மலையக அரங்கின் சில சமகால போக்குகள்.
செல்வி.பாலேந்திரன் பிரதாரிணி. நாவலப்பிட்டி
மலையக மக்களின் தொழில் புலப்பெயர்வானது 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இம் மக்களுக்கென தனித்துவம் இன்றும் பேணப்படுகிறன. காலனித்துவ ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்ட உற்பத்திக்காகக் கொணரப்பட்ட இத்தொழிலாளர்கள் தமக்கென தனித்துவ கலைக்கலாச்சாரங்களையும் கொணர்ந்தனர். மலையகத்தில் சடங்காற்றுகை அரங்கு கல்வியல் அரங்கு தொழில்முறை அரங்கு என பல தளங்களில் இன்று நாடகம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குள் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது. ஈழச் சுதந்திரத்துக்குப் பின் தோன்றிய மலையக இலக்கியங்கள் தனிச்சிறப்பு பெற தொடங்கின. காரணம் அவை இனத்துவ அடையாளத்தை முதன்மைப் படுத்தியதாக காணப்பட்டன. ஈழத்தில் வாழும் தமிழர் மத்தியில் மலையகத் தமிழரின் இன அடையாளம் பண்பாடு பொருளாதார என்பன வித்தியாசப்படுவது அதுமட்டுமின்றி மலையக மக்களின் வாழ்வியலும் பெரும் பிரச்சனைக்கும் சவாலுக் குரியதாகும். மலையக இலக்கியங்களை நோக்கும் போது அம்மக்களின் தனித்துவமே இலக்கிய அறுவடையை தீர்மானிக்கின்றன. இம்மக்களின் வருகையுடனேயே வாய்மொழி இலக்கியங்களும், ஆடல் பாடல் நிறைந்த பொழுதுபோக்கு ஆற்றுகைகளும் இவர்களிடத்தே முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. அது மட்டுமன்றி கூத்துக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மலையக சமூகம் தனித்துவ இலக்கிய போக்கை கொண்டுள்ளது. இந்த வகையில் நாடகக் கலையும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்றைய சமகாலத்தில் இக்கலையானது தனி பண்பாடு தனி அடையாளம் என்பவற்றை மருதலித்து பொதுமை, பன்மை என்ற எண்ணக் கருவில் செயற்பட்டு வருகின்றது. உண்மையில் தனித்துவம் என்பது சிறப்பானதாக கருதப்பட்டாலும் அது மிகக் குறுகிய கண்ணோட்டத்தையே ஏற்படுத்தும். இனவெறியை நீக்குதல் மற்றும் புரிதல் ஆகியன நாடகத்தில் முக்கிய கதைக் கருவாக பேசப்படுகின்றன. இவ் வெண்ணக்கரு பற்றிய புரிதலை பாதுகாப்பான தளத்தில் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் நாடகக்கலை முக்கிய மூலப் பொருளாக இருக்கின்றது. வெவ்வேறு அம்சங்களை உள்ளடக்கியது சமூகங்களுக்கிடையிலான புரிதலின்மை, மோதல், தவறான தகவல், தனித்தன்மை போன்ற சிந்தனைகளால் இவை ஊக்குவிக்கப்படும் சந்தர்ப்பம் அதிகம். நாடக கலைஞர்கள் இம் முக்கிய புள்ளியில் இருந்து அவர்களின் சொந்த அனுபவங்கள் அல்லது கருத்துக்களை விவாதிக்க முடியும். மேலும் பாலர் பாடசாலையில் வித்தியாசங்களை கொண்டாடுவோம் (Celebrating our Difference) என்ற கருப்பொருளில் நானும் மற்றவர்களும் (my self and others) புதுமையான விடயங்களை கற்றல் செயல்பாடுகள் மூலமாக மாணவர்கள் உணர்வதற்கான சமூக பன்முகத் தன்மைகளை “போல செய்கின்றார்கள்”. சிறுவயதிலிருந்தே முற்போக்கான சிந்தனையை நாடகம் வளர்த்தெடுக்கின்றது.
மனித உரிமை பற்றிய விழிப்புணர்வையும் மனித வாழ்வுக்கான முன்னேற்றத்தையும் நாடகத்தில் எவ்வாறு வாதிடலாம் அல்லது பயன்படுத்தலாம் பற்றிய சிந்தனைகள் புவியியல் அம்சங்கள், நாடகக் கதை கரு, கலைஞரின் கருத்தியல், சிந்தனை, நிகழ்வுகளின் பாதிப்பு போன்ற தலங்களில் இருந்து உருவாக்கப்படுகின்றது. இவை படைப்பாற்றல் மற்றும் குழு ஒத்துழைப்பின் மூலம் சமூகத்தை நேரடியாக சென்றடைகின்றது. சமூகத்தில் நாடக கலைஞரின் பங்கு என்ன என்பதை விளக்கும் முக்கிய அறிக்கைகளும் தயாரிக்கப்படுகின்றன. மேலும் மலையகத்தில் காணப்படுகின்ற பிரச்சனைகளை மையப்படுத்தும் நோக்கில் கலைஞர்கள் தீவிர கலந் துரையாடல் மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் சக கலைஞர்களின் ஒத்துழைப்பையும் சமூக ஒருங்கிணைவயும் வாய்ப்புகளையும் அதில் உள்ள சிக்கல்களையும் கோடிட்டு காட்டுவதன் மூலம் பார்வையாளர்களின் உணர்ச்சி மற்றும் சிந்தனை தூண்டப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் பார்வையாளர்கள் ஆற்றுகை யாளராகவும் மாறுகின்றனர். இன்று மலையகத்தில் பெரும்பாலான தோட்ட பகுதிகளில் விழிப்புணர்வு சார்ந்த வீதி நாடகங்கள் முக்கிய மைய இடத்தை பெற்றிருக்கின்றன. மலையக அரங்கை பொறுத்த அளவில் தனி சமூகப் பிரச்சனை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழரின் பிரச்சனைகள் பேசப்பட்டு அவை பெருந்தோட்ட துறை மக்களை ஊக்குவிப்பதாகவும் உள்ளூர் மற்றும் தேசிய மட்டத்தில் பேசு பொருளாக மாறக்கூடிய முறையில் இன்று மலையக நாடகப் போக்குகள் காணப்படுகின்றது.
pradharani92@gmail.com
1,019 total views, 4 views today