வீட்ல் சும்மாதான் இருக்கிறேன்!

பிரியா.இராமநாதன் .இலங்கை.

வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது அடிக்கடி நான் அவதானித்தவோர் விடையம் அழைப்பெடுக்கும் பெண்களிடம் ஓலிபரப்பாளர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என வினாவினால் “சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்’’என்று கூறுவார்கள். உண்மையில், இவர்கள் எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சும்மாதான் உட்கார்ந்திருக்கிறார்களா?

யதார்த்தத்தில், இந்த பெண்கள் தங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் முன் விழித்தெழுந்து, எல்லோருக்கும் பின் உறங்கச் செல்லுபவர்களாகவும், இந்த விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடைப்பட்ட காலம் முழுவதும் வீட்டில் உள்ள சமையல், பாத்திரம் தேய்த்தால், துணி துவைத்தல், வீட்டை, வீட்டை சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்பவர்களாக, குழந்தைகளை பராமரிப்பவர்களாக, வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களை பாராமரிப்பவர்களாக, விருந்தினர்களை கவனிக்கவேண்டியவர்களாக, செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் வீடுகளாயின் அந்த பிராணிகளின் பொறுப்பாளர்களாகவும் கக்கூஸ் கழுவுவபர்களாக, அயர்ன் செய்பவர்களாக , மளிகை வாங்கிவருபவர்களாக என தொடர்ந்தும் வீட்டு வேலைகளை நிமிட இடைவெளியின்றி செய்பவர்களாகவே இருப்பார்கள். தொலைகாட்சி பார்த்துக்கொண்டே கையில் ஏதாவது வீட்டிற்கான தேவையை செய்துகொண்டிருக்கும் பெண்கள், இரவில் அரைகுறை நித்திரையுடன் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பெண்கள் என ஏராளம் பெண்கள் நம் மத்தியில் நிறைந்திருக்கிறோம் . ஒரு குறிப்பிட்ட வேலை என்றில்லாமல், வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு செய்யவேண்டிய கட்டாயம் அநேகருக்கு இருக்கும் . இப்படி நீண்டுகொண்டே செல்லும் வேலைகளை நிற்க நேரமின்றி செய்துகொண்டிருக்கும் பெண்களால் எப்படி அவ்வளவு சுலபமாக “வீட்ல சும்மாதான் இருக்கிறேன் ” என சொல்ல முடிகின்றது ?! விடை மிகச் சுலபம், இவர்கள் அனைவரும் சம்பளமின்றி வேலை பார்க்கும் வேலைக்காரிகள்!!! “வீட்ல சும்மாதானே இருக்கிறாய் வெட்டியாக “என காலம்காலமாக சொல்லப்பட்டு அது ஆழ்மனதில் பரம்பரைபரம்பரையாக பதியப்பட்டதால் ஏற்பட்ட தயக்கமும் தாழ்வுமனப்பான்மையும்தான் எடுத்த எடுப்பில் “வீட்ல சும்மாதான் இருக்கேன் “என சட்டென்று சொல்லவைத்துவிடுகின்றது என்றால் அதுதான் உண்மை .

உண்மையில், பெண்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு பணமதிப்பு உண்டு. இதே வேலைகளை ஒரு பெண் தன்னுடைய வீட்டில் செய்யாமல்,இன்னொரு வீட்டில் பணிப்பெண்ணாக சென்று செய்வாளேயாயின் அவளது மாத வருமானம் எவ்வளவாக இருக்கும் தெரியுமா ? ஏனெனில் தற்போது இலங்கையில் பணிப்பெண் ஒருவரது மிகக்குறைந்த ஊதியமானது ரூபாய் முப்பத்தைந்தாயிரம் முதல் நாற்பதாயிரத்திலிருந்து ஆரம்பிக்கின்றது . அதுவும்போக, சில வீடுகளில் சமையல் செய்வதற்கு, துணி துவைப்பதற்கு , அயர்ன் செய்வதற்கு , வீட்டை சுத்தப்படுத்துவதற்கு என்று தினமும் சென்று வரும் பெண்களுக்கு அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு சம்பளம் என பேசி தீர்மானிக்கப்படுகின்றது .

அவரவர் வீட்டில் வேலை செய்யும் பெண்களிற்கு சம்பளம்தான் இல்லையென்றால், மரியாதையாவது கிடைக்கின்றதா ? சாப்பாட்டில் குறை , வீட்டில் சுத்தமில்லை , சரியாக அயர்ன் செய்யப்படவில்லை, விருந்தினரை சரியாக கவனிக்கவில்லை , குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் குறை என சதாகாலமும் ஏதாவது ஏச்சுப்பேச்சுக்கு ஆளாகும் பெண்களின் விகிதமே நம்மில் அதிகம் . இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விடையம் என்னவென்றால் , இந்த வேலைகளிலெல்லாம் அந்தந்த வீட்டு ஆண்களின் பங்களிப்பு இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை அல்லது எங்காவது ஆங்காங்கே எப்போதாவது நிகழ்கிறது என்பது மட்டுமே பதிலாக இருக்கும் . ஏனெனில் நம் குடும்ப அமைப்பில் “வீட்டு வேலைகளைப் பெண்கள்தான் செய்யவேண்டும்’என்றும், “வீட்டு வேலைகளைச் செய்வது ஆண்மைக்கு அழகல்ல’என்றும் நம் ஜீன்களில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால்தான் ஆண்கள் வீட்டில் சமையல் செய்வதும், மனைவியின் துணிகளைத் துவைப்பவதும் திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் மட்டுமல்லாது, பொதுவெளியிலும் நகைச்சுவைக்குரிய விஷயங்களாக உள்ளன.

ஒரு பெண்ணின் அன்றாட வீட்டு வேலைகள் அந்தந்த வீட்டு மற்றைய குடும்ப உறுப்பினர்களாளும் பகிந்துகொள்ளப்படும்போது , பெண் தனது மனித வளத்தினை மற்ற துறைகளிலும் பயன்படுத்துவதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைக்கும். தனது தனித்திறமைகளையும் லட்சியங்களையும் கனவுகளையும் வெளிக்கொணர செயலுருக்கொடுக்க முடியும். அம்பையின் “வீட்டின் மூலையில் ஓர் சமையலறை ” சிறுகதையில் சொல்லப்படுவது போல்,ஒரு பெண் தன் வாழ்நாளில் சமையலையும் , மளிகைப்பொருட்களையும் பற்றிய சிந்தனைகளிலிருந்து ஓரளவு விடுபட்டிருந்தால் இந்த உலகின் பல கண்டுபிடிப்புக்கள் அவர்களால்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என்பது மறுக்கவியலா உண்மை .

1960- மற்றும் 70-வரையில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களின் அரசியல்,சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது, அதுவரையில் பொதுவெளியில் பேசப்படாத குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகளை விடுமுறையின்றிச் செய்வது போன்ற பெண்ணின் உழைப்பு பற்றியும் அவை எவ்வாறு இருட்டடிக்கப்படுகிறது என்பது பற்றியும் பேசப்பட்டது. மேலும், 18-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்புரட்சியினால் பெரும் தொழிற்சாலைகளும், நவீன இயந்திரங்கலும் உருவாகி அதுவரையில் ஒவ்வொரு குடும்பங்களிலும் ஆண், பெண் என இருவரது கைகளிலும் இருந்த சிறு கைத்தொழில்களை மிகப்பெரிய உற்பத்திகளாக மாற்றும்வகையில் தொழில்சாலைகள் கைப்பற்றிக்கொள்ளவே, ஆண்களே அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலை வேலைகளுக்குச் சென்றனர். குழந்தைப் பராமரிப்பின் காரணமாக, தூரத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் நடந்த உற்பத்தியில் பெண்களால் பங்கெடுக்க முடியவில்லை.

தொடர்ந்து மாறிவந்த சமூகச் சூழலில், வேலை அல்லது உற்பத்தி என்பது தொழிற்சாலைகளில் நடைபெறும் ஒன்றாக மட்டுமே பார்க்கப்பட்டது. வீடு என்பது நிம்மதியாக, ஓய்வெடுக்கும் இடமாக கருத்தப்படவே, அந்த நிம்மதிக்கு பெண்கள் பொறுப்பாக்கப்பட, வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு அப்படியே பெண்களுக்கு மாத்திரம் உரிதாக்கப்பட்டது. வீட்டு வேலைகளை பெண் இலவசமாக செய்துகொண்டிருந்தமையினால், ஆண்களின் குறைவான கூலி ஓர் பிரச்சினையாக கருதப்படவில்லை. ஆகவே உற்பத்தித் துறை சம்பாதித்தலாபத்துக்கும், அடைந்த வளர்ச்சிக்கும் பெண்ணின் வீட்டு வேலை அஸ்திவாரமாக அமைந்தது என்றாலும் மிகையாகாது. ஆனாலும், வீட்டு வேலை ஒருபோதும் உழைப்பாகப் பார்க்கப்படாமல் சம்பளமின்றி வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் அவள் தொடர்ந்தும் செய்யவேண்டியது பெண்ணின் கடமை என்றும், பொறுப்பு என்றும் அவளே ஓர் நல்ல பெண் என்றும் கட்டமைக்கப்பட்டது . இந்த கட்டமைப்பானது இன்றுவரையில் தொடர்வதுதான் மிகப்பெரிய வேதனை !

836 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *