ஈழத்து கவிதை பரப்பிலும் பாடல் வெளியிலும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள்!
வெற்றி. துஷ்யந்தன்
ஈழத்து கவிதை பரப்பிலும் பாடல் வெளியிலும் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்னும் இலக்கிய படைப்பாளி பெறுகின்ற வகிபாகம் என்பது அதுவொரு வரலாற்று பெறுமானம்.
புதுவை முதலில் ஈழத்தின் தலைசிறந்த ஒரு இலக்கிய படைப்பாளி. அதன் பின்னர் தான் அவர் அமைப்பியல் சார் ஒரு அங்கத்துவன். இங்கு இன்று புதுவையின் படைப்பை பற்றியும்,அவரின் பெறுமானங்களை பற்றியும் பொதுவெளியில் பேசுவதற்கும் எழுத்துத் தளத்தில் பதிவதற்கு பலர் விரும்புவதில்லை. எவ்வளவுதான் காரணங்களை காட்டி ஒரு படைப்பாளனை மறைக்க முனைந்தாலும் அந்த தனித்த ஆலமரம் விழுதுகள் வழியாகவும் படைப்பின் வாயிலாலாவும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.
வெறும் பிரசார உத்தியை முன்னிறுத்திய படைப்புக்கள் மாத்திரம் தான் அவர் எழுதினார் ,எந்த புதுவித உத்திகளையும் கொண்டுவரவில்லை என்று இன்றும் செல்வோருக்கு இந்த நாமம் என்றுமே அலேர்ஜிக் தான் என்பது உண்மை.புதுவையின் பாடல்கள், கவிதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு தளத்தில் புதுமையை முன்னிறுத்தியவை .
எத்தனையோ எழுச்சிப்பாடல்கள் சிறப்புற தந்த புதுவையின் விரல்கள் சில மொழி விளையாட்டுக்களையும் அவ்வப்போதுகளில் பாடல்களில் செய்திருக்கின்றது . அருணகிரிநாதரின் திருப்புகழை ஒட்டி அதன் சாயலில் இன்று தமிழ் திரையிசையில் வைரமுத்து,மதன் கார்க்கி,விவேக் போன்றவர்கள் எழுதுகின்ற பாடல்களை நாம் சம காலத்தில் கண்டும் கேட்டும் இருக்கின்றோம்.
ஆனால் அதைக்கூட அவர் மிகச்சிறப்பாக தன் விரல்களினால் அன்றே ஒரு பாடலில் வெளிப்படுத்துகின்றார்.
ஆம்” வரும் பகை திரும்பும் “என்னும் இறுவெட்டில் ஒரு பாடல் அமையப்பெற்றிருக்கும் பின்வருமாறு ..
“கிட்டுப் படையணி குட்டிச் சிறியணி
கொட்டும் எறிகணை விடிகாலை -நீ
பத்தைக் கருகினில் செத்துக் கிடவினி
முத்திக் கொருவழி முகமாலை
கைதடி நாவற் குழிவரை -அட
கரவெட்டி தெல்லி பளைவரை
தையிட்டி கீரி மலைவரை -எறி
கணைவரும் உங்கள் அறைவரை “
உண்மையில் இந்த வரிகளை இசையின்றி வாசிக்கும் போதே இந்த நடையில் எவ்வசனம் வரினும் அழகாய் தான் தெரியும் ஆனால் இது இசையோடு பாடலாய் பரிணமிக்கும் போது அதன் இரசனை வேறு.
தாயக இசையமைப்பாளர் இசைப்பிரியனின் அற்புதமான இசையிலும் சுகுமார் ,திருமலை சந்திரன் ஆகியோரின் குரலிலும் அமையப்பெற்ற இப்பாடல் இன்றும் இனிமைதான்.
ஒருதரம் இசையமைப்பாளர் இசைப்பிரியன் அண்ணரோடு பேசுகின்ற போது இந்த பாடலுக்கு எப்படி மெட்டுக்கட்டி இசையமைத்தீர்கள் என்ற என் அவா நிறைந்த கேள்வியை கேட்டு அந்த சுகானுபவத்தை பெற்றுக்கொண்டேன்.
இரசனை என்பது ஆளாளுக்கு வித்தியாசமானது. ஆகா இந்த பெரும் படைப்பாளி தான் சார்ந்த படைப்புக்களில் புதுமையையும் தன் புலமையையும் எப்போதுகளிலும் தந்துகொண்டுதான் இருந்தார் என்பது தான் நிதர்சனம்.
ஒரு வட்டத்துக்குள் வைத்து பார்க்கபோடவேண்டியவரல்ல புதுவை. தமிழ் வாழும் அத்துணை தேசங்களிலும் கொண்டாடப்பட வேண்டிய எங்கள் தேசக் கவிஞர் அவர்.
புதுவையின் இன்னும் ஒரு பாடல், அன்று எங்கும் ஒலித்தது. இப்பாடலை தென்னிந்திய திரைப்படப்பாடகர் மனோ-வாணிஜெயராம் ஆகியோர் இணைந்து பாடினர். அதன் சிலவரிகள்…
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் அவள்
கையில் கூட ஆயுதங்கள் ஏறும்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை
நான் நீண்டநேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை
ஊர் முழுதும் ஓலம் நான் உறங்கி வெகு காலம்
உறங்கி வெகு காலம் நீ ஓடி வந்தால் போதும்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில்..
ஒரு காதல் என்ன மாலை என்ன இந்த
வேளையில்
எங்கள் புலி வீரர் அவர் இருக்கும் இடம் போறேன்..
சான்றுக்கு இரு பாடலே தவிர ரசனையாய் இன்னும் தேடலாம். ஈழத்து இலக்கிய பரப்பில் அவர் என்றைக்கும் ஆலமரம் தான்.
புதுவை ஐயாவின் அகவை நாள் கடந்த 03.12.2022.
931 total views, 2 views today