பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்! இசைக்குப் பின்; இருக்கும் அறிவியல் என்ன?


Dr.நிரோஷன் தில்லைநாதன்.ஜேர்மனி

உங்களுக்குப் பிடித்த பாடல் என்ன? அம்மம்மாவைக் கேட்டால் „பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ“ பிடிக்கும் என்பார். அப்பாவிடம் கேட்டால் „வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே“ என்பார். அதுவே ஒரு இளைஞரிடம் கேட்டால் „போற போக்கில் ஒரு லுக்க விட்டு என்ன செஞ்சிட்டாளே, என்ன செஞ்சிட்டாளே“ என்பான். தமிழர்களிடம் மட்டும் இல்லை, இந்த உலகில் யாரைக் கேட்டாலும் சரி, இசையைப் பிடிக்காதவர்கள் இருக்கவே மாட்டார்கள். அனைவருக்கும் பிடித்த பாடல்கள், பிடித்த பாடகர், பிடித்த இசையமைப்பாளர் என இருக்கத்தான் செய்யும். ஆனால், ஏன் எல்லோருக்கும் இசை என்றால் பிடிக்கிறது? சிலருக்கு இசை ஒரு போதை போன்று மகிழ்ச்சியைக் கொடுக்கிறதே. இசையில் அறிவியல் ரீதியாக அப்படி என்ன தான் இருக்கிறது?

இசை எல்லோருக்குமே புரிகின்ற ஒரு மொழி என்றே கூறலாம். வார்த்தைகளால் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை விட இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும். அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை: பல ஒலி அதிர்வெண்கள் (audio frequency) கலந்து விதம் விதமான வடிவங்களில் காற்றில் மிதந்து நமது செவிகளை அடைவதைத் தான் இசை என்று கூறுகின்றோம். நமது கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கின்றனவோ, அதே போன்று தான் நமது காதுகளும் ஒலியைச் செயலாக்கம் செய்கின்றன. உண்மை சொல்லப்போனால் நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். என்ன நண்பர்களே, புரியவில்லையா? நாம் நமது தாயின் கருப்பையில் இருந்த போது, நமது கண்களால் ஒன்றுமே பார்க்கமுடியாமல் இருந்தோம். ஆனால், நாம் நமது காதுகளால் எப்போதுமே இசையை ரசித்துக்கொண்டு தான் இருந்தோம். அது வேறு ஒன்றுமே இல்லை, நமது தாயின் இதயத்துடிப்பு தான். எப்போதுமே நமக்கு தாலாட்டு போல் அந்த இதயத் துடிப்பின் இசையில் நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம்.

மனித உடலில் இருக்கும் ஒரு சுவாரசியமான குணம் என்னவென்று தெரியுமா? உயிர் வாழ்வதற்கு அத்தியா வசியமான சம்பவங்கள் நமது உடலுக்குள் நடைபெறும்போது நமது மூளை மகிழ்ச்சி மற்றும் திருப்தி போன்ற உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறது. உதாரணத்திற்குப் பசிக்கும் போது நாம் தேவைக்கு ஏற்ற மாதிரி உணவு அருந்திவிட்டதும் நமது பசி தீர்ந்துவிட்டு, உடனடியாக சந்தோஷமும் திருப்தியும் அடைந்து விடுகின்றோம். ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது என்றால் டோபமீன் (dopamine) எனப்படும் வேதியியல் பொருள் நமது மூளைக்குள் வெளியிடப்படுகிறது. இது நரம்புக்கடத்தியாக (neurotransmitter) பணிபுரிந்து இந்தச் சந்தோஷமும் திருப்தியும் கலந்த உடல்நிலைக்குக் காரணமாக இருக்கிறது. இதேப்போன்று தான் போதைப்பொருட்கள் பாவிக்கும் வேளையில் டோபமீன் வெளியிடப்பட்டு நாம் வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. நமது உடலில் அந்தப் போதைப்பொருள் குறையும்போது டோபமீன் வெளியிடுவதும் நிறுத்தப்படுகிறது. எனவே,தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக மேலும் அந்தப் போதைப்பொருளை உள்வாங்க வேண்டியதாகிவிடும். அத்துடன் நமது உடலும் அந்தப் போதைப்பொருளுக்கு அடிமை ஆகி விடுகிறது.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா? நாம் இசையை ரசிக்கும் போது நமது உடலில் பல செயல்கள் நடைபெறுகின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்து நமது மூளையில் உள்ள பல்வேறு பகுதிகள் இயங்கத் தொடங்கிவிடுகின்றன. இசை, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும், அதை ரசிக்கும் போது நமது மூளையில் டோபமீன் வெளியிடப்படுகிறது. அதன் விளைவு என்னவென்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். அதாவது, நாம் மகிழ்ச்சி கலந்த திருப்தி நிலையை அடைந்து விடுகின்றோம். இன்று வரை அதன் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிக்கவில்லை. போதைப்பொருட்கள் நம்மை அடிமை ஆக்குவது போல் இசையும் ஒரு விதமாக நம்மை அடிமை ஆக்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனின் இசைச் சுவை வித்தியாசமாக இருந்தாலும் அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

டோபமீன் வெளியிடுவது மட்டும் இல்லாமல் இசை கேட்கும் போது நமது உடலில் மேலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக நமது உடலில் எல்லாமே ஒரு தாளத்திற்கு அடங்கியதாகத் தான் இருக்கிறது. நமது இருதயம் துடிப்பது ஒரு தாளத்தில்.நாம் சுவாசிக்கும் போது பிராணவாயு உள்வாங்கி கரியமிலவாயு வெளியேற்றுவது இன்னும் ஒரு தாளம். கடினமான வேலை செய்யும் போது இருதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தின் தாளம் அதிகரித்துவிடுகிறது. அதே போன்று தான் நாம் இசை கேட்கும் போதும் இந்தத் தாளங்கள் மாறிவிடுகின்றன. அதன் விளைவாக இரத்த அழுத்தம் மற்றும் மூளையின் செயல்பாடும் மாறிவிடுகின்றது. பொதுவாக நமது இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் துடிக்கின்றது. இந்தத் துடிப்பை 72 பீட்ஸ் பேர் மினிட் (Beats per Minute, BPM) என்று சொல்வார்கள். அதே போன்று தான் இசையின் தாளத்தையும் BPM ஊடாக அளக்கலாம். ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது என்னவென்றால் இசையின் தாளம் பொறுத்து நமது உடல் வெவ்வேறு உணர்ச்சிகளை உணர்கின்றது என்பது தான். 72 BPMF அதிகமாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறோம், அதுவே 72 BPMF குறைவாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் அமைதி ஆகி விடுகிறோம்.

இசையில் இன்னும் ஒரு மிக முக்கியமான விசேஷம் இருக்கிறது. சிறுவர்களின் வளர்ச்சி நேரம் இசை அவர்களின் மூளை விருத்தியைத் தூண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளார்கள். அதுவும் அவர்களின் நுண்ணறிவு எண் எனப்படும் Intelligence Quotient (IQ) அதிகரிப்பதற்கு இசை கேட்டாலே போதும் என்று கூறுகின்றார்கள். எனவே, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை சிறு வயதினிலேயே சங்கீதம், பியானோ, புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள விடுங்கள். அவர்கள் மேலும் புத்திசாலிகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உண்மை சொல்லப்போனால் இப்படி அடுத்து அடுத்தாக இசையினால் நாம் பெறும் பயன்களைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம்.

1,779 total views, 4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *