பெண் என்பவள் அழகென்ற விம்பத்தை தாண்டி இச்சமூகத்தை அழகாக மாற்றுபவள்
-கலாசூரி திவ்யா சுஜேன்
அகத்தேயும், புறத்தேயும் விடுதலை கொண்டு, வெண் வானின் தங்கப் பட்சிகளாய், வெற்றி நிலவைக் கைக்கொண்டு வாழத் தெளிந்தோர் பெண்கள். பெண்ணினினிமையைக் கொண்டாடும் ஆணினம் இவ்வையத்துகந்த வரம்.
பெண்மையைப் போற்றும் ஆண்மையைக் காட்டினின்று ஆண்களுக்குப் பெருமை சேர்த்தவர் பாரதி.
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
ஆண்கள் எம்மை அவர்களுக்கு நிகராக ஏற்றுக்கொள்வார்கள் எனில், நம் தாய் திருநாட்டை மீட்டிட ஆண்களோடு சேர்ந்து பெண்கள் நாமும் உழைப்போம் என்று தமிழ் பெண்கள் தம் வீரம் காட்டுகிறார்.
குறைவி லாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்
சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
உலக வாழ்க்கையின் நுட்பங்களில் தேர்ச்சி பெற்று, பல வகையான நூல்களைக் கற்று, நமது நாட்டில் உள்ள விடயங்களை அறிவதோடு மட்டும் நின்று விடாது, உலக நாடுகளுக்கு சென்று, தேடிய நுட்பங்களை நம் தாய் நாட்டுக்கு கொண்டு வந்து, நம் நாடு மேன்மை பெற வழி சமைக்க வேண்டும். பழைய மூட வழக்கங்களை இல்லாது செய்து,புதிய சாஸ்திரங்களையும், சௌகரியங்களையும் படைக்க வேண்டும்.
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;
இந்த உலகத்தை மாற்றக் கூடிய சக்தியும். இவ்வையத்தில் வாழ்வோரை தேவர்களாக மாற்றாக கூடிய சக்தியும் பெண்களிடம் உண்டு. பட்டங்கள் ஆள்வோம். சட்டங்கள் செய்வோம். இவ்வாறு நாட்டு நலம் பேணுவது மட்டுமல்ல. வீட்டு நலமும் மிகவும் சிறப்பாக பேணுவோம். வேதமும் படைப்போம். சாதமும் படைப்போம்.
அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்.
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்.
மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டி விட்டோ மென்று கும்மியடி!
வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.
கடமை செய்வீர்,நந்தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர்,துணி வுற்றே
என அன்றைய பெண்களிடம் பலவகையிலும், பலவாறும் வீரத்தை விளைக்க பாடுபட்டுப் பாடினார். அதன் விழைவாக இன்று நம் பெண்கள் முன்னையதைக் காட்டிலும் முடிந்தளவு அவர்களின் சுதந்திரத்தை அனுபவிக்கும் நிலையினைப் பெற்றுள்ளனர்.
இன்று பொதுவாழ்வு,உத்தியோகத்துறைறை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் பெண்களும், இனி,எதிர்வரும் காலத்தில் உலகின் பல பணிகளிலும் தங்களைப் பிணைத்துக் கொண்டு சாதனை படைக்கவிருக்கும்; இளம் பெண் தலைமுறையினரும், ஆண்களுக்குச் சமமானமுறையில் பல துறைகளிலு’சமத்துவம்’ பெறபேண்டும் என்று.ஐ.நா.சபை அழுத்திச் சொல்கிறது. 19ம் நூற்றாண்டின் கடைசி கால கட்டத்திருந்து உலகில் பல அரசியல்,பொருளாதார, சமூகவியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன.அந்த மாற்ங்களில் பெண்களின் பங்கும் கணிசமாகவிருந்தன.
பெண்களின் நலன் மீது அதிக அக்கறை காட்டிய மனிதராகவும், பெண்களை அடிமைப்படுத்திய காலத்தில் அவர்களைப் போற்றிப்பாடிய புனிதனாகவும் பாரதி திகழ்ந்தார் என்பது மறுப்பதற்கில்லை.
காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
காதல் மனைவியே சக்தி கண்டீர்
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா
‘போற்றி தாய்’ என்று தாளங்கள் கொட்டடா!
‘போற்றி தாய்’என்று பொற்குழ லூதடா!
பெண்களின் அனைத்துப் பருவத்திற்கும் கவிதை தந்தார். சிறுவர்களுக்கு துணிந்து, தெளிந்து நிற்கும் அறிவினை பாப்பா பாட்டிலேயே அறிமுகப்படுத்தி விடுகிறார்.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
.ஓன்றைச் செய்து வெற்றிபெற வேண்டும் என்ற பெண்கள் உறுதியுடன் நினைத்தால் யாரும் அவர்களைத் தடுக்க முடியாது’ என்கிறார். றிதிமா பாண்டே
பெண் என்பவள் யார்? மேன்மையானவள், அழகானவள், அடக்கமானவள் என்றெல்லாம் கவிஞர்கள் வர்ணித்து கொள்வார்கள். ஆனால் பெண் என்பவள் அழகென்ற விம்பத்தை தாண்டி இச்சமூகத்தை அழகாக மாற்றுபவள்.
தன்னையும் தன்னைச் சூழ்ந்தோராய்யும் அழகாக்க தலைமைத்துவம் என்னும் அணிகலனை கொடுத்தே இப் பூமிக்கு அனுப்பி வைக்கிறான் இறைவன்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் இம்மண் தந்த ஜனன பரிசு தலைமைத்துவம். பெண்கள் இயல்பிலேயே தலைமைத்துவம் வாய்ந்தவர்களாகத் தான் பிறக்கிறார்கள்.
“மங்கையராய் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்” என்று பாடுகிறார். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அந்தளவிற்கு மனித வாழ்க்கையில் பெண்களின் முக்கியத்துவம் அளப்பரியது.
பாரதியைத் தழுவி,பார்போற்றும் பெண்களென பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களின் இன்பத்திலும் உண்மை ஒளியோடு உறைந்து கொண்டிருக்கிறார் பாரதி.அவ்வெளிச்சத்தின் விசாலத்தில் விண்ணையும் சாடும் வீர மங்கையராய் ஆற்ற வேண்டிய உலகப் பணிகள் பலவுள என்றுணர்ந்த பெண்களைப் போற்றி பணிந்து சர்வதேச மகளிர் தின வாழ்த்துகைளை தெரிவித்து நிறைகிறேன்.
893 total views, 3 views today