நம்ம ஊர்ச்சங்கதிகள் மாரித்தவளைகளைப்போல அடிக்கடி கத்துவது என்னவோ நாங்கள்தான்.

-சர்மிலா வினோதினி. இலங்கை.
மாரித்தவளைகளைப்போல அடிக்கடி கத்துவது என்னவோ நாங்கள்தான். ஆனால் யாருடைய காதுகளையும் சென்றடைவதில்லை, குறிப்பாக போக்குவரத்து உரிமையாளர் சங்கங்கள், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இவைபற்றி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துகின்றனவா அல்லது பேருந்து உரிமையாளர்களும் சாரதிகளும் நடத்துனர்களும் இந்தக் காதால் வாங்கி அந்தக் காதால் வெளிவிடுகிறார்களா என்பது புரியாத கதை.
பயணிகள் பொதுப் பேருந்து என்பது பயணிகளுக்கானது. தனித்த வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறசாமானிய மக்களும் ஏதோ ஒரு தேவையின் நிமிர்த்தம் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டிய வர்களுமே பொதுப் பேருந்துகளை நாடுகிறார்கள், தவிர கிழமைக்கு கிழமை QR அடிப்படையில் வழங்கப்படுகிற எரிபொருளை மிச்சப்படுத்தி பயன்படுத்துவதென்பது அடிக்கடி பயணப்படுகிற எங்களைப் போன்றவர்களுக்கு சவாலான காரியம்தான். ஆக இருக்கிற தெரிவு பொதுப்போக்குவரத்து மட்டுமே.
எல்லாவற்றிற்கும் ஒரு ஒழுக்க நெறிமுறை இருக்கிறது. அது எதுவாகினும் அவற்றின் இயல்பிற்கு ஏற்ப அவை மாறுபடும். மதவாச்சியை கடந்தால் எங்களுடைய பிரதேசங்களில் முதியவர்கள், குழந்தைகள், வைத்தியசாலைக்கு செல்லுகிற நோயாளிகள் என்று பலரும் பயணப்படுகிற பொதுப் பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என்றால் காதுகளை கழற்றி எறியவேண்டும் அல்லது செவிப்பறைச் சவ்வுகளை கிழித்து எறியவேண்டும்.
சாதாரணமாக ஒரு மோட்டார் சைக்கிள் எஞ்சினின் சத்த அளவு 95 DB இ ஆனால் மனித காதுகள் தொடர்ச்சியாக 70DB ற்கு அதிகமான ஒலியை தொடர்ச்சியாக கேட்கிறபோது கேட்கும் திறன் நாளடைவில் பாதிப்படையும். இதுவே 120 DBஇனை தாண்டுகிறபோது உடனடியான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது மருத்துவ உலகம். ஆனால் மனிதர்கள் உரையாடுகிற ஒலியின் அளவு 30 DB ஓடு நின்று விடுகிறது என்பதுதான் இங்கு நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயமாகிறது.
ஆக இன்றைக்கு இந்த 03 மணித்தியால பயணம் 80, 90 DBயில் சென்றுகொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன், சகித்து கொள்ள முடியாத நிலையில் இரண்டு தரம் நடத்துனரை அழைத்து சொல்லியும் விட்டேன். போதாக்குறைக்கு இன்னும் சில பயணிகளும் நடத்துனரோடு முறைப்பட்டுக்கொண்டார்கள், ஆனால் நடத்துனரின் சொல்லை செவி மடுக்கும் நிலையில் ஓட்டுனர் இல்லை. pub தோற்றுவிடும் அளவிற்கு ஓங்கி ஒலிக்கிறது உச்சம் தலையில் ஒங்கி அறையும் ஓசையும் குத்துப்பாடலும்.
இசை என்பது இனிமை. இசை என்பது மருந்து. மெல்லிய இசையோடு பயணப்படுகிற பயணங்கள் அலாதியானவை. ஆனால் பொதுப் பேருந்துகளில் இத்தனை இசைப்பெட்டிகளைத்தான் பொருத்த வேண்டும். அளவு கடந்த சத்தத்தில் ஒலியெழுப்பும் செயல்களில் ஈடுபடக்கூடாது போன்ற நிபந்தனைகளை குறித்த பேருந்துகளுக்கான route permit இனை வழங்குகிறபோதும் அவற்றை ஒவ்வொரு வருடம் புதுப்பிக்கிறபோதும் மாவட்ட செயலக்தின் நிர்வாகத்தால் கடுமையாக அறிவுறுத்த முடியுமல்லவா?
அவற்றை கேட்கிற அளவிற்கு பேருந்து உரிமையாளர் சமூகத்திடம் சமூக பொறுப்புணர்வு இல்லையா? சிறிய வயதில் இருந்து சொல்லிக்கொடுக்கிற pre child education இல் குறையிருக்கிறதா? அல்லது இப்படி எல்லாம் சிந்திக்கிற என்னில்தான் தவறிருக்கிறதா?
எனக்குத் தெரிந்து உணவு தொண்டையால் இறங்க முடியாத நிலையில் வயிற்றில் துளையிட்டு அதனூடாக திரவ உணவை செலுத்துவதற்கான மருத்துவ முறைகளோடு (G tube) A32 வீதிவழியாக இந்தப் பேருந்துகளின்மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று வருகிற எத்தனையோ நோயாளிகளை அறிந்திருக்கிறேன்.
இந்த நாடும் நாங்களும் எப்போதுமே இப்படித்தானா??
1,327 total views, 2 views today