பறவைகள் ஆயுதங்களைத் தயாரிப்பதில்லை

ஏலையா க.முருகதாசன்-யேர்மனி

பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்தவர்கள் பஸ்ஸில் ஏறியதும், நான்கு கதவுகளும் மூடப்பட்டு பஸ் புறப்படுவதற்குத் தயாரான போது „ கதவைத் திறவுங்கள்,இதை குப்பை வாளிக்குள் போட வேண்டும் „ என்ற பெண்ணொருவரின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். பெண் ஒருவர், சாப்பிட்ட பாணின் மிகுதியைக் கையில் வைத்திருந்தபடி பஸ்ஸின் பின் கதவடியில் நின்று கொண்டிருந்தார்.

பஸ் சாரதி ஒரிரு விநாடிகள் தாமதித்து கதவைத் திறந்துவிட்டார்.அவரைப் பார்த்த நான், இந்தப் பாண்துண்டு நிச்சயமாக இவர் சாப்பிட்ட மிச்சமான பாண்துண்டல்ல, இவருடையது என்றால் முழுவதையும் சாப்பிட்டிருப்பார்,என்று நினைத்துக் கொண்டன். இது இவர் இருக்கப் போன இருக்கையில் இருந்திருக்கலாம் அல்லது பக்கத்து இருக்கையில் இருந்திருக்கலாம் என்று யோசித்தபடி பஸ்ஸின் கண்ணாடி யன்னலுக்கூடாகப் பார்த்தேன், அவர் அந்த பாண்துண்டை இரண்டு குப்பை வாளிக்குமிடையில் வைத்துவிட்டு பஸ்ஸில் வந்து ஏற கதவை மூடிய சாரதி பஸ்ஸை செலுத்திக் கொண்டிருந்தார்.

பஸ் போய்க் கொண்டிருக்க நான் நேராகவும் அக்கம் பக்கமுமாக பார்த்துக் கொண்டிருந்தாலும் எனது மனம் ஏனோ அந்தப் பெண்ணைச் சுற்றியும் அவர் ஏன் பாண்துண்டை குப்பை வாளிக்குள் போடாமல் இரண்டு குப்பை வாளிக்கும் நடுவில் வைத்தார் என்பதைச் சுற்றியுமே வந்தது.இது ஓரு தேவையில்லாத நினைப்பு என்று மனம் சொன்னாலும் அந்த நினைப்பில் இருந்து மனம் மீளாதிருந்தது.ஒருவேளை பறவைகள் வந்து கொத்தித் தின்னட்டுமே என்ற சீவகாருண்ய நினைப்பில் வைத்தாரோ, அப்படியும் இருக்கலாம் என்று நினைத்த மனம், அப்படிச் செய்ய முடியாதே.பறவைகளுக்கோ குளங்களில் இருக்கும் மீன்களுக்கோ உணவு போடக்கூடாது என்பதையே இங்கே சட்டமாக்கி வைத்திருக்கிறார்களே,அவை தாமாகவே உணவைத் தேடிச் சாப்பிட்டால் அவைகளின் இயல்பு பாதிக்காது என்ற ஆய்வின் முடிவுதானே இச்சட்டத்திற்கு காரணம் என நினைத்துக் கொண்டன்.

தேவையில்லாத ஒரு விசயத்தை மண்டைக்குள்ளை ஏற்றுகிறேனோ என நினைத்தாலும் பாண்துண்டு, பெண், பறவைகள் இவற்றை மூளை நினைக்கத்தான் செய்தது.ஐந்தாவது பஸ் நிறுத்தத்தில் நான் இறங்கி அந்தப் பெண் பஸ்சுக்குள் இருக்கிறாரா எனப் பார்த்தேன்.அவள் இறங்கிக் கொண்டிருந்தாள்.அவள் எங்கே போகிறாள் என்று எனக்குத் தெரியர்து ஆனால் போகும் வழித்தடத்தில் ஒரு மீற்றர் பின்னுக்கும் அரைமீற்றர் எனக்கும் அவளுக்குமான சமாந்தர இடைவெளியில் வந்து கொண்டிருந்தாள்.நான் அவளுடன் பேச்சுக் கொடுத்து கேட்கப் போகிற கேள்வி தேவையற்றது என்று எனது உள்ளுணர்வு உறுத்தினாலும் கேட்டுப் பார்ப்போமே என்ற எண்ணத்துடன்,அவளைத் திரும்பிப் பார்த்து „கலோ“ என்றேன்,அவளும் „கலோ“ என்று சொல்லி முறுவளித்தாள்.

„நீங்கள் பஸ்சுக்குள்ளிருந்த பாண் துண்டை கொண்டு போய் இரண்டு குப்பை வாளிக்கும் இடையில் வைத்ததைக் கண்டனான்..“என்று சொல்லிக் கொண்டிருக்க“நீங்கள் திரும்பிப் பார்த்ததை நானும் கண்டனான் நான் இருக்கப் போன இருக்கைக்குப் பக்கத்தில் இருந்தது பறவைகள் சாப்பிடட்டும் என்று அப்படி வைத்தனான் “ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட நான் பொதுவாக அப்படி சாப்பாடுகளை வைக்கக்கூடாது, ஏனெ;னறால் இங்கு ஒரு சட்டம் இருக்கின்றது,பறவைகளுக்கோ,குளங்களிலிருக்கும் மீன்களுக்கோ உணவு போடக்கூடாதென்று,அவை தாமாகவே தமது உணவைத் தேடிக் கொள்ள வேணடும் என்பதற்காக“ என்றேன்.

„தெரியும்“ என்று சொன்ன அந்தப் பெண், „சூஸ்“ என்று சொல்லிவிட்டு ஒரு கடையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.நான் சந்தையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன்.
நான் ஒவ்வொருநாளும் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதுண்டு,சில நாட்களில் சைக்கிளில் செல்வதுமுண்டு.அந்தப் பெண்ணுடன் கதைத்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஒரு காட்டு வழியாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்த போது ஒய்வெடுக்கும் இருக்கைகளில் இரு பெண்கள் உட்கார்ந்திருப்பதும் அவர்களுக்கு முன்னால் தரையில் பறவைகள் எதையோ கொத்திக் கொண்டிருப்பதும் தெரிந்தது.

அந்தப் பெண்களின் இருக்கைகளை சைக்கிளில் போனபடி நான் அணுகிய போது அவ்விரு பெண்களும் தானியங்கள் எதையோ தூவிக் கொண்டிருக்க புறாக்கள் அதைக் கொத்திக் கொண்டிருந்தன. அவர்களில் ஒருவர் நான் ஐந்து நாட்களுக்கு முன் பஸ்ஸில் சந்தித்தவர்.அவரைப் பார்த்ததும், என்னை ஞாபகப்படுத்திய அவர் „கலோ“ என்றார்.சைக்கிளை நிறுத்திய நான் „கலோ என்று சொல்லிக் கொண்டே ஒரு காலை ஊன்றியபடியே,“என்ன அன்றைக்கு செய்தது போல இன்றைக்கும் பறவைகளுக்கு சாப்பாடு கொடுக்கிறீர்களே,இது பிழையென்று உணரவில்லையா „ என்றேன்.
அதற்கு அவள் பக்கத்திலிருந்த பெண்ணைக் காட்டி „அவளைப் பாருங்கள் அவளின் கண்களைப் பாருங்கள் அழுதழுது கண்கள் சிவந்து முகம் வீங்கிக் கிடக்குது.நான் உக்ரைனிலிருந்து இருபது வருடங்களுக்கு முன்பு வந்தவள். அவள் என்னுடைய பெரியம்மாவின் மகள்.உக்ரைனுக்கும் ரஸ்யாவுக்கும் சண்டை நடந்து கொண்டிருப்பதால் சண்டைக்கு கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் பறிகொடுத்துவிட்டு வந்திருக்கிறாள்.அதற்கு யார் யார் காரணம்.பறவைகள் தாமாகவே உணவைத் தேடிக் கொள்ள வேண்டுமென்பவர்களும் நாடுகளும்,தமது சுதந்திரத்தை தாமாகவே தீர்மானிக்கட்டும் என்று சொல்லவில்லையே.
சமாதானச் சின்னமாக ஓலிவ் இலையை அலகில் கொண்டு செல்லும் புறாக்கள் மனிதர்கள் ஒருவரையொருவர் அடக்க மேற்கொள்ளும் ஆயுதப் போரை அறிந்தால் ஓலிவ்விலைக்குப் பதிலாக அவை துப்பாக்கிகளை கொண்டு செல்லும் போர்களை ஒழிப்பதற்கு „ என்றவளின் முகத்தைப் பார்த்தேன் விரக்தியில் முகம் இறுகியிருந்தது.அவள் வாயிலிருந்து பறவைகள் ஆயதங்களைத் தயாரிப்பதில்லை என்றவார்த்தைகள் வெளிவந்தன.அவளின் பெரியம்மாவின் மகள் இருக்கையில் சாய்ந்தபடியே உயரமான மரங்களின் கிளைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்,இரண்டு கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்து.

எனக்கு அறிமுகமாகியிருந்த பெண்“ பறவைகள் தீர்மானிக்கட்டும் தமது தேவைகள் எதுவென்று,அவைகளை வழிநடத்த வேண்டிய உரிமை மனிதர்களுக்கு இல்லை“ என்றவள், கோபத்துடன் தன் கையிலிருந்த பிளாஸ்ரிக் பெட்டியிலிருந்து கைகொள்ளுமளவிற்கு தானியத்தை அள்ளி புறாக்களின் முன்னால் பரவி வீசினாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.ஆனால் அனைத்துப் போர்களையுமே வெறுக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது.வருகிறேன் என்று கைகளால் மட்டும் சைகை காட்டி விட்டு சைக்கிளை ஓட்டத் தொடங்கினன், அவளும் கைகளை உயர்த்தி விடை கொடுத்தாள்.மற்றப் பெண்ணும் தலையைக் குனியாமலே கைகளை உயர்த்தி விடை கொடுத்தாள். போர்களுக்கெதிரான கோபம் அவர்களின் முகத்திலும் மனத்திலும் தெரிந்தது.

989 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *