நமது வாழ்க்கையில் பல நடுப்பக்கங்கள் நம்மை வந்து சந்திக்கின்றன!
சேவியர்.தமிழ்நாடு
நடுப்பக்கம் என்பது வசீகரமானது ! முன்பெல்லாம் பத்திரிகைகளை வாங்கினால் பெரும்பாலானவர்கள் முதலில் புரட்டிப் பார்ப்பது நடுப்பக்கமாகத் தான் இருக்கும். பத்திரிகைகளின் நடுப்பக்கத்தில் என்ன வருகிறது என்பதை வைத்தே அந்தப் பத்திரிகையின் தரத்தை நிர்ணயம் செய்வார்கள். அரைகுறை உடையுடன் கவர்ச்சிப் படம் இருந்தால், அது தரம் குறைந்த பத்திரிகை என்று சிந்தனை வாதிகள் ஒதுக்கி வைப்பார்கள். அதே பத்திரிகையை விடலைகள் விரும்பி வாங்குவார்கள்.
நடுப்பக்கம் என்பது நடுநிலமை. ஒரு கடிகாரத்தின் மையமே அதன் ஆரங்கள் அசைந்து திரிய உதவியாய் இருக்கிறது. ஒரு தராசின் நடுப் பாகமே அதன் நடுநிலை தவறாமையை பறைசாற்றுகிறது. அதனால் தான் எந்தப் பக்கமும் சாயாத சிந்தனையை நடுநிலை சிந்தனை என அழைக்கிறார்கள்.
நமது வாழ்க்கையில் பல நடுப்பக்கங்கள் நம்மை வந்து சந்திக்கின்றன. வயதின் பயணத்தில் ஓடித் திரிபவர்களை சட்டென நிறுத்தி அசரடிப்பதில் இந்த நடு வயதிற்கு முக்கிய பங்கு உண்டு. கேளிக்கைகளும், உற்சாகமும், பட்டாம்பூச்சி பறக்கும் இளமையும் முடிந்து போக முதுமையின் முற்றத்துக்குள் பாதம் எடுத்து வைக்கும் கணம் இந்த நடுவயதின் சிறப்பம்சம். இளமையில் உழைத்தவர்கள் நடுவயதில் நிம்மதியாய் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். சிறுவயதில் நிம்மதியாய் இருந்தவர்கள், நடு வயதில் கடுமையாய் உழைக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம்.
நடுநிலை சிந்தனை நமக்கு எப்போதுமே இருக்க வேண்டிய ஒரு விஷயம். ஆனால், உளவியல் என்ன சொல்கிறதென்றால், நடுநிலமை என்று ஒரு விஷயமே கிடையாது. ஒருவருடைய சிந்தனை இந்தப் பக்கம் சாயலாம், அல்லது அந்தப் பக்கம் சாயலாம். ஆனால் இரண்டுக்கும் இடையே நடுவில் ஒரு சிந்தனை என்று ஒன்று கிடையாது. வெங்காயத்தின் தோலை உரிப்பது போல உரித்துப் பார்த்துக் கொண்டே வந்தால், கடைசியில் ஒரு பக்கமாய் நம் தராசு சாய்ந்து கிடப்பதை அறியலாம்.
அம்மாவுக்கும், மனைவிக்கும் இடையே சண்டை நடக்கும்போது நடுநிலையாய் நிற்கிறேன் என ஒருவர் சொன்னால் அது பொய். வெளியே நடுநிலமையாய் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் முட்டி மோதும் அவனது உணர்ச்சிப் போராட்டம் அவன் ஒருவருக்குச் சார்பாய் நிற்பவன் என்பதை உணர்த்தும். ‘நீங்களே பாத்துக்கோங்க’ என சகஜமாய்க் கடந்து போவதாய்த் தோன்றினாலும், பிரச்சினை வேண்டாம் எனும் அவனது அடிப்படை முடிவே அங்கே வெளிப்படும்.
ஆனால், நடுநிலமையை நோக்கிய பயணம் சாத்தியமானதே. உதாரணமாக இரண்டு பேர் பிரச்சினைகளோடு நம்மிடம் வந்தால் இருவரும் பேசுவதை முழுமையாய்க் கேட்பதில் நமது நடுநிலமையை உணர்த்தலாம். ஒருவருடைய பேச்சை மட்டும் கேட்டு உடனே மனதுக்குள் ஒரு முடிவை எழுதிவிட்டால், அடுத்த நபர் பேசுவதையே நாம் உன்னிப்பாய்க் கேட்க மாட்டோம்.ஏற்கனவே முடிவெடுத்து வைத்திருப்பதை ஒட்டியே நமது சிந்தனை அலைபாயும். நடுநிலமையின் முதல் அம்சம், முழுமையாய் அறியாமல் ஒரு விஷயத்தை அணுகக் கூடாது என்பது தான்.
ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருப்பது போல, எந்த ஒரு செய்திக்கும் இரண்டு பக்கம் இருக்கும். எந்த ஒரு நியாயத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கும். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கோணத்தில் அணுக வேண்டும்.
திருட்டு – தவறு என அடித்துச் சொல்லும் நாம், பசியில் ஒரு குழந்தை ரொட்டி திருடுவதை திருட்டு என அழைத்து தண்டனை கொடுக்கக் கூடாது. அது மனிதத்தை மீறிய செயல். அந்தக் குழந்தையின் தேவையை சந்திக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திப்பது அங்கே நடுநிலமை ஆகிறது. காரணம், இங்கே மையைப்படுத்தப்பட வேண்டியது சட்டமல்ல, மனிதம். நமது வாழ்க்கையின் மையத்தில் எது இருக்கிறது. நமது வாழ்க்கை நூலின் நடுப்பக்கத்தில் எது எழுதப்பட்டிருக் கிறது என்பதை வைத்து நமது வாழ்க்கை எப்படிப்பட்டது, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
ஆன்மிக வாதிகளைப் பார்த்தால்,அவர்களுடைய மையத்தின் பரம் பொருளே அமர்ந்திருப்பார். அந்த மையத் திலிருந்தே அவரது வாழ்க்கைக்கான உத்வேகத்தை அவர் பெற்றுக் கொள்கிறார். கடவுளின் கருணை என்றோ, அருள் என்றோ, கடைக்கண் பார்வை என்றோ தான் அவர் தன்னுடைய வாழ்வின் நன்மைகளை அளவிடுகிறார். வான் வரை பறந்தாலும் தரையில் வந்து விழும் கவண் கல்லைப் போல, எங்கெங்கோ சுற்றினாலும் அவர் கடவுள் எனும் மையத்தில் வந்து சரணடைகிறார்.
போராளிகளைப் பார்த்தால் விடுதலை வேட்கை அவர்களுடைய மையமாக இருக்கும். நியாயமான உரிமைகள் மறுக்கப் படும்போது போராடவேண்டும் எனும் உத்வேகம் அவர்களிடம் கொப்பளிக்கும். அவர்கள் அந்த மையத்திலிருந்தே தங்கள் செயல்களுக்கான உறுதியைப் பெற்றெடுக்கிறார்கள். ஏழைகள் நசுக்கப்படும் போதும், மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் மக்கள் துன்புறுத்தப்படும் போதும் அவர்கள் தங்கள் மையத்தை எட்டிப் பார்க்கிறார்கள். அடுத்த போராட்டத்துக்கான விதையை விதைக்கிறார்கள்.
மனிதநேய மனிதர்களைப் பார்த்தால், அவர்களுடைய மையம் நேசத்தினால் நிரம்பியிருக்கும். அவர்களுடைய கிளைகள் எங்கே பரவினாலும் அவை நேசத்தின் கனிகளையே விடுவிக்கும். அந்த கிளைகளுக்கான நீர், மையத்திலிருந்தே வேர்கள் வழியாய் இலைகளுக்குப் பரவும். எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் அவர்கள் தங்களுடைய மையத்தைக் கேட்பார்கள். இந்த செயலைச் செய்யலாமா வேண்டாமா ? எனும் கேள்வி அவர்களை வழிநடத்தும். எந்தச் செயல் மனிதத்தை மீறும் செயலாய் இருக்கிறதோ அதை அவர்கள் விட்டு விடுகிறார்கள். எது மனிதத்தை நோக்கிய பயணமோ அதை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
நமது மையம் எங்கே இருக்கிறது !
பணம் நமது மையமாய் மாறும்போது,நமது வாழ்வின் ஓட்டம் பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்திப் பயணிக்கிறது !
புகழ் நமது மையமாய் மாறும் போது, நமது வாழ்க்கை பிறருடைய பாராட்டு, அங்கீகாரம் என பயணிக்கிறது.
போதை நமது. மையமாய் மாறும் போது, அதைத் தேடிய ஓட்டங்களே நமது வாழ்க்கையாய் மாறிப் போகிறது !
அன்பு நமது மையமாய் மாறும் போது, அன்பின் செயல்களை நோக்கிய பயணமே நம்மை வழிநடத்துகிறது !
நடுப்பக்கம் என்பது நமது வாழ்க்கையை தாங்கிப் பிடிக்கும் அச்சாணியைப் போன்றது. ஒரு வண்டிக்கு அச்சாணி எவ்வளவு தேவையோ, நமது மையம் அவ்வளவு முக்கியமானது. அந்த மையத்தை நாம் மனித நேயத்தால் நிரப்புவோம். மனித நேயத்தால் அமைகின்ற வாழ்க்கையே நடுநிலமையான வாழ்க்கை. அதுவே நடுப்பக்கம் போல அழகானது. அதுவே அன்பின் செயல்கள் அவனியெங்கும் பரவ துணை செய்யும். ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வின் மையத்தை மனிதத்தின் கையில் ஒப்படைத்தால் அதன் பின் எழுகின்ற செயல்களால் பூமியின் பாதைகளெங்கும் மலர்கள் தூவப்படும். வெறுப்பும் துரத்தப்படும்.
நம்மைக் கவனிப்போம், நம் மையத்தைக் கவனிப்போம். சமூக,சாதீய வேறுபாடுகளைக் களைந்து அன்பில் ஒன்றிணைவோம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
907 total views, 2 views today