தமிழ் மக்களின் பிரச்சினை குறித்துபேசுவதற்கு “அரகலய” அஞ்சுகிறதா?

“என்கு வந்தால் இரத்தம்! உனக்கு வந்தால் தக்காளி சட்னி”

ஆர்.பாரதி

“கோட்டா கோ ஹோம்” என்ற கோஷத்துடன் கடந்த வருடம் தென்னிலங்கையில் ஆரம்பமான போராட்டம், இப்போது ரணிலுக்கு எதிரான போராட்டமாக மாற்றமடைந்திருக்கின்றது. ஆனால், கடந்த வருடம் காணப்பட்ட வேகத்தை இப்போது காணமுடியவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்காக “அரகலய” என்று அழைக்கப்படும் கிளர்சியாளர்கள் மேற்கொண்ட மற்றொரு நகர்வும் தோல்வியடைந்திருக்கின்றது.

அடக்குமுறைக்கு எதிராக என்னதான் போராட்டங்களை தென்னிலங்கையின் அரகலய என்ற கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டாலும்,தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்கமாட்டார்கள் என்பது மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்படடிருக்கின்றது. சிங்களவர்கள் மத்தியில் தமக்குள்ள ஆதரவை இது பாதிக்கும் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பு இதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களால் குழம்பிப்போயிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் பரபரப்பான சந்திப்பு இடம்பெற்றது. கொழும்பு போராட்டங்களின் பின்னணியிலிருந்து செயற்படும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வநந்த முதலிகே ஆறு பேர் கொண்டு குழு ஒன்றுடன் அவசரம் அவசரமாக யாழ்ப்பாணம் வந்தார். வந்த வேகத்தில் யாழில் “முக்கியமான” பேச்சுக்களை நடத்திவிட்டு அந்தக் குழு வந்த வேகத்திலேயே கொழும்பு திரும்பியது.

கொழும்பில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக வெடித்த போராட்டத்தின் பின்னர் சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமான பெயர்தான் வசந்த முதலிகே. குறிப்பாக சிங்கள மாணவர்களின் தலைவராக இவர் தன்னை வரிந்துகொண்டமையால், சிங்கள இளைஞர்களின் மத்தியில் இவருக்குத் தனியான ஒரு செல்வாக்கு உள்ளது. அரசுக்கு எதிரான போராட்டத்தை தென்னிலங்கையில் முன்னெடுக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர்தான் இந்த வசந்த முதலிகே. இவருக்குப் பின்னணியில் ஜே.வி.பி. இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

இந்த வசந்த முதலிகே சில தினங்களுக்கு முன்னர் தனது சகாக்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கான திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த அவசர விஜயமும், யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளும் பரபரப்புச் செய்தியாக வெளிவந்திருந்தது.

அரசுக்கு எதிரான போராட்டங்கள் தென்னிலங்கையில் இப்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. வசந்த முதலிகே தலைமையிலான அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு இந்தப் போராட்டங்களில் ஒரு முக்கிய பங்களிப்ப வழங்கிவருகின்றது. கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த அவர்கள் இப்போது ரணிலுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றார்கள். ஆனால், கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தில் காணப்பட்ட உத்வேகத்தையும் அதில் கலந்துகொண்டவர்களின் தொகையையும் இப்போது காணமுடியவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

ஒன்று – போராட்டத்தை ஒடுக்குவதற்கு ரணில் கையாண்ட உபாயங்கள். தலைமைதாங்கிய பலர் கைதானமையும், அவர்கள் மீதான தடைகள் – வழக்குகள் என்பன பலரை இந்தப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிப்போகச் செய்துவிட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டம் அவர்களை பதம் பார்க்கிறது. இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தாக்குப் பிடிக்கும் ஒருவராக இருப்பவர்தான் வசந்த முதலிகே.

போராட்டங்கள் பலவீனமடைய இரண்டாவது காரணம். கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் காணப்பட்டது போல – எரிபொருள், எரிவாயுவுக்கான வரிசைகள் இப்போது இல்லை. அவற்றுக்குத் தட்டுப்பாடும் இல்லை. அத்தியவசியப் பொருட்கள் இப்போது தாராளமாக இல்லாவிட்டாலும் – கிடைக்கின்றன. மின்வெட்டும் முடிவுக்கு வந்துவிட்டது. அதனால், இயல்புநிலை ஓரளவுக்கு ஓரளவுக்கு உருவாகிவிட்டது போன்ற ஒரு உணர்வு காணப்படுகின்றது. மக்கள் வீதிக்கு இறங்காமைக்கு இது இரண்டாவது காரணம்.

இந்த நிலையில் ரணிலுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் இரண்டு விடயங்களை தூக்கிப்பிடிக்கின்றார்கள்.
ஒன்று – உச்சத்துக்கு சென்றுள்ள விலைவாசி. முக்கியமாக மின்சாரக் கட்டணம் பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாவது, அதிகரித்த வருமான வரி. இந்த இரண்டும் சர்வதேச நாணய நிதியத்தைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்பட்டவைதான். அதிகரித்த வருமான வரியால், தாம் வழமையாகப் பெறும் வருமானத்தில் கணிசமான தொகையை மக்கள் இழக்கின்றார்கள். அதேவேளையில், செலவீனங்கள் பல மடங்கு அதிகரித்திருக்கின்றது. பொருட்கள் சேவைகளுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டமையும் இந்த செலவீன அதிகரிப்புக்கு காரணம்.

அரசின் ஒடுக்குமுறைகளில் இவர்களிடமுள்ள இரண்டாவது காரணம். போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை கைகளில் எடுக்கின்றது. அரகலயவினருக்கு இதுதான் இதுதான் இப்போது பிரச்சினை. இதனால், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு சிறுபான்மை மக்களையும் இணைக்காவிட்டால், சர்வதேச அரங்கில் அது கவனத்தைப் பெறாது, அவ்வாறான போராட்டம் பலமானதாகவும் இருக்காது என்ற நிலையில்தான் வசந்த முதலிகே தலைமையிலான குழவினர் அவசரமாக யாழ்ப்பாணம் வந்தார்கள்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் என வசந்த முதலிகே சொல்லப்பட்டாலும், யாழ்ப்பாணம், மட்டக்கப்பு, வனியா பல்கலைக்கழக மாணவர்களை அவர்களால் அதற்குள் இணைக்க முடியவில்லை. அவர்களது போராட்டத்துக்கு அது பலவீனமாகவே இருந்தது. அதனால், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தையும் இதற்குள் இணைக்க வேண்டும் என்ற இலக்குடன்தான் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு பயணமானார்கள்.

பயங்கரவாத தடை சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979ல் உருவாகியது. மிகவும் மோசமானது என வர்ணிக்கப்படும் இதற்கு எதிராக தமிழர்கள் ஐ.நா. வரையில் சென்று குரல்கொடுத்திருக்கின்றார்கள். இந்தச் சட்டத்தினால் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள். இன்னும் பலர் சிறையில் வாடுகின்றார்கள்.

கடந்த 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள், தமிழ், இளைஞர்கள், தமிழ் தாய்மார்கள் இதற்கு எதிராகப் போராடிவருகின்றார்கள். இவ்வளவு காலதுத் அமைதியாக இருந்து விட்டு, இப்போது அந்த பயங்கரவாத தடைச் சட்டம் சநந்த முதலிகே போன்றவர்களையும் பதம் பார்க்கும் போதுதான், திடீரென யாழ்ப்பாணத்துக்கு வந்து “பயங்கரவாத தடை சட்டத்தை எதிர்க்க யாழ் பல்கலையும் இணைய வேண்டும்” என அவர்கள் கோரியிருக்கின்றார்.

இதற்கு “இணைகிறோம், ஆனால், எமது பிரச்சினைகளையும் உள்வாங்குங்கள்” என யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் தடாலடியாக பதிலளித்திருக்கின்றது. அதனைவிட, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் தொடர்பாகவும் வசந்த முதலிகே குழுவினருக்கு யாழ். முhணவர்கள் விளக்கியிருக்கின்றார்கள். அவை தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்று சொல்லிவிட்டுச் சென்ற வசந்த முதலிகே குழவினர் அது தொடர்பில் எதனையும் செய்ததாகத் தெரியவில்லை.

“என்கு வந்தால் இரத்தம்! உனக்கு வந்தால் தக்காளி சட்னி” என்பதுதான் அவர்களுடைய அணுகுமுறையாக இருக்கின்றது. இவ்வாறானவர்களுடன் தமிழர்களும் இணைந்து போரிட வேண்டும் எனக் கேட்பவர்களிடம் இதற்கு என்ன பதில் இருக்கின்றது.

831 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *