அன்பைக் கொடுத்து எல்லோரையும் அன்புக் கடன்காரன் ஆக்கியவன், ஜூட் பிரகாஷ் !
பரி.யோவான் பொழுதுகள் புத்தக வெளியீடு விழாவில் னுச. கோபிசங்கர் புகழாரம்!
அவுஸ்.மெல்பேர்ண் வாசியும், பட்டயக் கணக்காளரும், பரி.யோவான் கல்லூரியின் 92 உயர்தர வணிகமாணவரும், புகழ்பூத்த சமூக வலைத்தள நட்சத்திரமும், யேர்மனியில் வெளிவரும் வெற்றிமணிப் பத்திரிகையில் பல ஆயிரம் வாசகர்களைக் கவர்ந்த எழுத்தாளரும் – மூத்தவர், அண்ணன் Jude Prakash எழுதிய “பரி.யோவான் பொழுதுகள்” – நூல் கடந்த மாதம் 07.01.2023 சனிக்கிழமை கல்லூரியில் வெளியிட்டு வைக்கப்பட்டது. எழுத்தில் அதகளம் பண்ணிருக்கார், மனுஷன்!
யாழ்ப்பாணத்தின் 200 வருட கல்விப்பாரம்பரியம் மிக்க பாடசாலையொன்று தனது தனித்துவமான மரபுகளின் துணையால் – தன்னைத் தாங்கியுள்ள சமூகத்துக்கு இனிதானவை என்னவெல்லாம் இயற்றியுள்ளது, என்பதை சொந்த அனுபவங்கள் மற்றும் சம்பவச் சேர்க்கைகள் மூலம் சுவையுறச் சொல்லியுள்ளார், நூலாசிரியர். 1990 வரை மட்டுமே பரியோவானில் கற்ற ஜூட் அண்ணா எழுதியுள்ளவை, 2005 வரை பள்ளியிலிருந்த எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை – தற்போதும் கல்லூரியில் கற்பவர்களும் உணரும் வரை பல சம்பவங்கள் சுவைபடக் கோர்வையாக்கப்பட்டுள்ளன.
பரி.யோவான் பொழுதுகள் புத்தக வெளியீடு விழாவில் னுச. கோபிசங்கர் அவர்களின் தலைமையுரையில்…
தமிழன் என்றோர் இனமுண்டு, தனித்து அவரக்கோர் குணமுண்டு என்பது முதமொழி Johnians என்றொரு இனமுண்டு தனித்து அவரக்கோர் திறமை உண்டு என்ற புதுப் பழ மொழியை அவனியில் நாங்கள் நிரூபிக்கும் பொன் நாள் இது. பேனாக்களின் கூர்முனைகள் மழுங்கிக்கொண்டிருக்கின்ற காலம் இது, புதிதாய் தட்டச்சுகளின் பேனா கூர்மையை பட்டை தீட்டத் தொடங்கினான் அவன், ஏழு ஆண்டுகளிற்கு முதல். அவன் நினைவில் சுமந்தது ஒரு கருவல்ல ஓராயிரம் , அவை இன்று காகிதக் குழந்தைகளாய் உங்கள் கரங்களில்.
படிக்கும்போது அவன் தங்கத்தலைவன் ponnukone இன்று தகிக்கும் சூரியன் pragash கல்வியின் அளவுகோல்கள் மூலம் எல்லாம் மூளையின் விருத்தியை அளக்கமுடியுமா ??? இல்லை வினாக்களின் விடைத்தாள்கள் மட்டும் வினைத்திறனைக் காட்டுமா ???? என்ற கேள்விகள் பலரின் உள்ளக்கிடக்கை.
அப்படியானால் பல்திறைமைகளை கொண்ட பரியோவானார்களின் ஆற்றல்களை அளக்க கருவி தான் உண்டா?
பாடசாலையின் திறன் அளவுகோல்கள் கல்வியின் எந்த பெறுபேறுகளால் நிச்சயிக்கப்படுகின்றது என்ற பலரின் கேள்விகளிற்கு,ஏக்கங்களிற்கு இது ஒரு பதிலாகும். பரியோவானில் எல்லோரும் வீரிய விதைகளாகவே விதைக்கப் படுகிறார்கள், ஆனால் உறங்கு நிலைகளே சற்று வித்தியாசப்படுகின்றன.
இன்றைய யதார்த்தமற்ற உலகில் நிதர்சனங்களின் தரிசனங்களே நினைவில் இல்லாத போது, அந்தக் காலத்து தரிசனங்களை நித்தம் தரிசிக்கும் காவியமாய் படைத்து எமக்கெல்லாம் நிழலான நினைவுகளை நித்தமும் பாக்க படைத்த படைப்பிது. கிளைவிரித்து இலை உதிர்த்து, பூத்தூவி விழுது விட்டு இருக்கும் மரத்தில் தங்கிச் சென்ற பறவைகள் மீண்டும் ஆணி வேரின் அரவணைப்பில் கதகதப்பை உணர்வது போல் உலகெங்கும் வியாபித்தருக்கும் நாம் ஜொனியன்ஸ் மீண்டும் பாடசாலைக்குள் காலடி வைக்கும் போது உணர்கிறோம். விளையாட்டு மட்டும், கல்வி மட்டும், கல்விசார் நிகழ்வுகள் மட்டும் என்ற கட்டமைப்புக்கப்பால் எந்தத்துறையும் எங்களுக்கு எட்டாதவை அல்ல என்று நிரூபிக்கும் நாள் இது ஈன்ற பொழுதில் பெரிதுவந்து அன்னை மட்டும் அல்ல , இன்று அன்னையால் பிள்ளையும் பிள்ளையால் அன்னையும் பெருமைப்படும் நாள் . இங்கே இந்த பரியோவானின் விளைபரப்பிலே கன்றாகிய வித்துக்கள் வியாகுலத்தில் விசாலமாய்,வியாபித்து விரிந்து கிளைபரப்பி பல்கலைகளை படைக்கின்றதை பறைசாற்றும் நாள்.
மணம் முடித்துச் சென்ற மகள் சென்ற இடத்தில் பிறந்த வீட்டின் புகழைப் பழப்பி மீண்டும் அந்த சந்தோசத்துடன் வீடு திரும்பும் மனத்துடன் உள்ள என் அன்பு நண்பன் ஜூட்,இவன் அறிவு அடங்கி ஓடும் ஆறு அல்ல , தடையில்லா சமுத்திரம். அதிலும் “ பரியோவானின் மொக்கு கொமேர்ஸ்காரன் இவன் …….” விதியின் பாதை விதித்த கோடுகளையே அழித்து வீறுநடை போட்டவன், பிறர்நலம் பேணலையே தன்னலமாய்க் கொண்டவன் இவன்,
கட்டுபாடற்ற கட்டுக்காவலன், காமன் ,கடன்காரன்;ஆம் பரியோவான் என்ற பெயர் சொல்லும் எந்தக்காரிகையும் இவன் காதலியே ஆகவே தான் கட்டுப்பாடு இல்லாதவன் ஆனாலும் அவை அனைவரையும் கரைசேர்க்கும் கடப்பாடை கட்டிக்காப்பவன். இந்தக் கல்விக்கூடத்தில் கற்ற எல்லாரையும் காமுறும் காமன். அன்பைக் கொடுத்து எல்ரோரையும் கடன்காரன் ஆக்கியவன்.
இன்றுபரியோவான் அன்னைக்கும் கடன் கொடுத்துவிட்டான்அன்பை. அந்த அன்பில் அவளின் விழிநீர்துளி வழிந்து எங்கோ ground ன் ஒரு மூலையில் ஈரம் கசியும், குடித்து முடிக்காமல் விட்ட மிச்சப் பாலை மாமரத்தின் கிளை (முலை ) சுரக்கும் , அவள் காற்றின் கரங்கொண்டு கைதட்டுவாள் தேக்கு மரங்களால், கட்டியணைத்து மூச்சிறுக்க முத்தம் கொடுத்து உன்னை வாழ்த்திச் சொரிவாள் தேமாப் பூக்களை. வாழ்க வளமுடன் என வாழ்த்தினார்.
1,071 total views, 2 views today