பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்! மீறுகையில் அடங்காதவள். திமிர் பிடித்தவள் என்று அடையாளப்படுத்தப்படுகிறாள்.
-பிரியா.பாலசுப்பிரமணியம். இலங்கை
உலக சனத் தொகையில் குறிப்பிடத்தக்க பகுதியினர் பெண்களாக இருப்பதனால் சித்ரவதை, பட்டினி, பயங்கர வாதம் உளரீதியான பாதிப்பு, அங்கவீனம் கொலை ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர். பெண் வெறும் போகப் பொருளாகவும் வீட்டின் வேலைகளை பார்க்கும் இயந்திரமாகவுமே பயன்படுத்தப்படுகிறாள். குழந்தை பெற்றுக் கொள்வதையும் அவர்களை வளர்த்தெடுப்பதையும் அவள் விருப்பு வெறுப்புகளையறியாது கட்டாயக் கடமையாக அவளுக்குள் இச் சமூகம் திணித்து வைத்துள்ளது. கணவனை இழந்தால் விதவையென்று ஒதுக்கி அவளை தனிமைப்படுத்துவதும் எந்த நல்ல காரியத்திற்கும் முன் நிற்க விடாமல் தடுப்பதும் மேலும் அவளை சுயமாக தனித்து செயற்படவோ அல்லது முடிவுகளை எடுக்கவோ அனுமதிப்பதுமில்லை. அவ்வாறு அவள் சுயமாக செயற்பட முற்படுகையில் சமூகத்தின் பார்வையில் அடங்காதவளாகிப் போகிறாள். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளோடு வளர்த்தெடுக்கிறார்கள் பெற்றோர்கள். அவள் அதை மீறுகையில் அடங்காதவள். திமிர் பிடித்தவள் என்று அடையாளப்படுத்தப்படுகிறாள்.
பெண்ணின் சுதந்திரத்தை அவள் தீர்மானிக்கும் சுதந்திரம் நம் சமூக அமைப்பில் பெண்ணுக்கு இருப்பதில்லை. பெண் தான் விரும்பிய துணையை தேர்வு செய்யவும் அல்லது ஏதேனும் முடிவெடுக்கும் உரிமையானது பெரும்பாலும் ஆணினுடையதே ஏனெனில் ஒரு தந்தையாக அல்லது பாதுகாவலனாக எல்லாவற்றையும் முடி வெடுக்கின்ற தன்மை ஆணிடமே காணப்படுகிறது.
தம் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக போகம் அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகத்திற்கும் தம் தேவைகளை நிறைவேற்றுபவர்களாகவும் பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். மன ரீதியாக அவளுக்குள் தாக்கத்தைக் கொடுத்து பெண்களை அடிமைப் படுத்தினர். இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து பழகி அதிலிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள், தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள்தான் என்று நினைத்து விட்டார்கள். அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள்தான் என நினைத்து தமக்குத் தாமே அடிமைச்சங்கிலியை பூட்டிக் கொண்டார்கள்.
இதற்கெல்லாம் பதில் காண எழுந்ததே பெண்ணியக் கோட்பாடு மேலைத்தேய நாடுகளில் ஆரம்பித்து எல்லா இடங்களிலும் பரவத்தொடங்கியது. பெமினிஷம் குநஅinளைஅ எனும் ஆங்கிலப் பதம் தமிழில் பெண்ணியம் என்றழைக்கப்படுகிறது. இச் சொல் 1890 இலிருந்து பாலின சமத்துவக் கோட்பாடுகளையும் பெண்ணுரிமைகளை பெறச் செயற்படும் இயக்கங்களையும் குறிக்கப் பயன்பட்டு வருகின்றது. 20 ஆம் நூற்றாண்டிலேயே இச் சொல் பெரு வழக்காக மாறியது. பெண்ணியமென்பது பெண் என்பவள் ஆணுக்கு நிகரானவளே எந்த நிலையிலும் எந்தக் காலத்திலும் அடக்கி வைக்கப் படக் கூடாது என்ற கருத்துக்களை முன் வைக்கிறது. பெண் அவளது விலங்குகளிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்பதே பிரதான நோக்காக கொண்டமைந்துள்ளது. மெல்ல மெல்ல எழத் தொடங்கிய பெண் விடுதலை பற்றிய குரல்கள் மிகத் தீவிரமாகவும் வலிமையாகவும் பரவத் தொடங்கியதுள்ளது.
உலகம் முழுவதும் பால் நிலை பாகுபாட்டின் காரணமாக குடும்பம்,சமூகம், மதங்கள், அரசு போன்ற நிலைகளிலும் அடிப்படை உணவு, போசாக்கு, சுகாதார வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு, கூட்டம், தலைமைத்துவம் ,தீர்மானம் எடுக்கும் பதவிகள் போன்ற சகல அம்சங்களிலும் பெண்களுக்குப் பாராபட்சம் காட்டப்படுகிறது. இதனை கருத்திற் கொண்டு அதனை மாற்றுவதற்கான சிந்தனையும் செயற்பாடுமே பெண்ணிய வாதமாகும்.
பெண்ணுக்கு பெண் விடுதலை பற்றி அல்லது அது என்ன என்பதில் தெளிவு உண்டா எனில் முன்பை விட கூடுதலென்றே கூறமுடியும். கல்வியறிவு மற்றும் சமூக அரசியலில் பெண்ணுக்கும் சம உரிமை உண்டு என்ற அளவுக்கு சிந்தனை செய்யக் கூடிய பெண்கள் அதிகதிகமாய் உருவாகுகிறார்கள்.குடும்பம் என்ற அமைப்பு பெண்ணை அடிமையாகவே வைத்திருந்தது. நீ இப்படித்தான் இருக்க வேண்டும். இதைத்தான் செய்ய வேண்டும் என்று நியதிகளோடு அவளைச் சிறை வைத்திருந்தது. காலங்காலமாக பெண் அதையே பின்பற்றி அதுவேயாகி காணாமல் போனாள். ஆனால் இன்று எல்லாத்துறைகளிலும் பெண்கள் பங்கேற்கிறார்கள். தமது இருப்பை உணர்த்த போராடுகிறார்கள். முன்னைய காலங்ளோடு ஒப்பிடுகையில் தங்களுக்கான உரிமை வேண்டி மிகத் தீவிரமாக செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள்.
முன்னையகாலத்தோடு ஒப்பிடுகையில் பெண்களின் மீதான அடக்குமுறைகள் மிக குறைந்துள்ளது.சமூகம் ஒரு ஆணையும் பெண்ணையும் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறது பெண்ணின் சுதந்திரம் எதுவரை வரையறை செய்யப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் பெண் மறுக்கப்படுகிறாள் என்பவை பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பெண்ணியம் என்ற வார்த்தை பரிச்சயப்பட்டிருக்கிறது.தான் விரும்பியவற்றை சுயமாக செய்யவும் .விருப்பமற்ற திருமண உறவை விட்டு விலகவும் மறுமணம் செய்யவும் துணிந்துள்ளனர்.அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் தமக்கு ஏற்படும் அசௌகரியங்களை தயங்காது வெளிப்படுத்துகிறார்கள்.தமக்கு ஏற்படும் பாலியல்ரீதியான பிரச்சினைகளை பற்றி வெளிப்படையாக சமூக வலைத்தளங்களிலும் பிற ஊடகங்களிலும் முன்வைக்கிறார்கள். கல்விரீதியாக பெண் பலப்படுகின்ற போது அவள் தெளிவாகிறாள். தனக்கான தேவைகளையும் விருப்பு வெறுப்புக்களையும் தயக்கமின்றி வெளிப்படுத்தவும் கேள்வி கேட்கவும் துணிகிறாள். பெண்விடுதலையென்பது வெறும் வார்த்தை ஞாலங்களில் அன்றி செயலிலும் இருக்க வேண்டும்.பெண் அதற்கு துணிய வேண்டும்.அவள் தன்னை மனதாலும் உடலாலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.தன் உரிமைகள்பற்றி கற்றுணர வேண்டும். ”அடைபட்டு கிடக்கும் பறவைகள் சிறகினை விரித்து பறக்கும் காலம் தூரமில்லை”
997 total views, 4 views today