உலகில் காணப்படும் ஆச்சரியமான மரங்கள் எவை?
தற்போதைய காலகட்டத்தில் பெரிய மரங்களைக் காண்பது அரிதாகிவிட்டது. அப்படிக் கண்டாலும், அதை அறுத்து பலகை ஆக்கிப் பயன்படுத்துவர். இருந்தும் மரங்களிடையே விதம் விதமான ஆச்சரியம் ஊட்டும், குறிப்பாகப் பழமையான, அரிதான மற்றும் அடர்த்தியான மரங்கள் உள்ளன. அவை எவை என்பதைப் பார்ப்போம்.
மேற்கத்திய பிரிஸ்டில்கோன் பைன்
ஜேர்மனியில், இந்த இனம் நீண்ட கால பைன் (பினஸ் லாங்கேவா – Pinus longaeva) என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த இனத்தின் மிகப் பழமையான மரங்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றன. குறிப்பாக அவற்றின் வயது 4850 ஆண்டுகளுக்கும் மேலானவை என்று கண்டறியப்பட்டது. ஒரு மரம் 5070 ஆண்டுகளைக் கூட எட்டியதாகக் கூறப்படுகிறது, ஆனால் இந்த மதிப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பினஸ் லாங்கேவா கலிபோர்னியா, யூட்டா மற்றும் நெவாடாவில் உள்ள பல்வேறு மலைப்பகுதிகளுக்குச் சொந்தமானது.
அர்போல் டெல் துலே – உலகின் அடர்த்தியான மரம்
1400 முதல் 1600 வயதைக் கொண்ட இந்த அர்போல் டெல் துலே எனும் மர வகை மிகவும் பழமையானது தான், இருந்தும் மேற்கத்திய பிரிஸ்டில்கோன் பைனை விட இளையது. இருந்தும் இந்த இனத்தில் ஒரு சிறப்பு உள்ளது. இதன் தண்டின் சுற்றளவு மற்றும் விட்டம் 46 மற்றும் 14 மீட்டர் ஆகும். இதனால் இந்த அர்போல் டெல் துலே பூமியின் அடர்த்தியான தண்டு கொண்ட மரமாகும். மெக்சிகன் மாநிலமான ஓக்ஸாகாவில் உள்ள சான்டா மரியா டெல் துலேயில் அமைந்துள்ள இது உலகின் கனமான உயிரினங்களில் ஒன்றாகும். இதன் எடை சுமார் 630 டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
லக்கி கசுக்கொட்டை – பூமியில் உள்ள மிகப்பெரிய மர பூக்களில் ஒன்று
லக்கி கசுக்கொட்டை அல்லது பச்சிரா (பச்சிரா அக்வாடிகா) தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு அலங்கார பசுமையான தாவரமாக அறியப்படுகிறது. லத்தீன் அமெரிக்காவின் நிலங்களில் இது பரவலாக உள்ளது, அங்குக் காணப்படும் இந்த மரங்கள் 18 மீட்டர் உயரம் வரை வளரும். அவற்றின் பூக்கள் மிகச்சிறந்ததாகக் கருதப்படுகின்றன. அவை பூமியில் உள்ள மிகப்பெரிய மரப் பூக்களில் ஒன்றாகும் மற்றும் மகரந்தச் சேர்க்கையாக வெளவால்களை ஈர்க்கும்.
மஞ்சள் மெரண்டி – பூமியின் மிகப்பெரிய வெப்பமண்டல மரம்
மலேசியாவின் போர்னியோவில் உள்ள டானம் பள்ளத்தாக்கின் மழைக்காடுகளில், பூமியில் உள்ள உயரமான மரங்கள் சில காணப்படுகின்றன. மேலும் இவை மழைக்காடு மரங்களுக்கான புதிய உலக சாதனை படைத்தன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஷென்கின் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு மற்றும் தென்கிழக்கு ஆசிய மழைக்காடு ஆராய்ச்சி கூட்டாண்மையைச் சேர்ந்த அன்டிங் ஜாமி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு மஞ்சள் மெராண்டி மரம் 100,8 மீட்டர் உயரத்தை எட்டியதைக் கண்டறிந்தன. இருந்தாலும், அவற்றின் உயரம் காரணமாக, அவை மரம் வெட்டுபவர்களுக்கு ஒரு பிரபலமான இலக்காக உள்ளன.
கோகோ டி மெர் – தாவர உலகில் மிகப்பெரிய விதை
சீஷெல்ஸின் பெரிய ஈர்ப்புகளில் ஒன்று சீஷெல்ஸ் பனை (லோடோயிசியா மால்டிவிகா) என்று அழைக்கப்படும் கோகோ டி மெர் ஆகும், இது ஈரமான பள்ளத்தாக்குகளிலும், பிரஸ்லின் மற்றும் கியூரியஸ் ஆகிய இரண்டு தீவுகளின் சரிவுகளிலும் வளரும். மேலும் இந்த மரம் தாவர இராச்சியத்தில் மிகப்பெரிய விதைகளைக் கொண்டுள்ளது.
தகினா ஸ்பெக்டாபிலிஸ் – பூமியில் உள்ள அரிதான மரங்களில் ஒன்று
2007 ஆம் ஆண்டில் ஒரு பிரெஞ்சு முந்திரி விவசாயி மடகாஸ்கரில் ஒரு அசாதாரண பனை இனத்தைக் கண்டுபிடித்தார், அது அறிவியலுக்கு முற்றிலும் புதியது. தகினா ஸ்பெக்டாபிலிஸ் எனப்படும் இனத்தின் முதல் மாதிரியானது கூகுள் எர்த்தில் பார்க்கக்கூடிய அளவுக்கு பெரியதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பூத்து, இறந்துவிடும் என்பதால் இந்த செடி தற்கொலை பனை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவின் ஜான் டிரான்ஸ்ஃபீல்ட் உடன் பணிபுரியும் உயிரியலாளர்களின் கூற்றுப்படி, இந்த இனம் பூமியில் உள்ள அரிதான மர வகைகளில் ஒன்றாகும். இது தீவின் ஒரு சிறிய பகுதியில் உள்ளது, இதுவரை சுமார் 90 மரங்கள் மட்டுமே உள்ளன. இதை விட இன்னும் அரிதான மர வகை எது என்றால் அது நியூசிலாந்தைச் சேர்ந்த பென்னான்டியா பெய்லிசியானா என்கின்ற மர இனம் தான். காடுகளில் ஒரே ஒரு மாதிரி மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.
கோஸ்ட் ரெட்வுட் – “ஹைபெரியன்” எல்லாவற்றிலும் மிக உயரமானது
பூமியில் அறியப்பட்ட மிக உயரமான மரமான “ஹைபரியன்” 115,55 மீட்டர் கொண்டது. இந்த கடற்கரை ரெட்வுட் (சீக்வோயா செம்பர்வைரன்ஸ்) கலிபோர்னியாவிலும் மற்றும் விடபசிபிக் கடற்கரைக்கு அப்பால் உள்ள ரெட்வுட் காடுகளில் வளர்கிறது. இது கிறிஸ் அட்கின்ஸ் மற்றும் மைக்கேல் டெய்லர் ஆகிய இரண்டு இயற்கை ஆர்வலர்களால் 2006 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு அளவிடப்பட்டது. “Hyperion” அதன் முன்னோடியான “Stratosphere Giant 0171” ஐ கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் அளவுக்கு மிஞ்சியுள்ளது. அவற்றின் சரியான இடம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கடற்கரை ரெட்வுட்கள் ஆழமற்ற வேர்களைக் கொண்டிருப்பதால், பார்வையாளர்களின் கூட்டத்தைத் தரையில் மிதித்துச் சீர்குலைப்பதைத் தடுக்க ரெட்வுட் தேசிய பூங்கா நிர்வாகம் விரும்புகிறது. 90 சதவீதத்திற்கும் அதிகமான ரெட்வுட் காடுகள் மறைந்துவிட்டன, மூன்று சதவிகிதம் மட்டுமே இன்னும் காடாகக் கருதப்படுகிறது மற்றும் கண்டிப்பாகப் பாதுகாக்கப்படுகிறது. மரங்கள் அதிகபட்சமாக 135 முதல் 140 மீட்டர் உயரத்தை எட்டும் என்று தாவரவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். நீர் வழங்கல் இந்த உயரம் வரை மட்டுமே தான் முடியும் என்று கூறுகின்றனர். மரங்களும் கூட விதம் விதமான சாதனைகளைப் படைத்திருக்கின்றன என்று நினைக்க ஆச்சரியமாக இல்லையா?
1,047 total views, 3 views today