சுயம் இழந்த சரிதம்!

Dr.T. கோபிசங்கர்
யாழப்பாணம்.

“இதோ என்னை ஒரு குப்பைக்காரன் தூக்கி தன் குப்பை அள்ளும் வண்டிலுக்குள் எறிகிறான், குப்பை வண்டிலுக்குள் துர்நாத்தம் சகிக்க முடியவில்லை,சென்ற வருடம் வரை என்னை பாவித்துவிட்டு இப்பொழுது நரை கூன் விழுந்த கிழடுகளைப் தள்ளிவைத்தது போல் என்னையும் ஒதுக்கி விட்டார்கள். என் உடம்பெல்லாம் ஓட்டை விழுந்து ரெண்டு கம்பியும் உடைந்து விட்டது, வாங்கிய புதிதில் படுக்கும் போதும் தன்னுடனே வைத்திருந்த சின்னவள் கூட இப்பொழுது என்னால் பயனில்லை எண்டு தூக்கிப் போட்டு விட்டாள் ….. “ எண்டு குடையின் சுயசரிதைக்கு எடுத்த அயசமள என்னையும் ழுஃடு தமிழ் results ஐயும் காப்பாத்திச்சுது. படிக்கேக்க பிடிக்காத பத்தில குடையும் ஒண்டு, ஆனாலும் அது என்னைக் கைவிடேல்லை.

“கொண்டு போன குடையை நனையாமக் கொண்டுவந்திருக்கிறாய், தலை நனைஞ்சு போட்டு தடிமன் வரும் போய்த் துடை “ எண்டு அம்மாட்டை பேச்சு வாங்கின படி துவாயைத் தேடி துடைக்கிறதும். திருப்பியும் வர “ வெறும் மேலோட நிக்கிறாய் சளி பிடிக்கும் சட்டையைப் போடு” எண்டு சொல்லி அம்மா கருவாட்டுக்குளம்பும் சோத்தையும் தீத்த, கால் ரெண்டையும் தூக்கி கதிரைக்குள்ள வைச்சு கையால கட்டிப் பிடிச்சுக் கொண்டபடி சாப்பிடிறசுகம் …

மழைக்கு குடையைப் பிடிச்சுக் கொண்டு சைக்கிளில போறது எண்டது கஷ்டத்திலும் பாக்க பஞ்சியான விசயம். பெரிசாப் பெஞ்ச மழை குறைஞ்சு தூவானமா மாற ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காத மாதிரி நிக்கப் பொறுமை இல்லாமல் வெளிக்கிட்டு வீட்டை வாறது வழமை. ஆள் நனைஞ்சாலும் கொண்டு போன கொப்பி புத்தகம் நனையாம வீட்டை திரும்பி வாறது முக்கியம் . இந்தா மழை விடுது எண்டு போட்டு , எதுக்கும் பாதுகாப்பா இருக்கட்டும் எண்டு மேல் பட்டினைத்துறந்து சேட்டின்டை உட்பக்கமாக கொப்பியை சோட்ஸ்க்குள்ள in பண்ணீட்டு , நனைஞ்ச சீட்டை ஒரு தட்டுத் தட்டீட்டு ஏறி இருந்து சைக்கிளை உழக்க எங்கடை ராசி அப்பிடி , அப்ப தான் மழை பிலக்க வெளிக்கிடும் .

ரிப்போட்டை கொண்டு போய் அப்பாக்கு முன்னால கையெழுத்துக்கு நிண்ட மாதிரி குனிஞ்ச தலை நிமிராம , கொப்பியை நனைக்காமல் கொண்டு போனா சரி எண்டு குனிஞ்சபடியே கொஞ்சம் இறுக்கி ஓட , நேராப் பெஞ்ச மழை இப்ப குறுக்கா முகத்தில கம்பி மாரிக் குத்தும். மழைக்குள்ள சைக்கிள் ஓடேக்க முக்கிய பிரச்சினை வெள்ளம். வெள்ளத்தைக் கண்டாலும் நாயைக் கண்டாலும் காலை உயத்திக் கொண்டு தான் சைக்கிள் ஓடிறது . இறுக்கி ரெண்டு உழக்கு உழக்கீட்டு நடு வெள்ளத்துக்கால ரெண்டு காலையும் தூக்கிக் கொண்டு சைக்கிள் போகேக்க ரெண்டு பக்கமும் தண்ணி பறக்க ஒரு மiஉம இருக்கும்.
நனைஞ்சு போய் வீட்டை வர, பேசிப் பேசி அம்மா துவாயைக் கொண்டர முதல் சீலைத் தலைப்பால தலையை துடைக்கிறதுக்காவது அடிக்கடி நனையலாம் .

Rain coat போட்டுக்கொண்டு சைக்கிள் ஓடிறதும் வாழைப்பழத்தை தோலோட சாப்பிடிறதும் ஒண்டு , ரெண்டிலேம் பயன் இருக்கும் ஆனால் சுவை இருக்காது. பள்ளிக்கூடம் போகேக்க நனையாமப் போய் ஆனால் வரேக்க நனைஞ்சு வாறது பெரிய இன்பம் . போகேக்க பிடிக்கிற குடை தலை நனையப் பிடிக்கைறதிலும் பாக்க போற வாகனத்தின்டை வெள்ளம் அடிக்காமப் பிடிக்கிறது தான் கூட. குடைக்கும் எனக்கும் ராசி அப்பிடி, நான் குடையை பாவிச்சுக் கிழிச்சதிலும் பாக்க பாவிக்காமத் துலைச்சது தான் கூட.

மழைகாலம் வர முதல் செய்யிற ஆய்தத்தில குடையை தேடி எடுத்து செருப்புத்தைக்கிற கடைக்காரன்டைப் போய் விலை பேசி ரெண்டு கம்பி மாத்தி நாலைஞ்சு ஓட்டைக்கு ஒட்டுப் போட்டு தைச்சுக்கொண்டந்து வைக்கிறது முக்கியம் . குடையை பாவிக்காமல் வைச்சாக்கூட எறும்பும் எலியும் கடிச்சு ஓட்டை வந்திடும்

அப்ப வீட்டுக்கெண்டு ரெண்டு குடை தான் இருக்கும். மேல சொன்ன மாதிரி ஒரு பெரிய குடையும் இன்னும் ஒண்டு சின்னக் குடையும் , அதோட ஓட்டைக்குடை ஒண்டு மழை பெய்யேக்க toiletக்கு கொண்டு போக இருக்கும் . மழை பெய்யேக்க குடை முன்னுரிமை அடிப்படையில கிடைக்கும். நானும் மற்றவை பாவம் எண்டு ஒரு நாளும் குடையைக் கேக்கிறேல்லை. ஆரும் வீட்டை வந்துட்டுப் போகேக்க மழை பெஞ்சா குடுத்து விடிற குடை அப்பிடியே அறவிட முடியாக் கணக்கில போயிடும் சில நேரம்.

குடைகளும் காலத்தோட கூர்ப்படையத் தொடங்கிச்சுது. முந்தி குடை எண்டால் கறுப்புக் கலர் மட்டும் தான் எண்டு இருந்தது . மூக்கு மாதிரி தள்ளிக் கொண்டு நிக்கிற கம்பியைத் உள்ள அமத்திக் கொண்டு மேல தள்ள அது மேல போய் அடுத்த கம்பியில lock ஆகும். நீட்டு குடைக்குப் பிறகு வந்தது மடிக்கிற குடை, அப்ப அதுக்குப் பேர் லேடீஸ் குடை ஏனெண்டால் மடிச்சு பாக்கில வைக்கிற படியால். மழைக்கு நனையாமப் பிடிக்கிற இந்தக் குடை காத்தடிச்சா கவிண்டு மழைத்தண்ணியை ஏந்த தொடங்கீடும். கவிண்ட குடையை எதிர்க் காத்தில பிடிச்சுக் கொஞ்சம் தள்ள திருப்பியும் பிரண்டு குடையா வந்திடும் . அந்தக்குடைகள் பிறகு எண்பதுகளின் நடுப்பகுதியில் கலர் கலரா மாறிச்சுது. மழை பெய்யத் தொடங்கினாப் பிறகு தான் குடையை எடுத்து சுத்திக் கட்டின கட்டை அவித்திட்டு மேல தள்ளி விரிக்க முதல் பாதி நனைஞ்சிடும் எண்டதால துறக்கிற சுகத்துக்கு வந்தது switch குடை .

குடை பழைய ஆக்களுக்கு உடம்பின், உடையின் ஒரு பகுதியகவே இருந்தது. வெள்ளை ஜிப்பாவும் வேட்டியோடேம் கன பழசுகள் அப்ப குடையை கமக்கட்டுக்க மடக்கி கொண்டு தான் திரியிறவை . ஆரும் அற்பனுக்கு பவிசு வந்திட்டுது எண்டு சொன்னாலும் எண்டோ தெரியேல்லை அதை விரிச்சுப் பிடிக்கிறதிலும் பாக்க கொண்டு திரியிறது தான் கூட. பிறவுண் கலர் மரப் பிடி போட்ட பழைய நீட்டுக் குடை ஒண்டு multi purpose க்கு எல்லா வீட்டிலையும் இருக்கும். நடக்கேக்க ஊண்டிப்பிடிக்க, கொப்பை மடக்கி பூப்புடுங்க, வீட்டை குளப்படிகார்ருக்கு அடி போட, ரோட்டில போகேக்க சேட்டை விடுறவனை எட்டிப் பிடிக்க, நாய், மாட்டைக் கலைக்க எண்டு அதை கன தேவைக்கு அதைப் பயன் படுத்தினவை. ரோட்டில குடையால முகத்தை மறைச்சுப் போற பெட்டைகள் அந்தக் குடையை சரிச்சு மழை விட்டிட்டா எண்டு பாக்கிற மாதிரி எங்களைப் பாக்க இதயக்குடைக்குள் பெய்த மழைகள் கனக்க இருக்கு.
குடையைப் பற்றிய சுயசரிதையை எழுதின காலம் போய் இப்பொழுது சுயம் இல்லாத சரிதம் ஆகி விட்டன குடைகள்.

1,028 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *