பரதக்கலையின் வரலாற்று ஒளியில்…. தேவதாசிகளும்; கோயிலும்

  • நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்.அவுஸ்திரேலியா

இன்று எமது நகரங்களிலே சிறுமிகள் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்டு ஆடி வருவது வளமையாகி விட்டது. இது எமது காலாசாரத்தின் ஓரங்கம். இதனால் இந்த ஆடல் பற்றிப் பலரும் அறிய ஆர்வம் காட்டுவது இயற்கையே! இந்தப் பரத நாட்டியம் என நாம் கூறும் இந்த ஆடல்வகை மேடையை நோக்கி வருமுன் எமது கோயில் களிலே ஆடப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் ஆகும்.

இவ்வாறாகக், கோயில்களிலே நடந்த சின்னமேளங்களை இரசித்த பெரியவர்கள் இதைக் கதை கதையாகக் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் இவர்கள் கூறியது எல்லாம் நாதஸ்வரக் கச்சேரிகள் போல ஆடல்களும் கோயில்களிலே நடந்ததைத் தான். இதற்கு முற்பட்ட காலங்களிலே இந்த நடன மாதர்களான தேவதாசிகள் கோயில் கிரியைகளில் பங்கு கொண்டிருந்ததை யாரும் கண்டதில்லை.

எம்மில் பலர் தஞ்சைப் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மைலாப்பூர் பிரகதீஸ்வரர் ஆலயம் என்றெல்லாம் போய் தரிசித்துள்ளோம். இற்றைக்குச் சுமார் 100 அல்லது 150 வருடங்களுக்கு முன் இன்று போல சத்தடி மிகுந்த கார்களும் ஓட்டோக்களும் அன்று ஓடவில்லை. கோயிலின் கோபுரங்களே நகரத்தின் மையமாக வானளாவ நின்றிருந்தன. கோயில் மணியோசையே சுற்றுவாழ் மக்களின் கடிகாரமாக இருந்தது. கோயிலில் எழும் மங்கல வாத்தியங்களின் இசையே அவர்கள் அன்றாடம் அனுபவித்த இசை.

இந்த அமைதியான சூழலில், மாலைக்கதிரவன் ஓங்கி உயர்ந்திருக்கும் கோபுரத்தின் பின்னே மறைகிறான். அவன் மறைவதன் காரணமாக வானம் செம்மை படர்ந்து வண்ண வண்ண ஜாலம் காட்டி நிற்கிறது. இந்த மங்கிய மாலைப்பொழுதில், நடன ஆசானுடன் மங்கல இசைக்கருவிகள் முழங்க, வாத்திய கோஷ்டிகள் புடை சூழ, தேவ நர்த்தகி வலதுகால் வைத்துக் கோயிலுக்குள் புகுகிறாள். கோயில் மணியோசை அவளை வரவேற்கிறது. காலிலே வெள்ளிச் சலங்கை கலீர் கலீரென ஆடலுக்கான தனிப்பட்ட பட்டாடை (இதுவே இன்றய பரத நாட்டிய உடையின் முன்னோடி) மற்றும் ஆபரணங்கள் அணிந்தவளாக ஆண்டவன் சன்னிதானத்தில் ஒருமுகப்பட்ட பக்தியோடு தனது கலையை அர்ப்பனமாக்க தன் பாதங்களைச் சமனாக வைத்து தயாராக நிற்கிறாள் நர்த்தகி.

ஆலய அர்ச்சகர்களும் மங்கல ஆராத்தியை அவள் கையில் கொடுப்பர். கோயில் மணிகள், சங்கு, திருச்சின்னம், சூரிய சந்திர மண்டல வாத்தியங்கள், சுத்த மத்தளம், பஞ்சமுக வாத்தியங்கள் அனைத்தும் ஒன்றாகப் பேரொலி எழுப்ப, நர்த்தகி சுவாமிக்கு ஆராத்தி எடுப்பாள்.

பின்னர், நர்த்தகி நடுவில் நிற்க, அவளது வலது புறத்தில் சிறிது தூரத்தில் நடன ஆசான் நின்றிருப்பார். அவளின் இரு புறத்திலும் மிருதங்கம், முகவீணை, வேணு முதலான இசைக்கருவிகளை இசைப்போர் நிற்க் சுருதி போடுபவர், தாளம் தட்டுபவர் அருகிலே நிற்க, அடுத்த நாட்டிய அர்ப்பணத்திற்குத் தயாராக நிற்பாள் நர்த்தகி.

இவ்வாறு, நர்த்தகி புஷ்பங்களைக் கையில் ஏந்துவதற்குத் தயாரான தல புஷ்பபுடம் எனப்படும் நாட்டிய நிலையில் நிற்க, அர்ச்சகர் மலர்கள், துளசி,முதலியவற்றை அவள் கையில் இடுவார். இசைக்கருவிகள் ஒலித்துக் கொண்டிருக்க, அர்ச்சகர் மந்திர ஒலி எழுப்ப, நர்த்தகி மலர் அஞ்சலியை நாட்டியம் மூலமாக சுவாமிக்கு அர்ப்பணம் செய்வாள்.

பின்னர் மிருதங்கத்துக்கு வணக்கம் செலுத்துவாள். மிருதங்கம் முதலிலே மிக மென்மையான ஒலியினை எழுப்பி, ஒத்திசை வாத்தியங்கள் முழங்க,நர்த்தகி அதற்கேற்ற சொற்கட்டுகளுடன் குறித்த தேவதைகளின் தோத்திரம் இசைக்க அதற்கேற்ப நிருத்தியம் செய்து, தீர்மானத்துடன் தன் நடனத்தை ஆண்டவனுக்கு அர்ப்பனிப்பாள். பிறகு தீபாராதனையுடன் நிருத்திய ஆராதனை நிறைவு பெறும்.

விழாக்காலங்களிலே கோயிலை வலம் வந்து திக்குபாலகர்களை வணங்கும் முறை ‘நவசாந்தி’ அல்லது, ‘ பலிஹரணநிருத்தியம்’ எனப்படும். எட்டு திக்கு பாலகர்களுக்கும் எட்டுவகையான பண்களில் எட்டு வகையான அபூர்வ தாளங்களுடன் நர்த்தகியால் நிருத்தியம் செய்யப்படும். கொடிக்கம்பத்துக்கு அருகில் இந்திரனைக் குறித்து நிருத்தியம் செய்வதற்கு முன்பாக விநாயகருக்கும், குமரக் கடவுளுக்கும் பூசைகள் செய்யப்படும். மந்தாரை, பாரிஜாதம், வில்வம், அறுகம்புல் முதலான அந்தந்த இறைவனுக்குப் பிரியமான மலர்களால் புஷ்பாஞ்சலி சமர்ப்பணம் இங்கு நட்டியாஞ்சலியாக நடைபெறும்.

இந்திரனுக்கும் விருப்பமான நாட்டியம்’லலிதம்’. தேவகாந்தாரி அல்லது நாதநாமகிரியை விருப்பமான இராகம் ஆகும். இங்கு நர்த்தகி சமதாளத்தில் நிருத்தம் செய்ய வேண்டும். தென்கிழக்கு மூலை அக்கினி பகவானுக்குரியது. இவனுக்குக் கலிங்க நிருத்தியமும் லலித இராகத்தில் வீர விக்கிரம தாளத்திலும் ஆட வேண்டும். இங்கு நர்த்தகி சப்தம், வர்ணம், சுலோகம், பதங்கள், ஜாவளி என ஆடுவாள்.

இன்று நாம் கோயில்களிலே ஒலிக்கும் தேவகானமான நாதஸ்வரத்தின் நாதத்திலே லயித்து அந்த உணர்விலே இறையை உணர்கிறோம்.

‘ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ’

எனத் திருநாவுக்கரசர் எமை எல்லாம் இசையாலே இறைவனைக் காண வைத்தார். இறையை உணர இசை அன்று பக்தர்களை வழிநடத்தியது. இந்த இசைக்கு உருவம் கொடுத்தது தான் அன்றய தேவ நர்த்தகிகள் கோயில்களிலே ஆடிய ஆடல்.

பல நூறு ஆண்டுகளாக இந்த வழக்கு இந்துக் கோயில்கள் யாவற்றிலும் அனுஷ்டிக்கப்பட்டன. அதன் காட்சிச் சித்திரங்களே நாம் இன்று கோயில்களில் காணும் நாட்டிய நங்கையரின் நடன நிலைகள். அன்றய சிற்பிகள் இந்த நடனங்களை எல்லாம் கல்லிலே வடிவமைத்து எமக்கு அழியாப் பொக்கிஷமாகத் தந்துள்ளார்கள். இவை எல்லாம் அன்றய கோயில்களிலே நாட்டியம் எத்தகைய உன்னத இடத்தைப் பெற்றிருந்தது என்பதைக் காட்டுகின்றது. இதுவே இன்று நாம் காணும் பரதநாட்டியத்தின் காட்சிப் பின்னணியாகும்.

1,214 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *