பொன்னியின் செல்வன்: கரிகாலன் செத்துக் கிடந்தான்

-ஜூட் பிரகாஷ்
மெல்பேர்ண்

கரிகாலன் செத்துக் கிடந்தான். தன் மண் மீது தீராப் பற்றுக் கொண்டிருந்த கரிகாலனின் விழிகள் விண் பார்த்து குத்திட்டு நிற்க கரிகாலன் செத்துக் கிடந்தான்.
“கடம்பூருக்கு போகாதே, அண்ணா” என்று இளையபிராட்டியார் வந்தியத்தேவரூடாக சொல்லி அனுப்பியும், சுந்தரச் சோழரின் அறிவுமிகு புத்திரியின் சொற்கேளாமல் கொள்ளிடம் கடந்து கடம்பூர் வந்த கரிகாலன் கடம்பூர் மாளிகையின் நிலத்தில் செத்துக் கிடந்தான்.

எப்படிச் செத்தான்? யார் கொன்றார்கள்? என்று யாருக்கும் இன்றுவரை தெரியாமலே இருக்க, அவனுக்கும் தான் எப்படிச் செத்தான் என்று தெரிந்திருக்குமோ இல்லையோ என்று தெரியாமல், அதையும் யாருக்கும் சொல்லாமலே கரிகாலன் செத்துக் கிடந்தான்.

அறிவைப் போலவே ஆற்றலும், ஆற்றலைப் போல அனுபவமும் பெற்று முதிர்ச்சி அடைந்திருந்த தனது தாத்தாவான திருக்கோவலூர் மலையமான், “போகாதே பேரா, கடம்பூரில் உனக்கு சதி ஆபத்து காத்திருக்கிறது” என்று எவ்வளவோ சொல்லியும் கேளாமல் கடம்பூர் ஏகியவனின் உடல் அசைவடங்கிக் கிடக்கக் கரிகாலன் செத்துக் கிடந்தான்.

பாண்டியனின் வீரவாளைப் பிடிக்கும் போதே கை நடுங்கிய நந்தினியின் கையால்தான் தான் கொல்லப்பட வேண்டும் என்று வினையை விலைக்கு வாங்க, கடம்பூர் மாளிகையில் நந்தினி தங்கியிருந்த அறைக்கு தனியனாக வந்த கரிகாலனை நந்தினி கொல்லாமலே, கரிகாலன் செத்துக் கிடந்தான்.
தானும் நந்தினியும் தனித்துக் கதைத்து பிரச்சினையைத் தீர்க்க அவள் அறைக்கு வந்தவன், அவனறியாமலே வேறும் மூவர் அந்த அறைக்குள் அவர்கள் கதைப்பதைக் கேட்டுக் கொண்டிருந்ததை அறிந்தோ அறியாமலே கரிகாலன் செத்து மடிந்து செத்துக் கிடந்தான்.

“அண்ணாவைத் தடுத்துபார், இல்லாவிடில் அவனுக்கு பாதுகாப்பு கவசமாக இரு, அவனை விட்டு விட்டு ஒரு கணமும் அகலாதே” என்று தனது இதயத்தை குந்தவையிடம் பறிகொடுத்த வந்தியத்தேவன், தன்னைக் காக்க தன்னருகில் இருக்கிறான் என்று உணர்ந்தும், தான் மரணித்த பின் வந்தியத்தேவன் மேலேயே தனது கொலைக்கான குற்றம் சுமத்தப்படப் போகிறது என்பதை உணராமலும் ஆதித்த கரிகாலன் செத்துக் கிடந்தான்.

“நான் நந்தினியை நோக்கி எறிந்த திருகுக்கத்தியே குறிதவறி இளவரன் கரிகாலனில் பட்டு அவன் செத்தான்” என்று அரசவையில் வைத்து பெரிய பழுவேட்டரையர் அளித்த வாக்குமூலம் சரியா பிழையா என்று தெரிந்தோ தெரியாமலோ மாண்டு போன கரிகாலன் செத்துக் கிடந்தான்.

ரத்தக் கறை படியாத கத்தியைக் காட்டிக் கொண்டு “இளவரசன் கரிகாலனை நானே கொன்றேன்” என்று அந்த அறையின் திரைக்கு பின்னால் மறைந்து நின்ற மணிமேகலையின் அழுகுரலில் பொதிந்திருந்த வந்தியத்தேவனை கொலைக்குற்றத்தில் இருந்து காக்கும் நோக்கத்தை நினைத்து எக்காளமிட்டுச் சிரிக்க முடியாமலே கரிகாலன் செத்துக் கிடந்தான்.

தன் பெரிய தாத்தன் இராஜாதித்தனை வஞ்சகமாக கொன்ற ராஷ்டிரகூடர்களை வெற்றி கொண்டு போர்க்களத்தில் வீரத்தாண்டவமாடிய சோழ யுவராஜனின் உடலில் பாய்ந்த ஆயுதம் அவனின் ஆவியை அடக்கி விட கரிகாலன் செத்துக் கிடந்தான்.

யுத்த தர்மத்தை மீறி தன் சிறிய தாத்தன் உத்தமசீலியின் தலையைக் கொய்த வீரபாண்டியனின் தலையைக் கொய்து பழிக்கு பழி வாங்கிய சோழ மாவீரன், பழிவாங்கப்பட்டோ சதிசெய்யப்பட்டோ இல்லை தன்னைத் தானே மாய்த்தோ கரிகாலன் செத்துக்கிடந்தான்.

தான் தன் இதயத்தைப் பறிகொடுத்து பித்தனாக அலைந்தது தன் குலத்தின் பரம வைரியான வீரபாண்டியனின் குமாரி நந்தினியிடம் தான் என்ற உண்மையை அவள் வாயாலேயே அறிந்த கணத்திலேயே உணர்வாலே செத்துப் போனவன், யாரென்று யாருக்கும் அறியாத யாராலோ கொலையுண்டு கரிகாலன் செத்துக் கிடந்தான்.
கரிகாலன் செத்துக் கிடந்தான். தன் மண் மீது தீராப் பற்றுக் கொண்டிருந்த கரிகாலனின் விழிகள் விண் பார்த்து குத்திட்டு நிற்க கரிகாலன் செத்துக் கிடந்தான்.

642 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *