புனித பூமியின் மனிதத் தெய்வம் நயினைச் சித்தர் முத்துக்குமார சுவாமிகளுக்கு திருவுருவச்சிலை திறப்பு!
- செல்வி. அம்பிகைபாகன் ஸ்ரீ சுகன்யா (5ம் வட்டாரம் நயினாதீவு)
பிறக்கப்பேறும் இறக்க முத்தியும் தரும் சிறப்புக்குரியதும், அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான புவனேஸ்வரி பீடத்தை அலங்கரித்துக் கொண்டு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ நாகபூசணி கோவில் கொண்டிருக்கும் நயினாதீவில் ஆன்மீக சீலராக ஈழத்துச் சித்தர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்படும் நயினைச் சித்தர்; தவத்திரு முத்துக்குமார சுவாமிகள் அவதரித்துள்ளதுடன் அவர்களுடைய ஜீவ சமாதி ஆன்மீக அலைவீச்சுடன் அமைந்திருப்பதும் சப்த தீவுகளின் நடுநாயகமாக விளங்குவதும் நயினாதீவு எனும் புனித பூமியாகும்.
இப் புனித பூமியிலே நயினைச் சுவாமிகள் என்று அழைக்கப்படும் தவத்திரு முத்துக்குமார சுவாமிகள் அவர்கள் ஆறுமுகம் பார்வதி தம்பதியினருக்கு ஆறாவது பிள்ளையாக 1896ல் அவதரித்தார்கள். இவர் சிறு வயதில் தில்லையம்பல வித்தியசாலையில் கல்வி பயின்றார். இளம் வயதில் இருந்தே இவரிடம் ஆன்மீக நாட்டமும் கவிபாடும் திறனும் இருந்தது. ஒரு நாள் கதிரமலைக்கு செல்லும் வழியில் இரவு நேரத்தில் ஒரு வில்வ மரத்தடியில் தங்க நேரிட்டது. அந்த தனிமையும் நிசப்தமுமான சூழலில் முத்துக்குமாருவுக்கு தீட்சையும் குரு உபதேசமும் கொடுக்கப்பட்டது. கதிர்காம யாத்திரையின் பின்னர் அந்தப் பெரியவர் தனது வந்தகாரியம் நிறைவேறியமையால் எங்கோ சென்றுவிட்டார். இச்சம்பவத்திற்கு பின்னர் சுவாமி அவர்களும் யாருக்கும் தெரியாது தன் குருவைத் தேடி இந்தியா சென்றுவிட்டார். அங்கு திருவண்ணாமலையில் ரமண மகரிஷியின் அனுக்கிரகம் கிடைக்கப்பெற்று சித்தர்களும் தவயோகிகளும் வாழும் அருணாசல குகையில் சமாதி நிஷ்டையில் சிலகாலம் அமர்ந்திருந்து தவயோக வாழ்வு வாழ்ந்தார்கள். அதன் பின்னர் 1933ம் ஆண்டு சுவாமிகள் காவி வஸ்திரத்துடன் எவராலும் இனங்காண முடியாத தோற்றத்தில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டதுடன், நயினாதீவில் பிற ஆலயங்களுக்கு செல்வதும் இரவில் அம்பாள் ஆலய வடமேற்கு வீதியில் அமைந்துள்ள அன்னப்பிள்ளை மடத்தில் தங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சர்வதாரி வருடம் உத்தராயன காலமாகிய தைத்திங்கள் 13ம் நாள் 26.01.1949ம் ஆண்டு புதன்கிழமை இரவு 12 மணிக்கு சுவாமிகள் பத்மாசனமிட்டு தியானத்தில் இருப்பது போல் அமர்ந்தவாறு உலக வாழ்வை விட்டு விதேக முக்தியடைந்தார்.
தற்போது இச்சமாதி கோவில் சோமஸ்கந்த ஈஸ்வரம் என்ற பெயரோடு ஆன்மிக அருள் ஒளி வீசும் தலமாக திகழ்கின்றது.
சுவாமிகளுக்கு மேற்படி ஆலயத்தில் திருவுருவச்சிலை அமைக்க உவகையுற்ற அவர் தம் அடியவர்கள் அன்பால் இணைந்து அத்திருப்பணியை முன்னெடுத்தனர். குறித்த புண்ணிய காரியம் யாழ் அத்தியார் இந்துக் கல்லூரியின் சித்திர பாட ஆசிரியரான திரு.தவராசா கபேஸ்சன் மற்றும் யாழ் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் சித்திர பாட ஆசிரியரான திரு.இராசரத்தினம் கிருபாகரன் ஆகிய சிற்ப வல்லுனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது தளராத உழைப்பினால் திருப்பொலிவுடன் அமைக்கப்பட்ட திருவுருவச்சிலை சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் 2023.02.05 ஞாயிற்றுக்கிழமை தைப்பூச நன்னாளில் திருக்குட முழுக்குடனும்; முதற்பூசை வழிபாட்டுடனும் திறந்து வைக்கப்பட்டது. “இறைவன் திருவருளும் சுவாமிகளின் குருவருளும் எம் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்தனை செய்வோம்”சுபம்
1,016 total views, 3 views today