ஐக்கிய ராச்சியத்தில் கலையோடு ஐக்கியமான சில நாட்கள்!
-கலாசூரி திவ்யா சுஜேன்.இலங்கை
பாரதியின் புதிய ஆத்திச்சூடியை,அலாரிப்பு என்னும் நடன உருப்படிக்குள் இணைத்து வழங்கிய புதிய ஆக்கத்தினை உள்வாங்கிய, ராகவீணா சுரேஷ்குமார் அவர்களின் அரங்கேற்ற நிகழ்விற்காய் அண்மையில் லண்டன் செல்லும் பயணம் ஏற்பட அவ்வரங்கேற்ற அனுபவத்தினை கடந்த பதிவில் கட்டுரையாக்கினேன். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த கலைப் பரிமாற்றங்களை சுருக்கமாக பதிவிட விளைகிறேன்.
காவியக் காதலன் பாரதியின் மீது எந்நேரமும் காரணமில்லாக் காதல் கொள்ளும் உள்ளமதை பலமுறை ரசனையோடு நேசித்திருக்கிறேன். அந்த வகையில் ஐக்கிய ராச்சியம் சென்றாலும், தமிழ் மொழி அறியா கலைஞர்களிடத்தே பாரதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ண விண்ணப்பத்தில் “சித்ர கலைமன்றம்” , உபஹார் நடனப்பள்ளி ஆகிய இரு நடனப்பள்ளியில் “பரதமும் பாரதியும்” என்ற பயிற்சி பட்டறையை நடாத்திய அனுபவம் கிட்டியது. அங்கெல்லாம் வென்று நின்றது பாரதியின் மந்திர சொற்கள். புலம் பெயர் நாடுகளில் பாரதியை மட்டுமல்ல நம் தமிழையும் அறிமுகப்படுத்த இலகு வழியாக கலைகள் அமைகின்றன. அதே போல் நிருத்திய கலாலய மாணவர்களுக்கும் தமிழ் பதம் ஒன்றிற்கான அபிநயத்தினை அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிட்டியது.
“இன்பமுற்றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே” என்ற பாரதி மொழியை தாரகமாக கொண்டு இயங்கி வரும் உலக இலங்கை பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் அங்கத்துவர்களில் ஐக்கிய ராச்சியத்தில் கலைப்பணி ஆற்றும் நடன ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வினை தீபாவளி பண்டிகையாக உருவமைத்து ஏற்பாடு செய்திருந்தோம். சங்கத்தின் செயலாளர் நிரஞ்சனா சுரேஷ்குமார் அவர்கள் லண்டனில் இருந்து செயற்பட்டு வருகிறார். பொதுமுடக்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சங்கம் என்பதால் நூற்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளை இணையத்தளத்தினூடாகவே வழங்கி இருந்தோம். இச்சங்கம் சார்ந்த முதல் மேடை நிகழ்வும் இதுவெனப் பெருமை கொள்கிறது.
அன்பெனும்பெரு வெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே? இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க முடியாத சில ஆசிரியர்களை அதன் பின்னதான நாட்களில் நேரடியாக சந்தித்து மகிழ்ந்தோம் அபிநயக்ஷேத்திரா வினால் ஆரம்பிக்கப்பட்ட இணைய வழி நட்டுவாங்க கற்கை நெறிக்கு தலைமை தாங்கி கௌரவித்ததோடு மட்டும் இன்றி கடந்த இரு வருடங்களாக நிறைந்த கலை பரிமாற்றத்தையும் வழங்கிய மூத்த மிருதங்க வித்துவான் மதிப்பிற்குரிய காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி ஐயாவை நேரடியாக சந்தித்து தாளம், லயம் என அரிய பல விடயங்களை உரையாடினோம்.
” தாளம்,தாளம்,தாளம்;
தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
கூளம்,கூளம்,கூளம். “
சத்யஜித் கிரேஷன்ஸ் ஊடகத்தினர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மும்மொழியிலும் நேர்கண்டு மகிழ்ந்தனர். அதே போல பா தொலைக்காட்சி லண்டன் ஊடகத்தின் மகரந்த சிதறல்கள் நேர்காணல் மற்றும் லண்டன் SRS தமிழ் வானொலி நேர்காணல் என தேடிய கலா அனுபவத்தை பற்றியும், அபிநயக்ஷேத்திராவின் பணிகள் பற்றியும் கலந்துரையாடினர். டிஜிட்டல் உலகில் கலைகளின் அதி முக்கியத்துவத்தை உணரும் வாய்ப்பினை இந்த நேர்காணல்கள் பெற்றுத் தந்தன. அன்பார்ந்த தமிழ் விரும்பிகளே உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு கலையை அறிமுகப்படுத்துங்கள். இது நம் மொழிக்காற்றும் பெரும் பணியாகும்.
” வீடு தோறும் கலையின் விளக்கம் “
ஐக்கிய ராச்சியத்தின் இலங்கை உயர்ஸ்தானிகராலய ஏற்பாட்டில் இடம்பெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்வில் மோகினியாட்டம், பரதநாட்டியம் இணைந்த நடனத்தை ஆற்றுகை வழங்கும் அனுபவமும் கிட்டியது. இவ்வாறான புத்தனுபவங்கள் நிறைந்ததாய் லண்டன் பயணம் அமையப்பெற்றதும், வெற்றிமணி பத்திரிகையின் பிரதான ஆசிரியர் அன்பிற்கினிய சிவகுமாரன் ஐயாவை லண்டனில் கண்டு மகிழ்ந்தும் இனிமை சேர்க்கும் நினைவுகள். இத்தனைக்கும் மேலாய், பல்வகை நிறங்களும், பல்வகை வடிவங்களும் என தெருவெல்லாம் கோலமிடும் இலைகளின் எழிலும், அவ்விலைகளை தழுவி நிற்கும் மழைத் துளிகளும், மேனியெங்கும் படரும் மாருத சுகமும் மாறாதவளாய் தாய் நாடு திரும்பினேன் பாரதியின் குயில் பாட்டு விண்ணில் என் சித்தாகாசத்தை விரித்துக்காட்டியது.
நாதம்,நாதம்,நாதம்!காதல்,காதல்,காதல்!!இன்பம்,இன்பம்,இன்பம!!!
734 total views, 3 views today