பாலின சமத்துவமும் இலங்கையும்
ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என விரும்பும் மனநிலை முற்றாக மறையவில்லை.
- ரஞ்ஜனி சுப்ரமணியம் – இலங்கை
”எண்ணிமம் எல்லோருக்கும்: புத்தாக்கமும் தொழில்நுட்பமும் பாலின சமத்துவத்தினை நோக்கி ”
“DigitALL: Innovation and technology for gender equality”.
2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேசப் பெண்கள் தினத்திற்கான கருப்பொருள் இதுவாகும்.
ஆணாதிக்கம் அதிகம் உள்ள விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பெண்கள் தொடர்ந்தும் தமது சமத்துவத்திற்காக போராட வேண்டியுள்ள நிலையிலேயே இந்தக் கருப்பொருள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த எண்ணிமயுகத்தில் வளர்ந்து வரும் புத்தாக்கங்கள் மற்றும் தொழில் நுட்ப துறைகளில் பாலின சமத்துவத்தினையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்தும் விதத்தில் இக்கருப்பொருள் அமைந்துள்ளது.
பாலின சமத்துவமானது மிக முக்கியமான மனித உரிமைகளில் ஒன்றாகும். வன்முறைகளற்ற ஒன்றிணைந்த சமூக வாழ்வுக்கும் மிக அவசியமானது. சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் ரீதியாக பெண்கள் முன்னேற்றம் அடைவதை இலக்காக முன்னிறுத்தி, ஆண்டிற்கு ஒருமுறை மார்ச் எட்டாம் திகதியன்று ‘சர்வதேச பெண்கள் தினம்’ கொண்டாடப் படுகிறது.வெவ்வேறு தொனிப் பொருள்களால் சிறப்பிக்கவும் படுகின்றது. இத்தினத்தின் தோற்றத்துக்குப் பின்னே ஒரு போராட்ட வரலாறும் உண்டு. வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி,அடுத்த ஆண்டு இந்த நாளை தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது. எனினும் 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா.மார்ச் 8-ஐ சர்வதேசப் பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்துக் கொண்டாடத் தொடங்கியது.
அண்மைய தரவுகளின்படி உலகளாவியரீதியில் பாலின சமத்துவத்தில் ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, சுவீடன்,ஆகிய நாடுகள் முன்னிலையிலும் ஆப்கானிஸ்தான்,யேமன்,ஈராக்,பாகிஸ்தான்,சிரியா,ஆகியன கடைநிலையிலும் இலங்கை மத்திமநிலையிலும் தெற்காசியாவில் பங்களாதேஷ் முதன்மை நிலையிலும் உள்ளன.
கல்வி தொழில்வாய்ப்பு வேதனம் ஆகியவற்றில் சமவாய்ப்பின்மை,வீட்டிலும் வேலைத்தளத்திலும் எதிர் கொள்ளக் கூடிய வன்முறைகளுக்கும் பாலியல் அத்துமீறல்களுக்கும் எதிராக சட்டரீதியில் போதுமான பாதுகாப்பின்மை, தனது உடல் பற்றிய தன்னதிகாரம் இல்லாமை, வாழ்க்கைத் திட்டமிடலில் போதிய அதிகாரம் இல்லாமை, அரசியலில் சமவாய்ப்புகள் இல்லாமை, பாரபட்சமான சமூகப்பார்வை, இன நிறப்பாகுபாடு, மருத்துவ வசதிகளில் சமமின்மை ஆகியன உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவமின்மையின் முக்கிய பிரச்சனைகளாக இனம் காணப்படுகின்றன.
இலங்கையில் பாலின சமத்துவத்தின் விகிதாசாரங்களை நோக்கினால்,கல்வி மருத்துவ வசதிகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க சமத்துவத்தைக் கொண்டிருக்கிறார்கள். தாய்சேய் மரணவிகிதங்களைக் குறைப்பதிலும் குறிப்பிடத்தக்க நல்லிலக்கு எய்தப்பட்டுள்ளது. எனினும் அரசியல் மற்றும் பொருளாதாரப் பங்களிப்புகள் குறைவா கவேயுள்ளன. அண்ணளவாக 22 மில்லியன் மொத்த சனத் தொகையில் 52வீதம் பெண்களாவார். இலவசக் கல்வியின் நல்லம்சமாக 93வீதம் எனும் ஆண்களின் எழுத்தறிவுக்கு நிகராக 90 வீதம் எழுத்தறிவு பெற்ற பெண்பிரஜைகளைக் கொண்ட நாடு. எனினும் படிப்பை முடித்த பின், குறிப்பாக திருமணத்தின் பின் தொழில் புரியும் பெண்களின் வீதம் குறைவானது.
8.5 மில்லியன் பொருளாதார இயங்குநிலை கொண்ட மக்கள் தொகையில், பெண்களின் தொழில்படை விகிதாசாரம் மூன்றில் ஒரு பங்காகவே இருக்கின்றது. உயர் பதவிகளிலும், பதவி உயர்வுகளிலும் குறிப்பிட்ட சில துறைகளிலும் பொதுவாக ஆண்களுக்கே மறைமுக முன்னுரிமை அளிக்கப் படுகின்றது ஆணாதிக்க சித்தாந்தங்களின் விளைவாக வீட்டு வேலைகளும், குழந்தை வளர்ப்பும் பொதுவாக பெண்களுக்கானவை என்ற மாறாமரபு மனோவியல் இன்றும் கணிசமாகக் காணப்படுவதும் இவற்றுக்குக் காரணமாகின்றது.
உலகின் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இலங்கை. எனினும் இன்று அரசியலில் பெண்களின் பங்களிப்பு 6 வீதத்திற்கும் குறைவான பிரதிநிதித்துவத்தையே கொண்டிருக்கிறது. இது உலகளாவியரீதியிலும் (நிலை182ஃ193) தெற்காசியப் பிராந்தியத்திலும் ஒப்பீட்டுரீதியில் மிகக்குறைவானதாகும். இதனால் பெண்களின் சமத்துவம் பற்றிய வலியுறுத்தல்கள், சட்டவாக்கங்கள் என்பவற்றில் பாதகமான நிலைமை ஏற்படலாம்.
UNFPA அறிக்கை ஒன்றினை ஆதாரமாகக் கொண்ட 2022 இன் செய்தி ஒன்று, இலங்கையில் நான்கில் ஒரு பெண் பௌதிக அல்லது பாலியல் வன்முறைக்கு உள்ளாவதை உறுதிப் படுத்துகிறது. அத்துடன் 2019 ம் ஆண்டு நடாத்தப்பட்ட UNFPA ஆய்வு ஒன்று 90மூ பெண்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பொதுப் போக்குவரத்துகளில் பாலியல் ரீதியான தொல்லைகளைச் சந்தித்து உள்ளதாகவும் கூறுகிறது. தசாப்த காலங்களாகத் தொடர்ந்த ஆயுத யுத்தம் பாலியல் துஷ்பிரயோகங்களை அதிகரிக்கச் செய்துள்ளதுடன், பெண் தலைமைத்துவ குடும்பங்களையும் உருவாக்கி, நிலைமையை பொருளாதார ரீதியாகவும் மோசமாக்கி உள்ளது.
கோவிட் நோய்நிலைமையைத் தொடர்ந்த சமீபத்திய சமூக பொருளாதார நெருக்கடிகள்,வருமான பாதிப்பு மற்றும் விலைவாசி உயர்வு என்பனவற்றால் உருவான மனவிரக்திகள் பெண்களின் மீதான வன்முறைகளை மேலும் உக்கிரமாக்கி உள்ளன. எனினும் அண்மையில் உள்ள பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, பெண்ணுரிமைகளில் இலங்கையின் நிலை சற்று ஆறுதல் தருவதாக உள்ளது.
உடலாலும்,உள்ளத்தாலும், வார்த்தைகளாலும், பாலியல் மற்றும் சமூக ரீதியாகவும் ஒடுக்கப்படும் பெண்கள் கிளர்ந்து எழுதல் தவிர்க்க முடியாதது.தனது உரிமைகளுக்காகப் போராடும் பெண்ணியவாதி என்பவள் ஆணுக்கு எதிரானவள் அல்ல. ஆணாதிக்கத்துக்கு எதிரானவள் என்பதை இன்றும் நம்மவர்களில் பலர் புரிந்து கொள்வதில்லை. காலாகாலமாக சமுதாயத்தில் வளர்க்கப்பட்டு வரும் ஆண் மேலாதிக்க மனநிலையானது சம உரிமைகளுக்காகப் போராடும் பெண்களுக்கு எதிரான சாய்நிலை ஒன்றினை எப்போதும் கொண்டிருக்கிறது. தமிழர்களின் கலாசாரத்தில் பெண்களின் ஒடுக்குமுறை சற்று அதிகமானது என்றே கூறலாம்.
எமது நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை, படித்து வேலை செய்யும் பெண்களானாலும் கூட திருமணத்தில் எதிர்பார்க்கப்படும் பெருந்தொகையான சீதனம், கணவனை மீறி எதையும் செய்ய முடியாத மன அழுத்தம், குழந்தை வளர்ப்பு சமையல் உட்பட்ட குடும்பப் பொறுப்புகளில் சுமத்தப்படும் அதிக வேலைப்பளு, திருப்தியற்ற மணவாழ்வாயினும் நின்று நிலைக்க வேண்டும் என்ற சமூக நிர்ப்பந்தம், விதவைகள் விவாகரத்தானவர்களுக்கு மறுமணம் செய்வதில் உள்ள பிரச்சனைகள், வேலைக்குச் செல்லும் இடங்களில் ஏற்படும் ஆண் மேலாதிக்கம் மற்றும் பாலியல் தொந்தரவுகள்,எதிர்த்து கேள்வி கேட்டால் பெண்ணைப் பற்றியே அவதூறு சொல்லும் நிலைக்கு ஆளாக்குதல் ஆகியன குறைந்திருந்தாலும் இன்றும் தொடர்கின்றன. இதனால் ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என விரும்பும் மனநிலை முற்றாக மறையவில்லை.
