மாயம் செய்யும் கவிதைகள் வி.மைக்கல் கொலினின்; “என் இனிய பட்டாம்பூச்சிக்கு”

நூல் நயம் 02

  • அஷ்வினி வையந்தி
    (கிழக்குப் பல்கலைக்கழகம்)
    கிழக்குப் பல்கலைக்கழக வாழ்வியலை சொல்லிய முதல் நாவலான “வீணையடி நீ எனக்கு” என்ற நாவலை எழுதிய வி.மைக்கல் கொலினின் ஐந்தாவது கவிதை நூல்தான் “என் இனிய பட்டாம்பூச்சிக்கு” என்னும் நூல்.

மகுடம் பதிப்பகத்தின் அறுபதாவது வெளியீடான இந்நூல் காதல் கவிதைகளின் பிம்பமாக காதலின் ஒவ்வொரு அசைவையும்,அழகையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. ஆனால் அந்த காதல் கவிதைகளின் ஊடாக அவர் தொன்மங்களையும், வரலாற்றையும், தமிழ் மக்களின், தமிழ் பிரதேசங்களின் இன்றைய நிலையையும், மிக லாவகமாக வெளிப்படுத்தி நிற்கின்றார். கவிதைகள் மாயம் செய்யும் என்பதற்கு கவிஞரின் பல கவிதைகள் சாட்சி களாகின்றன.காதல் நினைவுகளை மனதில் சேமித்து வைத்திருப்பதனை கற்பனையின் வழியாக கவிஞர் சொல்லும் விதம் ஆச்சரியப்பட வைக்கின்றது. அதாவது,

“என்றோ பெய்த மழை நீரை
சேமித்து வைக்கும்
நீரேந்தும் பிரதேசம் போல்
உன் நினைவென்னும்
மழை நீரை
என் இதயமெங்கும்
சேமித்து வைத்துள்ளேன்”

என நீரேந்தும் பிரதேசத்தினை தனது இதயத்திற்கு ஒப்பிடுகின்றார் கவிஞர். ஆம் மழைக்காலத்தில் இந்த நீரேந்தும் பிரதேசங்கள் தண்ணீரை சேமித்துக் கொள்கின்றன. அதன் பின் கோடை காலங்களில் குறித்த பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் தொடர்ச்சியாக ஊறுவதற்கு இந்த நீரேந்தும் பிரதேசங்களே காரணமாகின்றன. அதே போல் கவிஞரின் இதயமும் காதலியின் நினைவென்னும் மழைநீரை சேமித்து வைப்பது அபார கற்பனை.
ஆதாம்,ஏவாள் கதை,விக்கிரமாதித்தன் கதை என புராணக்கதைகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதியுள்ள கவிஞரின் கற்பனையும் பாராட்டும் விதமாக உள்ளது. உதாரணமாக விக்கிரமாதித்தன் வேதாளத்தின் கதையை கருவாகக் கொண்டு தனது காதல் கதையை எழுதும் கவிஞரின் வரிகள்

“உன் உடலெங்கும் ஆடைகளாய்
தொங்கிக் கொண்டிருக்கிறது
என் கவிதைகள்”

என கவிதைகளின் இருப்பை எடுத்துரைக்கின்றது. அதுமட்டுமன்றி தனது காதல் நினைவுகள் நிகழ்ந்த இடங்களை மையப்படுத்தி கவிதைகள் எழுதியுள்ளமை அந்த இடம் சார்ந்த எண்ணவெளிப்பாட்டினையும், காதல் நினைவுகளையும் வெளிப்படுத்துகின்றது. இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று இயற்கை அம்சங்களை முன்னிலைப்படுத்தி தனது காதல் நினைவுகளை அவற்றோடு ஒப்பிட்டு வடிவமைத்துள்ள கவிஞரின் கற்பனையோட்டம் சிறப்பானதாகும். உதாரணமாக நதி, பள்ளத்தாக்கு, தென்றல், மழை, காற்று போன்ற இயற்கை அம்சங்களை முன்னிலைப்படுத்தி கவிதை எழுதியுள்ளதைக் குறிப்பிடலாம். இதைத்தவிர அணிந்துரையில் தமிழகக் கவிஞர் விக்டர்தாஸ் என்பவர் கூறியதுபோல் வரலாறு, இயற்கை, ஆன்மீகம், நம்பிக்கை,அழகு என அனைத்தையும் கற்பனையின் வழியாக பேசியுள்ளார்.காதல் மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு நாற்பத்தி நான்கு நாட்கள் தன்னுடைய முகநூலில் பதிவிட்ட கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. காதல் நினைவுகளை வரிகளால் சுமந்து வரும் சிறந்த நூல் “என் இனிய பட்டாம்பூச்சிக்கு”.

1,046 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *