மூளையின் பக்கம் மூச்சு செயற்படும். தவம் செய்பவர் தவநிலையில் வெப்பம் குறைவுபடக்கூடாது என்பதனாலும், சுவாச இழப்பைத் தவிர்க்கவும் இடதுபக்க உடலின் கையை தண்டையில் தூக்கி வைப்பதனால் வலது மூளை செயற்பட்டு தொடர்ந்து வலது சுவாசம் நடைபெறச் செய்கின்றனர். இதற்காகவே தண்டை எனும் தடி உபயோகிக்கப்படுகிறது.

உடல் செயற்பட சக்தியேற்றம் தேவைப்படுகிறது. தன் ஒவ்வொரு செயற்பாட்டிலும் தனது ஆற்றலை செலவிடுகிறது. உதாரணமாக ஒரு வாசனையினை நுகர்தலுக்கோ, ஒலிகளை உட்கிரகிக்கவோ இப்படி சிறிய விடயங்கள் மற்றும் பல்வேறு உடல் செயற்பாடுகளிலும் சக்திகளில் செலவீனம் ஏற்படுகிறது. தீவிர நறுமணம், அதிக ஒலி, இரைச்சல் உள்ள இடங்களில் தொடர்ந்து இருக்கும் பொழுது உடல் சோர்வடைவதை உணரலாம்.

இந்த உடலை உணர்ந்து கொள்ள அதிக நுணுக்கம் தேவை. உடலின் தன்மை மற்றும் சிறப்பம்சங்களை எடுத்துரைக்க ஒரு ஆயுட்காலம் போதாது. இருப்பினும் சிறு அடிப்படைத் தெளிவுகள் ஒவ்வொருவரும் பெற்றிருப்பது நலம். உடலுக்குள் உள்ளே உள்ள எல்லா பிரச்சனைகளையும் உடலை பிளந்து பார்த்துத்தான் அறிய வேண்டும் என்பதல்ல. வெளிப்பாகங்களில் பல்வேறு சமிக்ஞைகள் மூலம் உடல் தன் நிலையினை வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக வாய்ப்புண், வாய் துர்நாற்றம் என்பது பெரும்பாலும் இரைப்பை, குடற்புண் ஏற்பட்டிருப்பதை தெரிவிக்கும். சுவாசப்பை பலமிழந்ததனை புறத் தோலில் ஏற்படும் நமைச்சல் அரிப்பு முறையில் வெளிப்படுத்தும், முறையற்ற மாதவிடாய், கருப்பை பலவீனம் போன்றவற்றை கண்களை சுற்றியுள்ள தோல் சோபையிழந்து காட்டிக் கொடுக்கும். தேங்கிய உப்பை நரையும், சர்க்கரையை தோலின் திரையும் காட்டிவிடும். இவ்வாறு நாடி நரம்புகள் முதற்கொண்டு உரோமம் வரை துல்லியமாக கணிக்கக் கூடிய விடயங்களை கொண்டதுதான் இந்த உடலின் இயற்கை தொழிநுட்பம்.

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தன்மையோடு உடல் விளங்குகின்றது எனினும் இவற்றில் ஏதேனும் ஒன்று பெரும்பாலும் மிகுதியாகவே காணப்படுகிறது. அதன் அடிப்படையில் இது வாத உடம்பு (காற்று மிகுதியானது)என்றும், பித்த உடம்பு (வெப்பம் மிகுதியானது) என்றும், கப உடம்பு ( குளிர்ச்சி மிகுதியானது) என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகையவர்கள் மேலும் அந்த தன்மை மிகுதியாகாமல் பார்த்துக் கொள்ளுதலும், சமநிலைப்படுத்தலும் அவசியமாகின்றது. இவற்றின் சமநிலை மாறுபாட்டால் வியாதிகள் உருவாகும். இவை சரியாக பேணப்படும் சமயத்தில் புறத்தின் வழியாக ஏற்படும் நோயும் இலகுவில் தாக்கிவிட முடியாது.

உடல் உணர்வுமொழி மூலம் ஒவ்வொரு விடயங்களையும் வெளிப்படுத்தும். சாதாரணமாக ஒரு தலைவலியானது எந்த பகுதியில், எந்த விதத்தில், எந்த பொழுதில் வலிக்கிறது என்பது உடலின் பல்வேறுபட்ட உள் விளைவுகளை வெளிக்காட்டும் பல்வேறு நிலையாகும். அதனை உணர்ந்து சரிசெய்வதனை விடுத்து வலிநிவாரணிகளை உட்கொள்ளக் கூடாது. வலி என்பது அந்த இடத்திற்கு மேலதிக சக்தி தேவையினையே அதிகம் குறிக்கிறது. அந்த சக்தி உணவின் தேவை மட்டும் என்ற பொருள் ஆகிவிடாது. பெரும்பாலான உடலின் பாதிப்புகளின் போது உடல் தன்னைத்தானே சுகப்படுத்தும் வேலை உள்ளதனால் அது சமிபாட்டு வேலையில் கவனம் செலுத்துவது சிரமம். எனவே நோய்வாய்ப்படும் தருணத்தில் உண்பதை மிகவும் குறைக்கும்படி உடலானது குமட்டல், வாய்க்கசப்பு போன்ற உணர்வை ஏற்படுத்தும். உடல் முற்றிலும் குணமானதும் உடலின் சக்தியை சமநிலைப்படுத்த உணவு தேவையாதலால் அதிக பசி எடுக்கிறது. உடல் தனக்கு உள்ளே உள்ள சிக்கல்களை பல சமிக்ஞைகள் மூலம் வெளிப்டுத்தும்போது மீண்டும் மீண்டும் அதனை அலட்சியம் செய்து அடக்குவதால் தன்னிச்சையாக உள்ளே உள்ள சிக்கலான பகுதியைச்சுற்றி ஒரு அரணை உருவாக்கிவிட்டு ஏனைய வேலைகளைக் கவனிக்க தொடங்கும். இப்படி புறக்கணிப்பு தொடர்வதால் எதிர்த்து போராடும் திறன் இன்றி உள்ளே ஆபத்தான கட்டிகள் உருவாகி உயிரைக் குடித்துவிடும்.
இந்தப் பொருள் இந்த தன்மை வாய்ந்தது என்ற அடிப்படை புரிதல் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். குறிப்பாக அதிக கிழங்குவகைகள், பல்வகை தானியங்கள் உடலில் மிகுந்த வாயுவை தோற்றுவித்துவிடும். மந்தகதியை உடல் அடையும். ஆனால் இஞ்சியும் கிழங்கு வகைதான் அது வெப்பத்தை பெருக்கி வாயுவை வெளியேற்ற உதவும். பயறு குளிர்ச்சிதரும், கொள்ளு வெப்பம் தரும் இப்படி அதனதன் தன்மை உணர்ந்து உடலின் தன்மையோடு ஒத்துப்போகக் கூடிய வகையில் உணவினை தேர்வு செய்ய வேண்டும்.

யூரியா, அமோனியா போன்ற அசேதனப் பசளைகள் மண்புழுக்களை கொன்றுவிடும். இவ்வாறு நுண்ணுயிரிகளின் பங்களிப்பு அற்று வளர்க்கப்படும் பயிர்களில் பெறப்படும் காய்கனிகளும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளும், செரிமானம் அடைய சிரமமான உணவுகளும் நீரிழிவு போன்ற நீண்ட கால நோய்க்காரணிகளாக விளங்குகின்றன. பதப்படுத்திய உணவுகள், சூரிய வெளிச்சம் உட்புகாத இடத்தில் சமைக்கப்பட்ட உணவுகள், மீண்டும் சூடுபடுத்தும் உணவுகள், மைக்ரோ வேவ் அடுப்பில் சமைக்கப்பட்ட உணவுகள், உடலின்தட்வெப்பத்தை குலைக்கும் உணவுகள் போன்றவை உடலின் ஆரோக்கியத்தை முடக்கிவிடும்.

எந்தவகையான பூகோள பிரதேதச்தில் தலைமுறையாக பிறந்து வளர்ந்தோமோ அங்கு விளையும் உணவுகளே உடலால் மிக அதிகமாக கிரகித்துக் கொள்ளப்படுகிறது. இது அங்கு நிலத்தில் காணப்படும் நுண் உயிரிகளின் பங்களிப்பால் உண்டாகிறது. இத்தகைய மண் உயிரிகள் பிற தேசங்களில் மாறுபடுகின்றன. வெப்ப வலயத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பரம்பரையினையுடையவர் குளிர்தேசத்தில் வாழ நேரிடும் சமயத்தில் அவரது உடல் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும். வெப்பவலயத்தில் அதிக சூரிய சக்தியினால் பாதிக்கப்படாமல் ஏற்கனவே உருவாகிவிட்ட தோலின் மெலனின் அடுக்குகள் குளிர்தேசத்தில் உடலுக்கு குறைந்த பட்சம் கிடைக்க வேண்டிய சூரிய சக்தியைக்கூட பெற்றுக் கொள்ளவும் தடையாக இருந்து விடுகின்றன. கல்சியம், இரும்பு போன்ற சத்துக்கள் உணவில் இருந்து உடல் உறிஞ்சிக் கொள்ள வேண்டுமெனில் சூரிய சக்தியே ஆதாரம். நாடி நரம்பு முதல் ஒட்டு மொத்த உடலின் சக்திக்கலம் அது. மற்றும் குளிர் தேசவாசிகளின் முள்ளந்தண்டு அதிக வெப்பத்தை உருவாக்கக் கூடியது. வெப்பவலயவாசிகளின் முள்ளந்தண்டு குறைவான வெப்பத்தை உருவாக்கும். உதாரணமாக பூசணிக்காய் குளிர்ச்சியை ஏற்படுத்தும் இயல்புடையது. ஆனால் குளிர்தேசவாசி ஒருவர் முழுப்பூசணிக்காயை முழுவதும் உண்டுவிட்டு சாதாரணமாக இருப்பார். ஆனால் எம்மவர்களோ சிறிதளவு பூசணிக்காய் உண்பதற்கும் மிளகு, மஞ்சள், பூண்டு போன்ற வெப்பமாக்கும் பொருட்களை சேர்த்து சிறிதளவே உண்பார்கள். அதிகம் உட்கொண்டால் கைகால் இழுத்துக் கொள்ளும் என்பார்கள். எனவே எவ்வாறு எம் தேசத்து சிறு செடி கொடிகள் பிற தேசங்களில் செழித்து வளர சிரமப்படுகிறதோ இது போல அந்த தேசத்தில் பிறந்திருந்தாலும் கூட ஏழு தலைமுறைக்கு பின்னர் தான் முற்றிலும் உடல் அத்தேசத்திற்கு இயல்படையும் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே பொன்னினை விட பாதுகாக்கப் பட வேண்டியது தன் உடல் என்பதனை மறவாதிருப்போம்.

875 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *