குடை
வடிவேலு. வடிவழகையன்-இலங்கை
குடையாய்த் தொங்கினால்
பெயர்.
குடையத் தொடங்கினால்
வினை.
ஒருகுடைக்குள் கொண்டுவந்தால்
ஆதிக்கம்
ஒருகுடைக்குள் ஒருங்கிணைத்தால்
அரவணைப்பு
இதை வாங்கித்தந்தாலே
பள்ளிக்குப்போவோம் என்று
அடம்பிடித்த பருவத்தில்
குடையொரு
இலஞ்சப்பொருளாயும்,
கலியாணத் தரகர்களின்
கனத்த அடையாளமாயும்,
அந்தரித்தவழியில்
அபலைப்பெண்களின்
ஆயுதமாயும் கூட
அவதாரமெடுத்திருக்கிறது
மழையில் நனையக்கூடாதென்று
குடைபிடித்துக்கொண்டுபோகும்
காதலருக்கு மட்டும்
குடைக்குள்ளும்
மழையடித்துக்கொண்டிருக்கிறது.
மழைக்கும் வெயிலுக்கும்
பாதுகாக்குமென்று நினைத்த
குடைகள்தான்
சிலவேளைகளில்
முத்தங்களுக்கும் பாதுகாப்பரணாகும்
விபரீதம் விளைகின்றது.
முந்தாநாள் பெய்த மழைக்கு
நேற்றுமுளைத்த காளான்களும்
குடைபிடித்துக்கொண்டிருக்கின்றன.
அதுசரி…
அதற்குக்கீழே
யார்தான் அமர்ந்திருக்கிறார்களோ?
உதவியாளர்களில்லாமல்
புறப்படமுடியாத
உயர்ந்தவர்கள் பலர்
குடைபிடிக்க சிலரை
கூட்டிக்கொண்டு திரிவதாய்
குறும்பாக சொல்வதுண்டு.
குடைக்குள் இருப்பவரிடம் போய்
காரியத்தைச் சாதிக்க
முதலில்
குடைபிடிப்பவருக்கு
குடைபிடிக்கவேண்டியிருக்கிறது
இந்நாளில்.
குடைக்குள் இருந்து
குஞ்சரம் ஊர்ந்த பலர்
குடைசாய்ந்து போனதும்
இந்தக்
குடைபிடிப்பவர்களால் என்பது
கொஞ்சம்
குடைகிற உண்மை.
வெண்ணிலாவை
எதிரிப்படைகளின்
வெண்கொற்றக் குடையென்றுநினைத்து
கால்களில்போட்டு மிதிக்க
களிறொன்று
கோபாவேசங்கொண்டு
தும்பிக்கையைத் தூக்கியதாக
ஒரு போர்க்களம் சொல்கிறது.
மழைக்கு நல்ல குடையென
மலையையே குடையாகப் பிடித்த
தேசத்தில்தான்
குடையே இல்லாமல்
மழையில் நனைந்துகொண்டிருப்பவர்களும்
இருக்கிறார்கள்.
குடை குடையென்று
குடைந்துதான்
சிலரிடம்
கூடை கூடையாய்
உண்மைகளைப் பெற
வினையாற்றவேண்டியுள்ளது.
பாவித்தபின்
எறிந்துவிடும் குடையாய்
சிலரை சிலர் பாவிப்பதால்தான்
சிலவேளைகளில்
சிலருக்கு
குடையைக்கண்டாலே
குமட்டிக்கொண்டு வருகிறது.
இருந்தாலும்,
குடை திருத்தும் தொழிலால்
சில குடும்பங்கள்
இன்னமும்
குடல் கழுவி வருவதையெண்ணி
குடைபிடிப்பதை
அங்கீகரித்துத்தான் ஆகவேண்டியுள்ளது.
795 total views, 2 views today