எண்ணங்களை உபசரிப்பதா? விட்டு விடுவதா?

கரிணி.யேர்மனி

தற்கால வாழ்வியலில் ஒருவரிடம் “இதோ இப்போது உங்களால் குறிப்பிட்ட அளவு ஆண்டுகள் கடந்த காலத்திற்குள் காலச்சக்கரத்தில் பயணிக்க முடியும் என வைத்துக் கொள்வோம். அவ்வாறு பயணித்து உங்கள் வாழ்வில் நடைபெற்றுவிட்ட எதையாவது மாற்றம் செய்ய விரும்புகிறீர்களா?” என்று கேட்டால் அதிகப்படியான விடயங்கள் மாற்றம் பெற வேண்டும் என அவர் எண்ணங்களில் தோற்றமளிக்கக் கூடும். முன்னர் உயிருக்குயிராக கரம்பிடித்த வாழ்க்கைத்துணை முதற்கொண்டு தாறுமாறாக முடிவுகள் எடுத்த காரணங்களினால் தடம்புரண்ட விடயங்கள் வரை மாற்றிவிடத்துடிக்கும் வாழ்வில் எண்ணற்ற செயல்கள் இருக்கலாம். தாமதமாக தெளிவடைந்த மனநிலையை அடைந்தவர்கள்தான் உலகில் அதிகம் உள்ளனர்.

எண்ணங்கள் எங்கே எல்லாம் அழைத்துச் செல்கின்றன? நிலத்தில் மலைமேடுகளில் தவழும் முகிற்கூட்டங்கள் முதல் நிலவில் வடைசுடும் பாட்டி வரை… இல்லையில்லை நினைவில் சேர்த்த நிஜங்களும் அதனால் கனவில் தொடரும் நிழல்களும்..? ம்ஹ_ம் கனவில் வந்த குழப்பங்களின் கருத்தை தேடும் கணங்கள். அட முடிவேயில்லாத வளர்ச்சி அதன் தொடர்ச்சி இந்த எண்ணங்கள். இவற்றை பின் தொடர்ந்தால் எதுவரை, எது அதன் வரையறை தொடரலாமா அல்லது வேண்டாமா? என்னதான் செய்வது?

“கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா”
என்பது கவிஞர் வாலி அவர்களின் தத்துவ வரிகள்

மனம் போன திசை கண்பார்வை போகும், பார்வை சென்ற திசை எண்ணங்களும் வளரக்கூடும், மனம் உந்தப்பட்ட திசை நோக்கி கால்கள் பயணப்படும், அவ்வாறே அத்திசை நோக்கி வாழ்வும் நகர்த்தப்படும். எண்ணங்களை உபசரிப்பது என்பது அதனோடு ஒத்து போய் அதன் வழி பின் தொடர்வது.

ஒளியை விட மனமே வேகமானது. மனதிலிருந்து எண்ணங்கள் உருவாக்கம் பெறுகின்றன. இருப்பினும் எண்ணங்களே மனதை இயக்குகின்றன. எண்ணங்களிலிருந்தே செயல் உருவாக்கம் பெறுகின்றது. மனமானது ஆழ்மனம், வெளிமனம் என அகத்தேயும் புறத்தேயும் ஒடுங்கி விரிவடைகின்றன. ஆழ்மனம் அமைதியானது, வெளிமனம் அகத்தையே ஆர்ப்பரிக்க வைக்கக் கூடியது. இதை இன்னும் மூன்று வகையாக பார்ப்பார்கள். ஆழ்மன அறிவு, காரண அறிவு அதாவது எதிரே கருத்துக்களை வைக்கக்கூடிய இன்னொரு மனம், அப்பாற்பட்ட சக்தியோடு தொடர்புபட்ட மனம் (conscious mind, subconscious mind, superconscious mind) என கூறுவர். இதன் தனித் தன்மைகள் மிகவும் விரிவானது. இவை பற்றிய விளக்கங்கள் இப்போது பார்க்கப் போவதில்லை.

உலகில் எமக்கு பிடித்தமான விடயங்கள் மிக அதிகம் இருக்கும். ஆனால் எமக்கு தேவையான விடயங்கள் மிக சிலதே என்பதனை உணரமுடியும். உதாரணமாக ஒரு மலிவு விற்பனை கடைக்குள் நுழைந்துவிட்டால் பெரும்பாலான பொருட்கள் மனதை கவரும்படி காணப்பட்டாலும், அவற்றை முழுவதுமாக வாங்கிவிடக்கூடிய பணம் எம்மிடம் தாராளமாக இருப்பினும் கூட எமக்கு தேவையானவற்றையே வாங்கிக் கொள்வோம். எமது இல்லத்தின் தன்மை, அதற்கு பொருந்தும் விடயங்கள் என பல தீர்மானங்கள் இருக்கும். அது போல இன்னொருவருக்கு பொருந்துகின்ற விடயங்கள் எல்லாமே எமது சூழலுக்கோ, எம் சூழ்நிலைக்கோ சரியாக பொருந்திவிடுவதுமில்லை. இவ்வாறு வாழ்வின் ஒவ்வொன்றும் தனித்துவமாக மிளிர்கின்றன. ஏற்றத்தாழ்வுகள் மனதின் மாறுபாடுகளேயன்றி ஒவ்வொரு நிலையும் ஒவ்வொன்றோடு இணைப்புடன் திகழ்கின்ற தனியானவை.

ஒரு செயலை செய்து முடித்த பின்னர் பலரும் கூறும் விடயம் அல்லது பிறர் அதற்கு கூறும் விமர்சனம் “ அட இதை இன்னும் இப்படி அல்லது அப்படி செய்திருக்கலாம்” என்று வெவ்வேறு திட்டம் கூறுவார்கள். ஆக எண்ணங்கள் மாறும் இயல்புடையது. உணர்ச்சிப் பெருக்கால் ஏற்படும் எண்ணங்களுக்கு கால அவகாசம் கேட்கும் பழக்கமில்லை. இருப்பினும் அவை எத்தகைய உணர்ச்சி என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும். நீண்ட நாள் காணாத தன் பிள்ளையைக் கண்டு ஒரு தாய் பாசத்துடன் கண்ணீர்விட்டுக் கொள்வது என்பது கால அவகாசம் தேவைப்படாத உணர்ச்சி நிலை. ஆனால் திடீரென ஒருவர் மீது ஆத்திரத்தை வெளிக்காட்டும் போது நிதானம் தேவை அல்லவா? எண்ணம் ‘ஓங்கி ஒரு அறை அவர் கன்னத்தில் வை’ என்று கூறும். எண்ணத்தை இப்போது உபசரிப்பது நல்லதல்லவே. சிறிது நிதானம் வந்துவிட்டாலே இதே எண்ணம் எமக்கேற்றாற் போல் மாறிவிடும். அதாவது எண்ணம் என்பது ஒரு வளர்ப்புப் பிராணி போன்றதென்றும் கூறலாம். எண்ணத்தின்படி பின் தொடர்ந்தால் அதுவே எமக்கு எஜமான், எண்ணம் ஏதாவது கூறும் போது கொஞ்சம் அது கூறுவதை உற்று நோக்கி அதனைப் பற்றி சிந்தித்த பின்னர் முடிவுக்கு வந்தால் நாம் அதற்கு எஜமான்.

அங்கீகாரம் கிடைக்கும் போது ஆனந்தமாகவும், புறக்கணிப்பு ஏற்படும் போது விரக்தியாகவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிவிடக்கூடியது எண்ணங்கள். ஒரு முறை இரு நண்பர்கள் தொலைதூரம் பயணம் மேற்கொண்டு இருக்கையில் அதில் ஒருவர் விபத்தில் இறந்து விடுகிறார். எனவே மற்றையவர் தன் ஊருக்கு இறந்த தன் நண்பரின் உடலை கொண்டு வருவதற்கு முன் வேகமாக செல்லும் ஒரு புதியவரிடம் தனது பெயரைக் கூறி தன் இறந்துவிட்ட நண்பரின் பெயரையும் கூறி தம் குடும்பத்தினரிடம் இந்த துயரச்செய்தியை தெரிவித்து விடும்படி கூறிவிட அந்த நபரும் இவர்கள் குடும்பத்திடம் மறதியில் பெயரை மாற்றி கூறிவிடுகிறார். இதனால் இறந்தவரின் குடும்பம் நிம்மதியாக தம் மகன் நன்றாக இருக்கிறான் என ஆனந்தப்பட தகவல் தெரிவித்து விட்ட உயிருள்ள நண்பனின் குடும்பமோ அதி துயரத்தில் உறவுகளுடன் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர். ஒரு வழியாக இறந்தவரின் உடல் கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த இரு வீட்டாரின் நிலை அப்படியே மாற்றமடைகின்றது. எனவே நடந்து விட்ட சம்பவத்திற்கும் வேதனைக்கும் சம்மந்தம் உண்டா என்றா இல்லை. மனதினுள் அனுமதிக்கப்படும் எண்ணங்கள் மூலமே துக்கமும் மகிழ்வும் உண்டாகின்றன.

மற்றும் ஒருவர் மீது ஏற்படும் சந்தேகமானது அவர் தொடர்பாக உளவு பார்க்கும்படி எண்ணம் தூண்டுகிறது. எனவே எண்ணம் அந்த நபர் சார்ந்த விடயங்களில் குவிந்து எதிர்மறையோடு பின்தொடர்கிறது. தாம் வஞ்சிக்கப் படுவதாக நம்பிக்கொண்டிருப்பதனால் தன்னம்பிக்கை இழந்து தாழ்வுமனப்பான்மை ஏற்படுவது மட்டுமல்லாது யார் எம்மை வஞ்சிக்கிறார்கள் என எண்ணுகின்றோமோ அவர்கள் இப்படி இப்படி எல்லாம் என்னை பற்றி நினைக்க கூடும், பிறரோடு இவ்வாறு உரையாடக்கூடும், எனது வளர்ச்சியை சகிக்காது பொறாமைப்படக்கூடும் என்பது போன்று எம்முள்ளேயே எமக்கு எதிரான விமர்சனங்களை எண்ணங்கள் அடுக்கிக் கொண்டே போகும். எண்ணங்களை உபசரித்து அதற்கு அடிமையாகிவிடுவதனால் அந்த மயக்க நிலையில் தன் வாழ்வின் பயணமும், நோக்கமும் காலதாமதமாகவும், வீண் நேரவிரயமுமாக இருப்பதையோ அல்லது மன உளைச்சல்களுக்கு ஆளாவதையோ உணர்ந்து தெளிவடைய முடிவதில்லை. அகங்காரம், சந்தேகம் போன்ற எதிர்மறை எண்ணங்களின் மாயைகளை பின்தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதனால் வாழ்வின் பயணப்பாதையின் நோக்கத்தையே தவறவிடும் அபாயமே உருவாகும்.எதிர்மறை எண்ணங்கள் தோன்றினால் அப்போதே அதை களைந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் விருட்சமாக வளர்ந்துவிடும். சிறந்த எண்ணங்களால் உருவாக்கப்படும் மனம் நல்ல விளைவுகளையே தந்துகொண்டிருக்கும். இதையே அகத்தியர் இவ்வாறு பாடுகிறார்.

“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே”

ஒன்றன் மேலோ அல்லது ஒருவர் மேலோ வைக்கப்படும் நல்லெண்ணமானது அந்த நபரில் அல்லது அப்பொருளில் உள்ள நல்ல தன்மைகளையே தெளிவுபடுத்தும். அந்த எண்ணமே அங்கிருக்கின்ற சிறு அல்லது பெருந் தவறுகளையும் சரிப்படுத்தும்படி செய்துவிடக்கூடும். தூய சிந்தனைகள் நேர்மறையான செயல்களை ஈர்த்துக் கொண்டிருக்கும். மனமே மாயையான உருவாக்கம் என்பதே ஞானிகளின் நோக்கு. அதாவது கண்ணில் புலப்படுபவை உண்மையற்ற மாயை ஆதலால் அதைப்பற்றிய எண்ணங்களும் மாயையே. இதை ஆதிசங்கரர் ‘மாயை என்பது மெய்யறிவுக்கு பூஜ்யம் (ணுநசழ) தான். ஆனால் ஞானம் வராத நிலையில் உள்ளவர் தன்னை ஒரு தனி எண்ணாக வைத்துக்கொண்டு பக்கத்தில் இந்தப் பூஜ்ஜியத்தைச் சேர்த்துக் கொள்கின்றார். ஓர் இலக்கத்துக்குப் பக்கத்தில் வருகின்ற பூஜ்யம் அதைப் பத்து, இருபது, நூறு, ஆயிரம் என்று ஆக்குவதுபோல் அஞ்ஞானிக்கு மாயையே பலவாக விரிந்து சத்திய பொருட்களாக, உலகமாக தோன்றுகிறது. இகத்தையும் பரத்தையும் புரிதல் என்பது நுண்ணறி வுக்குட்பட்டது’ என்கிறார்.

அமைதியான உலகியல் வாழ்விற்கு எண்ணங்களை வரவேற்று அப்படியே ஏற்றுக் கொள்வதும் நல்லதல்ல அதேபோல் விட்டுவிடுவதும் நோக்கமல்ல. வெறுமனே எண்ணங்கள் என்ன கூறுகின்றன என்பதை சாட்சிபாவமாக உற்று நோக்கினால் போதும். இப்போது எண்ணங்கள் வேறாகவும், உற்றுநோக்கும் நாம் வேறாகவும் தெரிவோம். இந்நிலையில் எண்ணங்களால் சலசலப்பு ஏற்படாது. அதற்கு சக்தி கொடுக்கும் நபர் சாட்சியாக மாறி உற்று நோக்குவதால் அதிக சக்தியை இந்த எண்ணங்களால் உறிஞ்சிக் கொண்டு கூச்சலிட முடியாது. எனவே முக்கிய விடயங்களை மட்டும் கூறி அமைதியடையும். உற்று நோக்கி அதன் உண்மைத்தன்மைகளை தெளிந்து உணர அவகாசம் கிடைத்துவிடும். ஆன்ம ஈடேற்ற பயணத்தில் எண்ணங்களை உபசரிப்பது பந்தம் என்றும் அவற்றை விட்டுவிடுவது முக்தியாகவும் பார்க்கப்படுகிறது.

1,037 total views, 4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *