தாலாட்டும் தன்னிறைவும் எமது சமூகக் கட்டுமானத்தில் குழந்தையை நிலத்திற் கூட விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்
பூங்கோதை – இங்கிலாந்து
அனைத்து உயிரினங்களும் போலவே மனிதனுக்கும் தன் குழந்தைகள் மீது அளப்பெரும் பாசம், அன்பு, பிணைப்பு எல்லாம் இயற்கையாகவே உண்டு. மனிதர்களில், பெற்றோர்கள் எப்போதும் தம்மால் முடிந்தவரையில் தமது குழந்தைகளுக்கு வேண்டியவற்றை எல்லாம் அல்லது அநேகமானவற்றைத் தர முயற்சிப்பதும். தமது குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்த்தெடுக்க வேண்டும் என இயல்பாக நினைப்பதும் வழமை. இருந்தாலும் இந்தப் பாசத்தை அதீதமாக வளர்த்துக்கொண்டு, தமது குழந்தைகளின் சுதந்திரத்தையும் அவர்களின் தனித்துவம், வளர்ச்சியையும் பாதிக்கும் வகையில் பெற்றோர்கள் செயற்படுவது துயரம் மட்டுமல்ல,குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கும் செயல் என்றும் கூடக் கூறலாம்.
“நான் வேலைக்குப் போவதில்லை, என் குழந்தைகளைக் கவனிக்கத்தான் நேரம் சரியாகவுள்ளது” என்பதை ஒரு பெண் கூறக்கேட்டபோது,அப்பெண்ணிற்குச் சிறு குழந்தைகள் இருக்கிறார்கள் போலும் என எண்ணிக் கொண்டேன். பின்பு அவருடன் பேச நேர்ந்த போது தான் புரிந்தது, அவரது குழந்தைகளுக்கு வயது முறையே பதினெட்டும் இருபதும். இவர்களுக்கு உணவு ஊட்டி,அவர்களுக்கான தேவைகள் எல்லாவற்றையும் தான் பார்த்துப் பார்த்து செய்து கொடுப்பதாக மிகவும் பெருமையுடன் கூறிக் கொண்டார். அதன் காரணமாகவே தான் வேலைக்கோ படிப்பதற்கோ போவதில்லை எனவும் கூறினார்.
கடந்த சில வாரங்களின் முன்பு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட சில சிறுகட்டுரைகள், கவிதைகள் என்பவையும் அதிற் கூறப்பட்ட கருத்துக்களும் மேலே சுட்டிக்காட்டப்பட்ட பெண்ணின் கருத்துக்களையும் அதன் விளைவுகளையும் தொடர்பு படுத்தியிருந்தன. அத்தோடு அவை தொடர்பாக எனக்கு சில யோசனைகளையும் உருவாக்கியிருந்தன. அதன் விளைவாக எழுந்த சிந்தனைகளும் கருத்துக்களுமே இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன. இங்கு குறிப்பிடும் விடயங்கள் முக்கியமாக புலம் பெயர் நாடுகளில் வாழும், வேலைகளுக்குப் போகாமல் இருக்கும் எம்மவர்களுக்குப் பொருந்தி வந்தாலும் கூட,புலத்திலிருக்கும் எம் உறவுகளுக்கும் இது சில வேளைகளில் பொருந்தக் கூடும். குழந்தைகளை சிறு வயது முதலே இயன்றவரை பெற்றோர்களில் தங்கியிருக்காமல் அவர்களது தேவைகளை அவர்களே நிறைவு செய்யும்படி வளர்ப்பது இன்றியமையாதது. அல்லாது போனால் அவர்கள் பாடசாலையில் தமது கல்வி, விளையாட்டுத் துறை சார்ந்த விடயங்களில் மட்டுமல்ல,தாம் வாழும் சமூகம் சார்ந்த விடயங்களிலும் பின்னடைந்து போவர்.
குழந்தைகள் வளர்ந்து, தொழில் சார்ந்து, கல்வி சார்ந்து, தமது வாழ்வு சார்ந்து தனியாக வாழப் போன பின், எமது சமூகத்தில் மனத்தளவில் அதிகமாகப் பாதிக்கப்படுவது தாயார் தான். தாய் மட்டுமல்ல தந்தையும் கூட அந்தக் காலப் பகுதியை இழந்த ஆதங்கம்,குழந்தைகளை நினைத்து வருந்துவது போன்றவற்றை அனுபவிப்பது வழமை. எமது சமூகக் கட்டுமானத்தில் ஒரு குழந்தையை நிலத்திற் கூட விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், விழுந்தால் அது அநேகமாகத் தாயாரின் கவலையீனத்தால்த் தான் நடந்திருக்கும் என்பது போலவும் தான் எதிர்பார்ப்புகள் கட்டி எழுப்பப் பட்டிருக்கின்றன. இதன் காரணத்தினாலேயே அதிகமான பெற்றோர்,முக்கியமாகத் தாய்மார் குழந்தைகளின் சகல தேவைகளையும் அவர்களைச் செய்ய விடாமல் தாமே செய்து கொடுக்கின்றனர்.
இது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் என்று எடுத்துக் கொண்டால், இத்தோடு தொடர்புடைய இன்னொரு விடயம் எனக்கு ஆதங்கத்தைத் தருவதாய் இருக்கிறது. சமூக வலைத்தளம் ஒன்றில், ஒரு பதிவில் ஒருவர் தானும் தன் துணைவியும் தமது குழந்தைகள் வளர்ந்து வீட்டை விட்டுப் போன பின் எவ்வளவு தூரம் மனம் இடிந்து போய் இருக்கிறார்கள் என்பதை ஒரு சோகமான கவிதையில் அழுது தீர்த்திருந்தார். அக்கவிதையின் படி, தமது வீட்டில் ஒவ்வொரு பகுதியும்,குழந்தைகள் இல்லாததால் எவ்வாறு எந்தச் சத்தமும் இன்றி அமைதியாய்ப் போய் இருக்கிறது என்பதில் இருந்து,அவர்களுக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்து சமைத்த தமது அடுப்படி எப்படி ஓய்ந்து போய் விட்டது என்பது வரை மிகவும் சோகமாக எடுத்துரைத்திருந்தார்.முக்கியமாகத் தன் மனைவி இப்போதெல்லாம் எப்படி தனித்துப் போயிருக்கிறார் என்பதைத் தனியாக எழுதியிருந்தார்.
இப்படியான காலகட்டத்தில் குழந்தைகள் இல்லாத வீட்டின் தனிமையும் இனி தமது நேரத்தை எவ்வாறு செல வழிப்பது என்று தெரியாததாலும் தாய்மார்களுக்கு வீண் மனவேதனை,மன உளைச்சல் போன்றவை ஏற்படு கின்றன. தாயகம் போல இங்கு எல்லாக் குழந்தைகளும் தாம் திருமணம் செய்யும் வரையும் பெற்றோர்களோடு இருப் பதில்லை.
இதனை மனதில் வைத்து தாய்மார்கள் தமது குழந்தைகள் பள்ளியில் கற்கின்ற காலப்பகுதியிலேயே தாமும் தமக்குப் பிடித்த ஒரு துறையில் தமது தகைமைகள்,அனுபவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.அவை கட்டாயமாகக் கல்வித்துறையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. தையற்கலை,சமையற்கலை,சிகை அலங்காரம் போன்ற வருவாயை ஈட்டித்தரும் துறைகளையோ அல்லது தமக்குப் பிடித்த ஓவியத்துறை,எழுத்துத் துறை, நடனம், இசை போன்றவற்றிலோ தமது நேரத்தை மனதிற்குப் பிடித்த விடயங்களில் செலுத்துவது மிக அவசியம். இவற்றோடு தாம் ஒரு புலம் பெயர்ந்த தேசத்தில் இருக்கும் பட்சத்தில், அந்நாட்டின் மொழியைக் கற்றுக் கொண்டு அந்நாட்டு மக்களின் பண்பாடு,கலை,கலாச்சாரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. வேலைகளுக்குப் போக விரும்பாதவர்கள் தமது மனத்துக்குப் பிடித்த வழியில் தம்மாலான உதவிகளை இவர்களுக்குச் செய்து கொடுக்கலாம்.
எனக்குத் தெரிந்த சில தாய்மார்கள் இணையவழியில் தமது மேற்படிப்பை தொடர்ந்து கற்று முடித்த பின் அவர்கள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும்,பகுதி நேர வேலைகளுக்குப் போய் தமது நேரத்தை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.அத்தோடு பல்வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள் நன்றாக வர வேண்டும் என்று மனமார விரும்புவது நேர்மறை எண்ணங்களை வளர்த்து, எல்லோருக்கும் நன்மை பயக்கும் நிலையை ஏற்படுத்தும்
1,407 total views, 3 views today