மென்மையுறக் காதல் விளையாடி – 24
கலாசூரி திவ்யா சுஜேன். இலங்கை
இப்படித்தான் பல ஞாபகத்தடங்களின் மெத்தையில் சொப்பனத்தில் மூழ்கி இருந்த வேளை., எங்கோ உதயமாகும் குயிலிசை மெல்லச் செவிகளை வருடக் கண்விழித்தேன்.
“மோகனப் பாட்டு முடிவுறப் பாரெங்கும் ஏக மவுனமியன்றது காண் “
முன்னிருந்து பின்னும் , பின்னிருந்து முன்னுமாக எத்தனை முறை பாரதிக் கவிதைப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தாலும் குயில்பாட்டில் கொட்டிக்கிடக்கும் சுவையை மொத்தமாய் விழுங்கத் துடிக்கும் உள்ளத்தை நிறுத்தவல்லேன்.
முன்னமும் பல முறை பகிர்ந்துள்ளேன் , இன்னமும் பலமுறை பறைசாற்றுவேன் பாரதியைக் காட்டிலும் பெண்மையை ஆராதித்தவர் எவருமில்லை.
முன்பு ஒருநாள் என் மாணவி ஒரு பரிசு தந்தாள். விரித்துப் பார்த்தால் விசித்திர சித்திரம். வலக்கண்ணை மூடிக்கொண்டு பார்த்தேன் லக்ஷ்மியின் உருவம் ஜொலித்தது. இடக்கண்ணை மூடிக்கொண்டு பார்த்தேன் சரஸ்வதி கலைநயமொடு நின்றாள். இரு கண்ணையும் திறந்து சட்டெனப் பார்த்தால் பராசக்தியின் வடிவம் மட்டும் தெரிகிறது. இப்படி மாயச்சித்திரம் போன்றது குயில்பாட்டு.
நம்முள் காதல் மூண்டௌ அன்பு சூடிய அற்புத நொடிகளெல்லாம் கண்முன் வானவில் வரையும் உணர்வுப்பொழுதில் குயில்பாட்டு காதல் ரசத்தை அள்ளி அள்ளிக் கொட்டியது.
யோக தத்துவ வித்தைக்குள் சித்தத்தை செலுத்திய சுத்த பொழுதில் குயில்பாட்டின் மொத்த அர்த்தமும் வேறாகி நின்றது.
சேர்த்து வைத்த விடய அறிவிற்கும், தேடிக்கற்ற மனப்பதிவுகளுக்கும் சற்றே ஒய்வுகொடுத்து விட்டு இப் பிரபஞ்சத்தின் மீது மோகம் கொண்டிருந்த வெளிப்பொழுதில் குயில்பாட்டு ஏகாந்தம் காட்டியது.
“ பாரெங்கும் ஏகமவுனமியன்றது காண் “
இப்படி ஓவியம் ஒன்று தான். ஆனால் அதன் வண்ணங்களை நாமே தீட்டித்தீட்டி அழகு பார்க்கவல்ல சுதந்திரக்கவி தந்தவர் பாரதியன்றி வேறொருவருளரோ ?
நின்றும் , கிடந்தும் , இருந்தும் குயில்பாட்டைப் பலமுறை தழுவியிருக்கிறேன். ஆனால் என் லண்டன் பயணம் நிறைவுற்று இலங்கைக்கு வரும்போது ஆகாயத்தில் குயில்பாட்டை உறவாட ஒரு நூல் கையில் கிடைத்தது.
திரு கருணானந்தராஜா அவர்களால் பாரதியின் குயில்பாட்டின் தத்துவ ரகசியம் எழுதப்பட்டு நூல் வடிவாகியிருந்தது. 1985 களில் இவர் மேற்கொண்ட ஆய்வு 2010 இல் வானவில் பண்பாட்டு மையத்தினூடாக பதிப்பிடப்பட்டிருந்தது கண்டு பெரு மகிழ்வு கொண்டேன். பாரதியை சென்னிமேல் ஏந்தி அன்பு செய்யும் வானவில் பண்பாட்டு மையமும் அதன் அமைப்பாளர் வழக்கறிஞர் பாரதி ஏந்தல் திரு ரவி கல்யாணராமன் அவர்களும் எம்மோடு தோழமை கொண்டோர்.
நூலாசிரியர் பாரதியை உள்வாங்கிக் கொண்ட அற்புதமும் , வாழ்வியலின் புரிதலும் , அறிவின் விசாலமும் நூல்மொழி உரைத்தது.
“ கலைஞன் அவதரிக்கிறான் . அவன் ஒருபோதும் உருவாக்கப்படுவதில்லை “ என்று அவர் குறிப்பிட்ட அறிமுகத்தின் உண்மையை நன்குணர்ந்தவளாய் ஆகாயத்திலிருந்து சித்தாகாசத்தை நோக்கி உள்நுழைந்தேன். நூல்வழி புகப்புகப்புக இன்பம் பொங்கி விழி வழி வழிந்தது.
மாடன் , குரங்கன் , சின்னக்குயிலி , மொட்டைப்புலியன் என குயில்பாட்டுப் பாத்திரங்களை தத்துவமாய் அணுகி அதன் காட்சிகளின் விளக்கத்தை பாரதியின் வாழ்வோடு இணைக்கும் பாங்கு மலைப்பைத் தந்தது. பாரதி அடிபொடிகளாய் பாரெங்கும் பரவியிருக்கும் அன்புடையோரை இப்பத்திரிகையினூடாகப் பணிகிறேன்.
“ ஆமாம் ! விண்டுரைக்க மாட்டாத விந்தையடா ! விந்தையடா !
ஆசைக்கடலின் அமுதடா !
அற்புதத்தின் தேசமடா !
பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா ! “
பரந்து விரிந்து கிடக்கும் விசும்பையும் , நிறை ஓதத்தையும் ஒன்றாயக் காணும் பரவச வாழ்வினை வரம்பெற்ற எமக்கு பரிதியாய் வந்த பாரதியை விழிமூடி நெஞ்சவெளியில் கண்டு வியந்து தொழுது ஆயிரமாயிரம் முறை நன்றி சொல்லி எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எனச் சரணடைந்தேன். மண்ணில் தெரிந்தது வானம். !
614 total views, 3 views today