எங்களின் நிஜ சூரரைப் போற்றுவோம்!
–ஜூட் பிரகாஷ். மெல்பேர்ண்
எண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.
இரணைமடுப் பகுதியில், காடழித்து விமான ஓடுபாதை அமைக்கும் வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுவளம் கப்பல்களில் குட்டியான ரடவசய டiபாவ ரக விமானமும், பகுதி பகுதியாக வந்திறங்கியது.
சமுத்திரங்களைக் கடந்து கப்பல்களில் வந்திறங்கியது, விமானங்கள் மட்டுமல்ல, விமானங்களை இயக்குவதில் பயிற்சி பெற்ற விமானிகளும் தான்.
கடல் கடந்து, தாய்நாடு திரும்பிய விமானமோட்டிகள் இருவரும் ஐரோப்பிய நாடுகளில் வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். கப்பலில் வந்த குட்டி விமானம் மேலெழத் தேவையான ஓடு தூரத்திற்கு அதிகமாகவே, 750 மீட்டர் தூரத்திற்கு, ஓடுபாதை அமைக்கப்பட்டதை, தற்செயலாக அந்த வழியாக வந்த இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் ஒன்று கண்டுவிட்டு, மிகவும் தாழப்பறந்து அவதானித்து விட்டுச் சென்ற சம்பவமும் நடந்தது.
1995ம் ஆண்டின் ஆரம்பகாலம் முதற் பறப்பிற்கு குறிக்கப்பட்ட நாளும் வந்தது. தமிழர் போராட்ட வரலாற்றில் மைல்கல்லாக விளங்கப் போகும் அந்த நாளில் காற்று பலமாக இருக்கக் கூடாது, காற்று பலமாக இருந்தால், குட்டி விமானம் பறப்பது கஷ்டம், என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்தது ஓன்றாக இருக்க, அன்று காற்று கொஞ்சம் பலமாகவே வீசிக்கொண்டிருந்தது. தேசியத் தலைவரோடு புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் அநேகர் அந்த முதற் பறப்பைக் காண, இரணைமடுவில் ஒன்று கூடியிருந்ததால், அந்தப் பிரதேசத்தைச் சுற்றி பாதுகாப்பும் பலமாகவே இருந்தது. காற்று அடங்கி, விமானத்தை வெளியே கொண்டு வந்து, என்ஜினை இயக்கினால், விமானத்தின் என்ஜின் இயங்க மறுக்கிறது. இயங்க மறுத்த என்ஜினை புலிகளின் பொறியலாளர்கள் மீண்டும் இயக்க வைக்கிறார்கள். ஐரோப்பாவில் இருந்து வந்த இரு விமானமோட்டிகளில் ஒருவர், பிரதான விமானியின் ஆசனத்தில் வீற்றிருக்க, பின்னிருக்கையில் புலிகளின் முதலாவது வான்புலிகள் அணியில் இருந்த போராளியொருவர் வீடியோ கமராவோடு ஏறி அமருகிறார்.
முதலாவது வான்புலிகள் அணிக்கு, தாயகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், இருவரை இணைக்குமாறு, தேசியத் தலைவரால், வான்புலிகளின் பொறுப்பாளராக இருந்த சங்கருக்கு வழங்கப்பட்ட பணிப்புரை முழுமையாகவே நிறைவேற்றப்பட்டிருந்தது.
750 மீட்டர்கள் நீளமான விமான ஓடுபாதை இருக்க, புலிகளின் முதலாவது ரடவசய டiபாவ ரக விமானம் மேலெழுந்து பறக்க அவ்வளவு தூரம் தேவையாக இருக்கவில்லை. காற்றில், ஒரு பட்டத்தைப் போல,பறக்கத் தொடங்கிய விமானம் மேலெழுந்த உயரத்தில் இருந்து, முல்லைத்தீவு கடற்பரப்பு தெரிந்ததாம்.
பின் ஆசனத்தில் இருந்த வான் புலிப் போராளி, தான் சுமந்து சென்றிருந்த வீடியோ கமராவில் முதற் பறப்பிலிருந்து காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருக்க, கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் தமிழீழ வான்பரப்பில் பறந்த புலிகளின் முதலாவது விமானம், தனது பரீட்சார்த்தப் பறப்பை முடித்துக் கொண்டு, தரையிறங்கத் தயாரானது.
விமானத்தின் தரையிறக்கத்திற்கு வழிசமைக்க, பாரிய சிவப்புக் கொடிகளை, விசுக்கி காட்டி விமானத்தின் தரையிறக்கத்திற்கு வழிகாட்டவென, நான்கு வான்புலிப் போராளிகள், விமான ஓடுபாதையைச் சூழவிருந்த உயர்ந்த மரங்களில் ஏற்கனவே ஏறியிருந்தார்கள்.
உயரமான மரங்களில் ஏறி நின்று, சிவப்பு நிற கொடிகளை, வீசிக்காட்டிக் கொண்டிருந்த நான்கு வான்புலிகள், கட்டுப்பாட்டுக் கோபுரமாக செயற்பட,அந்தக் குட்டி விமானம் தனது பறக்கும் உயரத்தைக் குறைக்கத் தொடங்கியது.
விமானத்தின் என்ஜின் கொடுத்த வேகத்திற்கு, எதிர்பாராமல் வீசிக் கொண்டிருந்த பலமான காற்றும் இணைந்து கொள்ள, தாழ பறக்கத் தொடங்கிய விமானம், உயர்ந்த மரங்களை உரசிக் கொண்டே, தரையை நோக்கி வேகமாகப் பறந்து வந்து கொண்டிருந்தது.
உயரமான மரங்களை உரசிக் கொண்டு, வேகமாக வந்து, ஓடுபாதையில் பலமாகவே தரைதட்டிய விமானம், தரை தட்டிய வேகம் அளவுக்கு அதிகமாவே இருந்ததால், தரையில் டிழரnஉந ஆகி, மீண்டும் வானில் பறக்கத் தொடங்கியது. யாரும் எதிர்பாராத இந்தத் திருப்பத்தை, பறப்பனுபவம் இல்லாத புலிகளின் விமானமோடி பதற்றப்படாமலே சமாளித்தார். பின்னிருக்கை சக விமானமோடியும் தனது வீடியோ கமராவை நிறுத்தி, பத்திரப்படுத்தி விட்டு, பிரதான விமானிக்கு உதவி செய்யத் தயாரானார்.
வானில் மீண்டும் சுற்றிச் சுழன்று வந்து, இரண்டாவது முறையாக, தரையிறங்க புலிகளின் முதலாவது விமானம் தயாரானது. மீண்டும் உயர்ந்த மரங்களில் ஏறி நின்ற நான்கு போராளிகள் சிவப்புக் கொடியை வீசி வீசிக் காட்ட, தரையில் நின்ற தலைமை கவலையோடு பார்த்து நிற்க, வேகத்தை குறைத்துக் கொண்டும், மீண்டும் உயர்ந்த மரங்களை உரசிக் கொண்டும், முதலாவது தரையிறக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற, இரண்டாவது முறையாக, புலிகளின் முதலாவது பறப்பு முயற்சிக்கத் தொடங்கியது.பறக்கும் வேகம் குறைத்தாகி விட்டது, மரங்களிற்கு மேலால் சிவப்புக் கொடிகள் கண்ணுக்கு தெரியத் தொடங்கி விட்டது, மேகம் தொட்ட விமானத்திற்கு, உயர்ந்த மரங்களின் கொப்புகள் தொடு தூரத்தில் வந்து விட்டது, தரையிறங்கும் விமான ஓடுபாதையும் அண்மித்து விட்டது, தரையில் நின்ற அனைவரது கவனமும் தரையிறங்கிக் கொண்டிருக்கும் விமானத்தில் குவிந்திருக்க, விமானம் தரைதட்டி, விமான ஓடுபாதையில் வேகமாகவே ஓடத் தொடங்கி, ஒருவாறு ஓடி முடித்து நிறுத்தத்திற்கு வருகிறது.
எந்தவித தொழில்நுட்ப உதவிகளுமின்றி. தரையில் இருந்து மேலெழுந்து, வானில் பறந்து, மீண்டும் விமானத்தை தரையிறக்கி விட்டு, விமானத்தை விட்டு இறங்கிய இரு விமானிகளையும், விமானத்தடியிலேயே வந்து, “தமிழன் பறந்திட்டான்” என்று முகம் மலரச் சொல்லி தேசியத் தலைவர் வரவேற்றாராம்.
புலிகளின் முதலாவது பறப்பு முயற்சிக்கு தரையில் இருந்து உதவிய வான்புலிகள் அணியில் அங்கம் வகித்த ரூபன் தான், பெப்ரவரி 20, 2009 அன்று கொழும்பைத் தாக்கிய கடைசி வான்புலிகள் கலங்களில் ஒன்றை இயக்கி, தற்கொடையான கேணல் ருபன்.எங்களின் நிஜ சூரரைப் போற்றுவோம்!
1,029 total views, 3 views today