நமது கலாசாரத்தில் குழந்தைகளின் வளர்ப்புமுறை ஆண்பெண் சமத்துவத்தை வலியுறுத்துவதாக இல்லை. ஆடைக்கட்டுப்பாடு, நேரக்கட்டுப்பாடு, வீட்டு வேலைகளில் உதவுதல், கல்வி முன்னுரிமை முதற்கொண்டு பல படிமுறைகளில் வீட்டுச் சூழலிலேயே ஆணாதிக்கத்தின் அத்திவாரம் இடப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் இருந்தே பெண் மனநலிவுக்கு உள்ளாக்கப் படுகின்றாள்.இதற்கு மாறாக ஆண்குழந்தைகள் மேலாதிக்க மனநிலையுடன் வளர்க்கப் படுகின்றனர்.இதனால் மணமாக முன் ஓரளவு சமத்துவமான வாழ்வினைக் கொண்ட பெண்களும், மணமான பின் உடலாலும் மனதாலும் சுதந்திரமான வாழ்வினை அடைய முடியாதவர்களாகவே இருக்கின்றனர். குடும்பத் தலைவியாகிய தாய் இதற்கு முக்கிய காரணமாகிறார் என்பது நகைப்புக்குரிய முரண்நிலை.இத்தகைய மனநிலை மாற்றம் பெறுவதற்கு, பெண்களை சமத்துவ நோக்குடனும் கண்ணியமான எண்ணங்களுடனும் அணுகுவதற்கு சிறுவயதில் இருந்தே குடும்ப மட்டத்தில் பெற்றோரும், பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களும் ஆண்குழந்தைகளை வழிப்படுத்துதல் அவசியமாகிறது.
புலம் பெயர்வு நமது பெண்களின் வாழ்வில் சில விடியல்களையும் ஆண்களின் மனநிலையில் கணிசமான மாற்றங்களையும் கொண்டு வந்திருப்பது உண்மையே.எனினும் புலம் பெயர்ந்த முதல் தலைமுறையினரின் தாயக வேர்கள் இன்னும் தமக்கான பாரம்பரிய பழக்க வழக்கங்களை முற்றாக மறுதலிக்கவில்லை. திருமணச் சடங்குகளில் முக்கியமானதாகக் கருதப்படும் கன்னிகாதானம், தாரை வார்த்தல், பெண்ணுக்கு மட்டும் தாலி அணிவித்தல் முதலான திருமணச் சடங்குகளும் ஆணாதிக்கத்தை உறுதிப் படுத்தும் காரணிகளாக இன்றும் தொடர்கின்றன. இதனால் பெண்ணின் மீது ஆணுக்கு உடைமை மனநிலை தோற்றுவிக்கப் படுகிறது.
பெண்களின் உரிமைகளில் மிக முக்கியம் வாய்ந்ததாக சகல விதமான பாலியல் வன்முறைகளில் இருந்தும் விடுபடுதல் அமைகிறது. ஏனெனில் பால் நிலைமை சார்ந்தே பெண்ணுக்குரிய அனைத்துப்பிரச்சனைகளும் ஆரம்ப மாகின்றன.பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களே,குற்றம் செய்த ஆண்களை விட அதிக அவமானத்திற்கு உள்ளாகின்றனர்.எதிர்த்து நியாயம் கேட்கும் பெண்ணைப் பற்றியே அவதூறு சொல்லும் விகார மனப்பான்மை இன்றும் பல பெண்களை ஊமைகளாகவே வைத்திருக்கின்றது.
எதிர்காலத்தில் இந்நிலையை இல்லாது ஒழிப்பதற்கு பெண் கல்வி, உலக அறிவு, பாலின மற்றும் சொத்துரிமைகள் பற்றிய அறிவூட்டல், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் மூலமான பொருளாதார பலம்,தன்நம்பிக்கை ஆகியவற்றை வளர்க்க வேண்டும். பெண்கள் தமது வாக்குரிமைகளை பாவித்து பெண் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்தல் , சுயதொழில்களில் ஈடுபடுதல், பெண் சமத்துவம் பேணும் நிறுவனங்களை ஆதரித்தல், குடும்பத்திலும் சமூகத்திலும் தனது உரிமைக்காகப் போராடுதல் ஏனைய பெண்களையும் வழிப்படுத்தல் ஆகியவை நம்பிக்கை அளிக்கும் மாற்றங்களைத் தரும்.
ஆண்களைக் கவரும் பெண்மையின் மென்மையும் கவர்ச்சிகரமான உடலமைப்பும்,தெய்வீகத் தன்மையாக கருதப்படும் தாய்மையும் தான் பெண் பலவீனமாகக் கருதப்படுவதற்கும் காரணமாகின்றன என்பது வருத்தத்துக்கு உரியது. இந்த நிலை மாறி பாலின சமத்துவம் நிலைபெற வேண்டும் என்பது அனைவரினதும் இலட்சியமாக வேண்டும்.
1,190 total views, 3 views today