‘கணுக்கால் சுளுக்கு’ குதிநாண் (சவ்வு) அழற்சி
Dr.எம்.கே.முருகானந்தன். இலங்கை
கணுக்கால் சுளுக்கு, பயிற்சிகள், மருத்துவம்
இது என்னடா குதிக்காலில் நாண் என்கிறீர்களா? விண் பூட்டி பட்டம் ஏற்றியது ஞாபகம் வரவில்லையா? அதில் நாண் இருந்திருக்குமே. அட அந்த விளையாட்டுத்தான் தெரியாவிட்டாலும் அர்ஜீணன் தனது வில்லிற்கு நாண் பூட்டியது கூடத் தெரியாதா?
இரண்டு முனைகளை இணைக்கும் கயிறு போன்றதை நாண் என்பார்கள். குதிக்காலில் என்ன நாண்? குதிக்கால் எலும்பைக் கல்கேனியம் (Calcaneum) என்பார்கள். முழங்காலிலிருந்து கீழ்நோக்கி வரும் கெண்டைக் கால் தசைகளை (Calf muscles) குதிக்கால் எலும்புடன் இணைக்கும் கடினமான சவ்வைத்தான் குதிநாண் (Achiles tendon) என்பார்கள். இந்தச் சவ்வில் ஏற்படும் அழற்சிதான் குதிநாண் அழற்சி. அதாவது கணுக்காலின் பின்புறமாக உள்ள தடித்த நார் போன்ற சவ்வில் ஏற்படும் அழற்சி.
அறிகுறிகள்
கணுக்காலின் பின்புறமாக வலியுடன் சவ்வு இறுக்கமாக இருப்பதே முக்கிய அறிகுறியாகும். பொதுவாக இந்த வலியானது கடுமையற்றதாக ஆரம்பித்து படிப்படியாக அதிகரித்துச் செல்லும். காலையில் எழுந்திருக்கும்போது வேதனை அதிகமாக இருக்கும். மாறாக சிலருக்கு வலியானது நடக்கும்போது ஓடும்போது அல்லது பயிற்சிகள் செய்யும் போது தோன்றுவதுமுண்டு. சிலருக்கு ஓட ஆரம்பிக்கும்போது வலி இருக்கும் பின் ஓடும்போது தணிந்து ஓடி முடிந்த பின் தீவிர மாறுவதும் உண்டு.
படி ஏறுவது, கடைத்தெருவிற்கு செல்வது போன்ற நாளாந்த நடவடிக்கைகளைக் கூட இந்த நோய் பாதிக்கக் கூடும். ஆனால் ஒரு சிலருக்கு வலி கடுமையாக இருப்பதில்லை வலியுள்ள இடத்தில் கை வைத்துப் பார்த்தால் அங்கு குதிநாண் சவ்வானது சற்று வீங்கி திரiணாக இருப்பதை உணர்வீர்கள். சற்று அழுத்திப் பார்த்தால் வலி அதிகமாகும். குதிநாண் வலியானது எவருக்கும் ஏற்படக் கூடும். நூறு பேரை எடுத்துக் கொண்டால் அதில் ஆறு பேர் தமது வாழ்நாளில் எப்பொழுதாவது இந் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆண்களில் அதிகம் என்கிறார்கள்.
இந்நோயால்; அதிகம் பாதிப்புறுவது பொதுவாக விளையாட்டு வீரர்கள்தாம். கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவர்களிலும் வருவதுண்டு. பொதுவாக 30 முதல் 40 வயதானவர்களையே அதிகம் பாதிப்பதாக சொல்லப் பட்டபோதும் சறு;று வயது கூடியவர்களில் அதிகமாக காணக் கூடியதாக இருக்கிறது. இந்த நோயை சரியாக நிர்ணயிக்க மருத்துவர்களுக்கு பரிசோதனைகள் எதுவும் தேவைப்படாது.தெளிவாகக் கேட்டறிவது தொட்டறிவது பேன்றவற்றுடன்கண்டுபிடித்துவிடுவார்கள்.சிலதருணங்களில் ultrasound,scan, MRI,scan போன்றவை தேவைப்படும்.
ஏன் ஏற்படுகிறது
இது ஏன் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் குணப்படுத்துவதும் அது ஏற்படாமல் தடுப்பதும் சுலபமாகும்.
மீண்டும் மீண்டும் குதிக்கால் நாணில் ஏற்படும் மிகச் சிறிய ஊறுகளின் தொடர்ச்சியாகவே வலியும் வீக்கமும் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. தேன்றிய சிறு ஊறுகள் குணமடைவதற்கு முன்னதாகவே ஏற்படும் மேலும் புதிய சிறு ஊறுகளின் ஒட்டுமொத்தமாகவே இந்நோய் தோன்றுகிறது.
ஒருவரது எத்தகைய நடவடிக்கைகள் அவ்வாறான உறுகளை ஏற்படுத்துகிறது?
அளவிற்கு அதிகமாக அதற்கு வேலை கொடுப்பதால் எனப் பொதுவாகச் சொல்லலாம். தினசரி ஓடுபவர்கள், நடனமாடுபவர்கள், டெனிஸ் போன்ற விளையாட்டுகளில் அடிக்கடி ஈடுபடுபவர்களை உதாரணம் காட்டலாம்.
பயிற்சிகள் செய்யும்போது அதற்குப் பொருத்தமான பாதஅணிகளை அணிவது காரணமாகலாம். மாறாக பயிற்சிகளின் போது அவதானிக்க வேண்டிய சரியான உத்திமுறைகளை அனுசரிக்காதது ஏறுமாறகச் செய்வதும் காரணமாகலாம்.அதேபோல பயிற்சிகள் செய்பவர்கள் அவற்றின் வேகத்தை திடீரென அதிகரிப்பது, அடிக்கடி செய்ய முனைவது போன்றவையாலும் தோன்றலாம். ஏற்றமான தரைகளில் பயிற்சி செய்வது மற்றொரு காரணமாகும். ஆனால் பலருக்கு தெளிவான காரணங்கள் தெரிவதில்லை. ஒரு சிலருக்கு அவர்களது பாதத்தின் இயல்பான வளைவானது அதிகமாக இருப்பதும் ஒரு காரணமாகும்.
சிலவகை மூட்டு வாதங்கள் உள்ளவர்களில் (ankylosing spondylitis,psoriatic arthritis) இது ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.
மருத்துவம்
உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது என்ன? கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவராயின் அதனை நிறுத்தி குதிநாண் சவ்விற்கு சற்று ஓய்வு கொடுங்கள். வலி தணிந்து வர மீண்டும் பயிற்சிகளை சற்று தீவிரம் குறைந்த அளவுகளில் செய்ய ஆரம்பிக்கலாம். வலியின் ஆரம்ப நிலையில் ஐசை பொட்டணமாகக் கட்டி குதிநாண் சவ்விற்கு மேல் வைக்கலாம். மெல்லிய பிளாஸ்டிக் பைகளில் அல்லது டவலில் ஐசைப் போட்டுக் கட்டி வலியுள்ள இடத்தில் 10 முதல் 30 நிமிடங்கள் வரை வைக்கலாம். வலி ஏற்பட்ட முதல் ஓரிரு நாட்களில் இது அதிக பலனைக் கொடுக்கும். வலி நிவாரணிகளை சில நாட்களுக்கு உபயோகிக்கலாம். இவ்வாறு செய்வதால் வலியின் தீவிரம் புரியாமல் நீங்கள் தொடர்ந்து குதிநாணுக்கு அதிக வேலை கொடுத்தால் நோய் தீவிரமாகும் ஆபத்து உண்டு என்பதையும் மறுப்பதற்கு இல்லை. சில விசேட பயிற்சிகளை செய்வதன் மூலம் குதிக்கால் நாண் வலியைத் தணிப்பதுடன் அதை உறுதியாக்கவும் முடியும்.
மாடிப்படி பயிற்சி
மாடிப்படித் தட்டின் அடிப்படியில் மாடிப்படியைப் பார்த்த வண்ணம் நில்லுங்கள். கால்களை சற்று அகற்றி வைத்து பாதத்தின் முன் பகுதி மட்டும் படியில் ஊன்றும்படி நில்லுங்கள். இப்பொழுது உங்கள் குதிக் கால்கள் படியின் ஓரத்திலிருந்து வெளியே தொங்கிக் கொண்டிருக்கும். விழுந்துவிடாமல் இருக்க ஓரக் கம்பிகளைப் பற்றிக் கொண்டு குதிப்பகுதியை கீழ் நோக்கி வளையுங்கள். 20-60 செகண்டுகள் அந்த நிலையில் நில்லுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்கள் கெண்டை தசைகள் இறுகுவதை உங்களால் உணர முடியும். 6 தடவைகள் அவ்வாறு செய்யவும். தினமும் காலை இதைத் தொடரவும்.
டவல் பயிற்சி
காலையில் படுக்கையை விட்டு எழந்தவுடன் செய்யுங்கள். விரல்களை அண்மித்த பாதத்தின் முன் பாகத்தில் ஒரு டவலை கொழுவுங்கள். இப்பொழுது டவலை உங்களை நோக்கி இழுங்கள். இவ்வாறு செய்யும்போது உங்கள் விரல்களும் பாதத்தின் முற்பகுதியும் உங்களை நோக்கி இழுபடும். அவ்வாறு இழுக்கும்போது முழங்கால்கள் மடியாது நீட்டியபடி இருப்பதை உறுதி செய்யுங்கள். 30 செகண்டுகள் அவ்வாறு வைத்திருங்கள்.
பாதத்தை உயர்த்தும் பயிற்சி
முழங்கால்களை செங்குத்தாக மடித்து இரண்டு பாதங்களும் தரையில் பதியுமாறு ஒரு நாற்காலியில் உட்காருங்கள். இப்பொழுது குதிக்கால்கள் தரையில் பதிந்திருக்க பாதத்தின் முற்பகுதியை மட்டும் மேல் நோக்கி உயர்த்துங்கள். சில செகண்ட்கள் அவ்வாறு இருந்தபின் பாதத்தைத் தளர்த்தி முன்போல கீழே வையுங்கள். 10 தடவைகள் திரும்பத் திரும்பச் செய்யுங்கள். அவ்வாறு தினசரி 6 தடவைகள் செயு;யுங்கள்
வேறு சிகிச்சைகள்.
ஸ்டிரொயிட் ஊசி மருந்தை அவ்விடத்தில் ஏற்றுவதை சிலர் செய்தபோதும், சவ்வு மேலும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால் பெரும்பாலான மருத்துவர்கள் விரும்புவதிலலை. அரிதாக சத்திர சிகிச்சை செய்யப்படுவதுண்டு. குதிநாண் வலியானது படிப்படியாக அதிகரிக்கும் என ஆரம்பதத்தில் கூறினோம். மாறாக திடீரேன ஏற்படும் வலியானது அத்தசை நாரில் கிழிவு (Achilles Tendon Rupture) ஏற்பட்டதால் இருக்கலாம். இது பொறுத்திருக்கக் கூடிய நிலையல்ல. அவசரமாக மருத்துவரை அணுக வேண்டியது. அதற்கு சத்திர சகிச்சை தேவைப்படலாம் அல்லது பிளாஸடர் ஒவ் பாரிஸால் சாந்து (Plaster Of Paris cast) போட்டு அச்சவ்விற்கு ஓய்வு கொடுக்க நேரலாம். எதற்கும் உங்கள் மருத்துவரை நேரே அணுகி தெளிவு பெறுவது அவசியம்.
1,111 total views, 3 views today