காதல் என்பது எதுவரை?

யாரையாவது காதலித்தால் கல்யாணம் செய்து தருவோம்
கௌசி.யேர்மனி
காதல் என்பது எதுவரை, கல்யாணக் காலம் அதுவரை, கல்யாணம் என்பது எதுவரை கழுத்தினில் தாலி வரும் வரை என்பது கவிஞர் பாடல். அப்படியானால் காதல் கல்யாணத்தினுடன் முடிந்து விடுவது இயற்கையா? அதன் பின் தொடருவது என்ன? இங்கு காதலுடன் திருமணத்தை தொடர்பு படுத்துவதுதான் கேள்விக்குறியாக இருக்கின்றது. காதல் என்பது உலகத்து உயிர்கள் எல்லாவற்றுக்கும் பொதுவானது. அவையெல்லாம் தாலி கட்டிக் குடும்பம் நடத்தவில்லை. மாடப்புறா கூரை மேல் இருந்து கொஞ்சிக் குலாவுவதும், ஏரிக்கரையினிலே யானை தும்பிக்கையை ஏந்திக் காதலியைத் தடவுவதும், தரையைப்; பெருக்கி ஒரு பறவை நடனம் ஆடிக் காதலியை ஈர்ப்பதுவும் தாலி கட்டுவதற்காகவா? காதல் என்பது அதற்கு அப்பாற்பட்டது. இரு மனங்களின் சங்கமம். அது எல்லை தாண்டிச் சிந்திக்க வைக்கும். உயிரைக் கூடத் துச்சமாக எண்ண வைக்கும். ஒரு கணப்பொழுதில் உள் நுழைந்து மறு கணப்பொழுது மகிழ்ச்சியைத் தந்து உள்ளத்திற்குள் கூடு கட்டிக் கொண்டாடும்.
சின்னச் சின்ன நிகழ்வுகளை சரித்திர சாதனைகளாகப் போற்றும். எத்தனை வருடங்கள் கடந்தாலும் இன்றே ஆரம்பித்த உணர்வைத் தரும். இந்தக் காதலினால், எத்தனை முதிர் கன்னிகள் திருமண வாழ்க்கையை தரிசிக்காமல் இருக்கின்றார்கள். சட்டம் போட்டு திருட்டை ஒழிக்க முடியாது. சட்டம் போட்டுத் திருட்டுக் காதலைத் தடை செய்ய முடியாது. புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் சந்ததி மூன்றாவது தலைமுறையைக் கண்டுவிட்டது. இப்போது இரண்டாவது தலைமுறையின் திருமண வாழ்க்கை பற்றிய ஏக்கத்தை முதலாவது தலைமுறை தாங்கிக் கலங்குகின்ற காலம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இக்கட்டுரை இது பற்றிய ஆய்வாக தொடர்கிறது.
புலம்பெயர்ந்த போது தமிழர்களுக்கு புகுந்த நாட்டு மொழியும் புரியவில்லை. அந்த மனிதர்களின் வாழ்க்கை முறையும் புர்pயவில்லை. அதிகமானவர்கள் தம்முடைய கிராமத்திலேயே இருந்து வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து விட்டு ஒரு அந்நிய கலாசாரத்துக்குள் நுழைகின்றார்கள். தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக பலவற்றை விட்டுக் கொடுத்தவர்களுக்குத் தம்முடைய பிள்ளைகளின் திருமண வாழ்க்கையை மட்டும் விட்டுக் கொடுக்க விரும்பம் இருந்ததில்லை. வெள்ளைக்காரனின் பாடசாலையில் வெள்ளக்காரனிடம் படிக்கலாம், வெள்ளைக்காரன் உணவுகளை உண்ணலாம், வெள்ளைக்காரனை நம்பி அவன் தரும் மருந்தை நோய்க்காக அருந்தலாம், அந்த மருத்துவரிடம் உடலை ஒப்படைக்கலாம், அவன் கட்டிய வீட்டில் குடியிருக்கலாம். ஆனால், அவனுக்குத் தன்னுடைய மகளைக் கட்டிக் கொடுக்க முடியாது. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் எல்லாம் பெறுவோம் எம்முடைய குடும்பத்துக்குள் வெள்ளைக்காரனை நுழைய விடமாட்டோம் என்று கங்கணங்கட்டியதால், இன்று தாலிக்கயிறு கட்ட முடியாத முதிர் கன்னிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் அதிகமாகி விட்டனர். இந்தக் கயிறு தேவையா என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
கல்வி கற்கின்ற போது எந்த வெளிநாட்டுக்காரனையும் காதலித்துவிடாதே என்று கூடவே பாடசாலைக்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டு பாடசாலை முடிந்தவுடன் வாசலில் காவல் இருந்து கூட்டி வந்து போர்க் குதிரைக்கு வடம் கட்டியது போல் படிப்பைத் தவிர வேறு எதையும் நினைத்துப் பார்க்காது வளர்த்துவிட்டு, அந்தப்பெண் முதிர் கன்னியானவுடன் தமது முடியாமையால், யாரையாவது காதலித்தால் கல்யாணம் செய்து தருவோம் என்று பெற்றோர் கூறுகின்ற போது காதல் என்ன கடையில் வாங்கும் பொருளா? இளமையும் காதல் உணர்வும் இறந்து போன பருவத்தில் காதலிக்கச் சொன்னால், எப்படிக் காதல் வரும் என்று கலங்கி நிற்கின்றனர் பாரதிதாசன் சொன்ன கோரிக்கையற்றுக் கிடக்கும் வேரிற் பழுத்த பலாக்கள்” கன்றும் உண்ணாது கலத்திலும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
திதலை அல்குல் என்மாமைக் கவினே||

எனக் குறுந்தொகைப் பாடலிலே பசு மாட்டினுடைய பால் பாத்திரத்திலும் எடுக்காமல். கன்றுக் கட்டியும் அருந்தாமல் வீணாக நிலத்திலே சிந்தினால், யாருக்குப் பயன் இருக்கப் போகிறது அவள் அழகு பசலை நோயினால், அழிந்து போகின்றது என்பது போல் புலம்பெயர்ந்த பல கன்னிகள் அழகிழந்து ஏங்கி நிற்கின்றனர்.

பூக்களிலே நானுமொரு
பூவாய்ப் பிறப்பெடுத்தேன்
பூவாகப் பிறந்தாலும்
பொன்விரல்கள் தீண்டலையே
பொன்விரல்கள் தீண்டலையே – நான்
பூமாலையாகலையே

என்னும் நாட்டுப் புறப்பாடலிலே பெண்ணின் ஏக்கம் புரிகிறது. இதேபோல

மனைவி ஆகாமலே கன்னி கழியாமலே
தாய் ஆகாமலே தாலாட்டுப் பாடாமலே
பாட்டி ஆகிவிட்டேன் வயதான ஒரே காரணத்தால்

என்னும் ஒரு அற்புதமான கவிதையைப் பெயர் அறியாத ஒரு கவிஞன் பாடியிருக்கிறார்.

இவ்வாறு காதலித்தவனைக் கைப்பிடிக்க முடியாது நல்ல வெயிலிலே ஒரு இடத்தில் வைக்கப்பட்ட நெய்யைக் கைகள் இல்லாத ஒரு வாய் பேச முடியாத ஒருவன் காவல் காத்து நிற்பது போல அழிந்து போகின்ற இளமையும் காமமும் உணர்ந்தும் பேசமுடியாது நிற்கின்ற முதிர் கன்னிகளைத் தரிசிக்கின்ற கலாசாரப் பெட்டகங்கள் இன்னும் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழுகின்றார்கள்.

இந்த நிலையில் தம்முடைய இறுக்கங்களைத் தளர்த்தப் பல பெற்றோர்கள் முன் வந்தாலும், பெண்கள் கண்டவுடன் காதலிக்கும் வயது கடந்துவிட்டதால் தமக்குரிய ஆண்களைத் தரம் பிரித்துப் பார்க்க அவர்கள் மனம் நினைக்கின்றது. வாழ்ந்து பார்த்துக் காதலிப்போம், சேர்ந்து வாழ்ந்து பார்த்து திருமணம் செய்வோம் என முடிவெடுக்கின்றனர். காதல் யாருடனும் வரலாம் கல்யாணம் ஒருவருடனேயே வரவேண்டும் என்று தத்துவம் பேசுகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில், கல்யாணம் அவசியம் தானா? என்ற கேள்விகளை முதிர்கன்னிகள் எழுப்பத் தொடங்கிவிட்டனர். பண்பட்டவர்கள் தமிழர்களா? வெள்ளையர்களா? ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய சூழ்நிலை எம்மவர் மத்தியில் நிழலாடுகின்றது.

மீண்டும் வருகின்றேன். காதல் என்பது எதுவரை?

1,153 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *