கூடுவிட்டு கூடுபாய்வது போல்! அவர்களை நாமாக வரிந்துகொண்டு!! அவர்களாகவே வாழ்ந்து அனுபவம் காண்பது என்பது ஒரு கலை!!!

பருத்தித்துறை வடையும் பிரித்தானிய தம்பதிகளும்!
-மாதவி

ஒரு நாட்டவர்களது, ஒரு இனத்தவர்களது, பழக்கவழக்கங்களை நாம் அறிவதென்பது, ஒரு உன்னதமான அனுபவம். தாய்லாந்து,போனால் அவர்கள் அணியும்,மாலையைப்போட்டு படம் எடுப்பதும்,அவர்களது தொப்பியை, அணிவதும், அதனை முகப்புத்தகத்தில் பகிர்வதும்,மட்டும் அவர்களது,பண்பாடுகள்,வாழ்க்கை முறமைகளை முழுமையாக பார்த்த தாக,எண்ணிவிட முடியாது. இங்கே ஒப்பீட்டு அளவுகோலை முதலில் புறந்தள்ளி வைத்துவிட்டு,கூடுவிட்டு கூடுபாய்வது போல் அவர்களை நாமாக வரிந்துகொண்டு அவர்களாகவே வாழ்ந்து அனுபவம் காண்பது என்பது ஒரு கலை.

இந்தக்கலை எமது வாழ்வியல் முறைகளில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதற்கு காரணம் நாம் எந்த நாட்டுக்கு விடுமுறைக்கு சென்றாலும்,உணவைத்தவிர ஏனையவற்றை அழகிய கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்து, வெளியில் அவர்களது வாழ்கையை பார்க்கும் பார்வையாளர்களாக மட்டுமே நாம் இருப்போம். இலங்கை, இந்தியா, கென்யா, எந்த நாடாக இருந்தாலும் பிற நாட்டவர்கள் தாம் விடுமுறைக்கு செல்லும் நாடுகளின் கலாச்சாரங்களை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று ஓர் இரு நிகழ்ச்சியை பார்த்து யாவும் பார்த்தோம் என்ற மனநிலையில் திரும்புவர். இங்கு நான் குறிப்பிடும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாக் ஜனற், ஜெலண்ட் தம்பதியினர் இலங்கையில் வட பகுதிக்கு சென்று பருத்தித்துறை நகரில் 3 வாரம் தங்கி வந்துள்ளார்கள். அவர்களும் நல்லூர் கந்தன் ஆலயத்தில் முன் வேட்டி, சேலையுடன்,நின்று படம் எடுத்துப்போட, அதற்கு 1000 லக்குகள் குவிய நிமிர்ந்து பார்த்தேன்.

ஒன்றில் இவர்கள் ஒரு தமிழ் குடும்பத்தின் சம்மந்தியாக இருக்க வேண்டும், அல்லது இவர்கள் ஆடைப் பிரியர்களாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன்.அதுமட்டுமல்ல -அட நாம் ஆங்கிலேயர்களின் ஆடையுடன் வெளிநாடுகளில் மட்டுமல்ல,தாய் நாட்டிலும் வலம் வருகிறோம். அதற்காக எவரும் எம்மைப் படம் எடுத்து போட்டு லக்குகள் குவித்ததாக நான் அறியவில்ல- என மனதுக்குள் கிண்டலும் அடித்துக்கொண்டேன். இருந்தாலும் பதிவிட்டவர்களை ஃபேஸ் புக் இல் தேடிப்பிடித்து விட்டேன்.

தனது தாயை பார்ப்பதற்காக இங்கிலாந்தில் இருந்து, பருத்திதுறைக்கு சென்று, வருடத்தில் பல மாதங்களை தாயுடன் கழிக்கும் மகளும் மருமகனும் அவர்கள். அவர்களுக்கு போன் போட்டு, அந்த வெளிநாட்டவர்கள் யார்? வேட்டி சால்வை சேலை என அட்டகாசமாக படங்கள் பார்த்தேன், அவர்களுடன் நீங்களும் நிற்கிறீர்கள்,என்ன உறவு உங்களுக்கு என்றேன். அவர்கள் எமது நண்பர்கள் என்றார்கள், எந்த ஹோட்டலில் நிற்கிறார்கள் என்றேன், அவர்கள் இங்குதான் நிற்கிறார்கள். அவர் தேங்காய் துருவிகிறார், அவ முருககையிலை ஒடிக்கிறா, கதைக்ப் போகிறீர்களோ என்றா.
நான் கதைக்கவில்லை! அவர்கள் பற்றி அறியவே கேட்டேன். அவர்கள் பற்றி பலகதைகள் கேட்டேன். அவர்கள் சொன்னதில் இருந்து எமது காலாச்சாரம், பண்பாடு பற்றி நம்மோடு வாழ்ந்து அறிவதில் ஆர்வம் உள்ள தம்பதியினர் என்று அறிய முடிந்தது.

காலை எழுந்ததும் காலை உணவுக்கு தேங்காய் உரித்து, சம்பல் அரைப்பது, கடற்கரைக்கு சென்று மீன் நண்டு இறால் வாங்கி, நோண்டி சமைப்பது, வரை அவர்களும் இணைந்து செய்கிறார்கள். தேங்காய் உரித்தபோது தேங்காய் இப்படியா என அதன் மூலத்தைக்கண்டு விழிந்தார்கள். 5நட்சத்திர ஹோட்டலில் காட்சிப்படுத்தலுக்கும், இங்கு இயல்பாக காட்சியாவதற்கும் நிறையவே வேறுபாடு கண்டார்கள்.மீன் வாங்க கடற்கரை சென்று மீனவர்களுடன் கதைத்து அவர்கள் அனுபவங்களை கேட்டு,பேரம் பேசும் மனம் தளர்ந்து, அவர்களுக்கு உரியதைக் கொடுங்கள் என்று சொன்ன அந்த தம்பதிகளின் உள்ளம் பெரிது.

பின் முற்றத்தில் மண் சட்டியில் மீன்களை நீரால் அலசி,விறகு அடுப்பில் சமைத்து, சுவைக்க சுவைக்க உண்டனர். இந்த அனுபவ உணர்வுகளும், சுவையும் 5 நட்சத்திர ஹோட்டலில் அலங்கரிக்கப்பட்ட கோப்பையில் இருக்கும் மீன் குழம்பில் நிச்சயம் கிடையாது.

காலையில் எழுந்ததும் உடற்பயிற்சியை, வயதான தாய்க்கு,அவர் சொல்லிக்கொடுக்க, தாயகத்தில் முன்னோர் செய்த உடற்பயிற்சிகளை தாய் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க அங்கே ஒர் பாரம்பரிய உடற்பயிற்சி மாநாடே நடை பெறும்.
இலங்கையின் பல பாகங்களுக்கும், சுற்றுபயணம் சென்றார்கள். செல்லும் இடம் எல்லாம் அந்த அந்த இடத்திற்குரிய மரியாதையை கொடுக்கப் தவறவில்லை.ஆலயங்கள் என்றால் நான்கு மணிநேரமும், சேலையுடனும், வேட்டியுடனும் நின்று வணங்கி பிரசாதம் உண்டு மகிழ்ந்தனர். போகும்போது எப்பவும் மறவாது வாழைப்பழமும்,வடையும் எடுத்து செல்வார்கள்.

சீப்பு சீப்பாய்த்தான்; வாழைப்பழம் காய்க்கும், என்று எண்ணியவர்கள், பழத்தை வாழைக்குலையாகக் கண்ட போது ஆச்சரியம் அடைந்தார்கள். வீட்டில் கோழி,வாழை,கீரை,தக்காளி,என்பவற்றை கண்ட போது, இங்கே பயோ என்று எதிலும் போடவேண்டிய அவசியம் இல்லை, என்று உளமார மகிழ்ச்சி அடைந்தார்கள்.
நாளை லண்டன் பயணம் இப்ப நேரம் இல்லை, நாம் பருத்தித்துறை வடை சுடவேண்டும் அவர்களுக்கும் மிகவிருப்பம் அவர்கள் அதுதான் லண்டனுக்கு எடுத்து செல்லப்போகிறார்கள். அதுமட்டுமல்ல இங்கேயும் எம்முடன் அவர்கள்தான் சுடப்போ கிறார்கள். என்றார்கள். ஒரு தாய் தன் இறுதிக்காலத்தில் எப்படி தன் பிள்ளையுடன் எப்படி மகிழ்வாக இருக்கின்றார் என்பதனையும் உணர்வோடு அவர்கள் கண்டு மகிழ்ந்து திரும்புகிறார்கள். இந்த 5 நட்சத்திரங்களுக்கு பக்கத்தில் இன்னும் எத்தனை நட்சத்திரங்கள்; (Stars)வந்தாலும் இந்த வாழ்வுக்கு நிகரில்லை அல்வா. வெற்றிமணி பத்திரிகையில் நாமும் வருகிறோம் என்ற ஒருகுழந்தையின் சிரிப்போடு அவர்கள் இருப்பதைக் காணலாம். படங்கள் உதவிய சாந்தி. தெய்வேந்திரன் அவர்களுக்கு நன்றி.

980 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *