லிவர்பூல் நகரில்… வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா
- சிவப்பிரியன்
கடந்த 17.11.2022. இங்கிலாந்து லிவர்பூல் நகரில், அக்ஷயா மண்டபத்தில், B.H.அப்துல் ஹமீத் அவர்களின், வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. மேற்படி விழாவினை லிவர்பூல் தமிழ் ப்பள்ளிக்கூடமும், ஐக்கியராச்சியம் தமிழர்கள் சங்கமும் இணைந்து ஒழுங்கு செய்து இருந்தனர்.
விழா பட்டிமன்ற பிதாமகன் சாலமன் பாப்பையா தலைமையில் இடம் பெற்றது.
பிரதம விருந்தினராக டாக்டர் யூட் யோசேப் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக, பட்டிமன்ற பேச்சாளர்கள், ராஜா, பாரதி பாஸ்கர், மற்றும் கல்யாண மாலை மோகன், அவர் துணைவியாரும் கலந்து சிறப்பித்தனர். கொட்டும் மழையிலும், தமிழ் மீதும், எங்கள் மதிப்புக்குரிய B.H.அப்துல் ஹமீத் அவர்கள் மீதும் உள்ள அன்பால் மண்டபம் நிறைந்த மக்கள் கூடி நின்றனர்.
திரு.சாலமன். பாப்பையா, தனது உரையில் தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்களது, முத்து முத்தான தமிழ் எழுத்தைப் பார்த்து, மகிழ்ந்தேன்.300 தமிழ் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான ஒரு செய்தி. மற்றும், அப்துல் ஹமீத் அவர்களின் தமிழ் உச்சரிப்பும், அவரது பணிவும், தன்னைக்கவர்ந்தது என்றார்.
ராஜா தனதுரையில் வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூலை வாசிக்கும் போது, நீங்கள் அவரது குரலைக் கேட்கும் அதிசயம் நடக்கும் என்றார். பாரதி பாஸ்கர் தனது உரையில், ரற்றானிக் கப்பல் கவிழ்ந்தபோது , அதில் 700 பயணிகளைக் காப்பாற்ற வானொலி உதவியது என்ற தகவலை இவர் மூலம் தெரிந்து கொண்டேன். இந்தப் புத்தகம் தன்னைப்பற்றி, கூறுவதாக அமையாது, தன்னுடன் பயணித்த சக அறிவிப்பாளர்களையும் நன்றியோடு நினைவுகூரும் ஒரு புத்தகமாக அமைவது, அவரது சிறந்த உள்ளத்தை,காட்டுகிறது, என்றார்.
பதிலுரையில் திரு. அப்துல் ஹமீத் அவர்கள் இன்று சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் எனது நூல் அறிமுகம் நிகழ்வது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது, ஒரு முறை அவரை பட்டிமன்றத்தின் பிதாமகன் என்று அழைத்தேன், அதற்கு என்னை செல்லமாகக் கடிந்துகொண்டார்,இலங்கை வானொலி வர்த்தக சேவையின் பிதாமகன் எஸ். பி. மயில்வாகனன் என்று சொல்வோம். இலங்கை வானொலி வர்த்தக சேவை 1950 இல் ஆரம்பமானது, எஸ். பி. மயில்வாகனன், இணைந்தது, 1954 ம் ஆண்டு, அவர் இணைந்தபின்பே ஒலிபரப்பு கடல் கடந்தும், இலங்கை எல்லா இடமும் பிரபலமானது. எனவே அவரை பிதாமகன் என்பதுபோல் சாலமன் பாப்பையா அவர்களையும், பட்டிமன்ற பிதாமகன் என்று கூறலாம் என்றார்.
மேலும் சுப்பர் ஸ்ரார் ரஜினி காந் அவர்களிடமும் ஒரு பாடம் கற்றுள்ளேன். அதாவது ஒரு முறை அவரை நான் நேர்காணல் செய்தேன்,ஆரம்பத்தில் பேரூந்து நடத்துணராக உங்கள் வேலை மகிழ்ச்சி தந்ததா?உங்களுக்கு திரைப்பட வாழ்க்கைபிடித்து இருக்கிறதா, இப்படி பல வினாக்கள், தொடுத்தேன். ஒரு மணிநேர நேர்காணலில் அவரது பதில் ஓம், இல்லை, இருக்கலாம் என்பதாகவே அமைந்தது.மீதிநேரத்தை முழுவதாக எனது கேள்வியே ஆக்கிரமித்து இருந்தது.அந்த நேர்காணல் பின் வெளிவரவே இல்லை.
அன்று ஒர் பாடம் கற்றேன். நேர்காணலில் எப்படிக் கேள்விகளை பதில்கள் விரிவாக வரும்படி அமைப்பது, அதற்கான பயிற்சி பெறவேண்டும் என்று. இப்படி நான் வாழ்நாளில் இன்றும் கற்றுக்கொண்டு இருக்கிறேன் என்றார்.
நூல் அறிமுகம்:
முதல் பிரதியை திரு அப்துல் ஹமீது அவர்களிடம் திரு சாலமன் பாப்பையா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து திருமதிபாரதி பாஸ்கர், திரு.ராஜா,கல்யாணமாலை மோகன்,டாக்டர்.யூட் யோசேப், தமிழ்ப்பள்ளி தலைமை இயக்குநர் மகாலிங்கம் மதனராஜ் அவர்களும் சாலமன் பாப்பையா அவர்களிடம் பெற்றுக்கொண்டனர்.
பிரதம விருந்தினர் டாக்டர் யூட் யோசேப் அவர்கள் தனது உரையில், அப்துல் ஹமீத் அவர்களின், பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி தன்னை பெரிதும் கவர்ந்தது என்றார். இன்று ஜம்பவான்களா மேடையில் இருக்கும் இவர்களுடன் இருப்பேன் என்று அன்று எண்ணவில்லை என்றார். மேலும் அறிமுக உரை பள்ளிக்கூட ஆசிரியர் பிரகாஷ் குப்பன் அவர்களும், வரவேற்புரை,பள்ளிக்கூட நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன். முரளிதரன் அவர்களும் நிகழ்த்தினார்கள். நூல்கள் யாவும் 10 நிமிடங்களில் விற்று முடிந்தது விழாவின் பெரும் சாதனையாக எண்ணலாம்.
1,028 total views, 2 views today