இறக்குமதி அல்ல இவன் மதி
-மாதவி
பொறியியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் இவர்கள் எல்லாம் மேற்குலகத்தவர்கள் மட்டுமே! கண்டு பிடிப்புகளை அவர்கள் செய்ய, அதனை உபயோகிப்பவர்களாக, பயன்படுத்துபவர்களாக, நாம் இருப்போம், அதிலும் கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்த தெரிந்தாலே, நமக்கு கண்டு பிடித்தவர்களை விட பெருமை அதிகமாக இருக்கும். நம்மைச் சுற்றி இந்த பொறியியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் எந்த இடத்திலும் தலைகாட்ட மாட்டார்கள், என்ற நம்பிக்கை, எம்மோடு ஊறிப்போய்விட்டது. அப்படி யாரும் தலைகாட்டினாலும், அவர்களை, தலைதூக்கவிடாது, ஏதோ ஒரு விதத்தில் அவமானப்படுத்தி, அல்லது, தட்டிக்கொடுக்காமல்,முளையிலேயே,கிள்ளி எறிந்தும் விடுவோம்.
இத்தனைக்கும் மத்தியில் 1965 ம் ஆண்டளவில், ஒரு பொறியியல் நுட்பம் சார்ந்த ஒரு வல்லவன் நமது ஊருக்கு அருகில் கட்டுவன் கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.
குரும்பசிட்டி, குப்பிளான்,கிராமத்து மாணவர்கள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, மகாஜனா கல்லூரி, இங்கு எல்லாம் படிப்பவர்கள் அன்று பொடி நடையாக கட்டுவன் கிராமத்தை தாண்டியே செல்வார்கள். அப்படி செல்லும் போது கட்டுவன் தெல்லிப்பழை பிரதான வீதியில் காலையில் அவர் மாணவர்களுக்கு ஒரு அறிவித்தல், கொடுப்பார்.
நான் ஒரு பொருள் செய்து இருக்கிறேன், பாடசாலை முடிந்து வீடு செல்லும் போது வந்து பார்த்து, செல்லுங்கள், என்பார்.
சிலர் செல்வார்கள், சிலர் அவர் அறுவை என்று அவர் வீடுப்பக்கம் வந்ததும், விரைவாக, மறைவாகவும் ஓடித் தப்புவர். நான் பல தடவை அவரது திறைகளை பார்த்து வியந்தது உண்டு. அதனால் நான் நிச்சயமாக, அவர் சொன்னால் கண்டிப்பாக, பார்த்து செல்வது வழக்கம். ஒரு முறை நான் சென்று பார்த்தபோது அவர் இருவர் சேர்ந்து ஓடும் சைக்கிள் ஒன்றை வடிவமைத்து, அதற்கான வேலைகள் செய்துகொண்டு இருந்தார். அவரது முயற்சி வெற்றிதருமா எனக்குப் புரியவில்லை.
இவ்வளவு சிறப்பான நுட்பம் தெரிந்தவர், வெடிமருந்து கலந்து வெடி ஒன்று, புதுவருடத்திற்கு வெடிப்பதற்கு செய்த வேளை. அது தானாக வெடித்து அவரது இரு கரங்களிலும், விரல்களை துண்டாடிவிட்டது. இருந்தாலும், அவரது ஆற்றல் கடுகளவேனும் துண்டாடப்படவில்லை.
ஒரு நாள் மாலை குரும்பசிட்டியில் என் வீட்டு படலைக்குள் நிற்கிறேன்.
கண்ணன் ஓடுது பார் இரட்டைச் சைக்கிள், என்றபடி இருவர் ஒரு சைக்கிளை ஓடி வந்து என் வாசலில் நிறுத்தினர்.
என்னை கண்ணன் அன்று ஆனந்தமாக அழைத்து, தனது தயாரிப்பை காட்டியவர் யார் தெரியுமா?
அவர்தான் கட்டுவன் ஜெயராஜசிங்கம் அவர்கள்.
இப்போது உங்களில் பலருக்கு அவர் அறிந்தவராக இருக்கலாம். என்னை விடவும் அவரது பல தொழில் நுட்பங்களையும்,அதிகம் கண்டு மகிழ்ந்தவர்களாகவும், இருக்கலாம். இவர் யூனியன் கல்லூரி பழைய மாணவர்;. கடந்த மாதம் தனது 90 வயதினை சுற்றத்தார் நண்பர்களுடன் கொண்டினார். பழைய நினைவுகள் வரும் போது ஒரு சிலர் கண்டிப்பாக நினைவுகளுக்குள் வந்து போவார்கள். அவர்களில் ஜெயராஜசிங்கம் அவர்களும் ஒருவர்.
740 total views, 3 views today