வீட்டுக்கு ஒரே பிள்ளையா?

சேவியர்.


குழந்தைகள் இறைவனால் அருளப்படும் கொடைகள். குழந்தைகள் வரமா இல்லையா என்பதை குழந்தை வரம் தேடி அலைபவர்களிடம் கேட்டால் புரியும். ஏக்கம் இல்லாமலேயே குழந்தை வரம் வாய்த்து விடுபவர்கள் பல வேளைகளில் குழந்தைகளின் அருமையைப் புரிந்து கொள்வதில்லை.

குழந்தைகள் கடவுளின் குட்டி வடிவம். மகா சக்தியின் மினியேச்சர். அதை கடவுள் நம்மிடம் கொடுத்திருக்கிறார். “குழந்தைகள் உங்களால் வரவில்லை, உங்கள் மூலமாய் வந்திருக்கிறார்கள்” என்கிறார் கலீல் ஜிப்ரான். அந்தக் குழந்தைகளை மிகச் சரியான வகையில் வளர்க்கும் பொறுப்பு நமக்குக் கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

என் பெற்றோருக்கு ஏழு பிள்ளைகள். எனது பாட்டி ஒருவருக்கு பதினாறு பிள்ளைகள். இன்னொரு பாட்டிக்கு பதினோரு பிள்ளைகள் என முன்பெல்லாம் பிள்ளைகள் இறை ஆசீரின் அடையாளமாக கருதப்பட்டார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. நாம் இருவர் நமக்கு இருவர் வந்தது. அதுவும் காலாவதியாகி நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றானது. இப்போது நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை எனும் வாசகங்களும் காணக் கிடைக்கின்றன.

குழந்தைகள் இல்லாத வீடு, தேவதைகள் இல்லாத சொர்க்கம். என்னதான் இலட்சம் ரூபாய்க்கு வண்ண விளக்கு வாங்கி வைத்தாலும் அதில் மின்சாரம் பாய்ந்தால் தான் அழகாய் ஒளிரும். மழலையில் குரல் ஒலிக்காத வீடுகள் ஏகாந்தத்தின் துயரம். அதனால் தான் நம் மூலமாய் குழந்தை பிறக்கவில்லையேல், தத்து எடுத்து தனதாக்கிக் கொள்ளும் அற்புதமான பெற்றோர்கள் நம்மிடையே இருக்கின்றனர்.

குழந்தைகளை வரவேற்பது ஒன்று, வளர்த்துவது இன்னொன்று. அது ஒரு கலை. முன்பெல்லாம் நிறைய குழந்தைகள் இருந்த வீடுகளில் மூத்த குழந்தைகளே இளைய குழந்தைகளை வளர்த்தின. மூத்த அக்கா, தங்கைகளுக்கும், தம்பிகளுக்கும் இன்னொரு அம்மாவாகிப் போனார்.

ஒரு குழந்தை மட்டும் வீட்டில் இருந்தால் அந்தக் குழந்தை தலைக்கனம் பிடித்ததாக, கர்வம் கொண்டதாக, தன்னலம் நிறைந்ததாக, சமூக பழக்கம் இல்லாததாக இருக்கும் என ஏகப்பட்ட புகார்கள் உண்டு.எல்லாமே பொய். ஒரு குழந்தை எப்படி இருக்கிறது என்பதும், எப்படி இருக்க வேண்டும் என்பதும் பெற்றோரின் கையில் தான் இருக்கிறது. உலகம் வியந்த ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன் ஏன் இந்திரா காந்தி கூட பெற்றோருக்கு ஒற்றைக் குழந்தை தான்.

பொதுவாக ஒரே ஒரு குழந்தை வீட்டில் இருந்தால் பெற்றோரின் முழு கவனிப்பும் அந்தக் குழந்தைக்குக் கிடைத்து விடுகிறது. எப்போதும் கொஞ்சிக் குலாவி, கேட்பதையெல்லாம் கொடுத்து, செல்லத்தின் உச்சியில் அவர்களை உட்கார வைத்து விடுகின்றனர். அது தவறு.

குழந்தைக்கு அனுமதியையும், மறுப்பையும் சரி விகிதத்தில் கொடுக்க வேண்டும். வெற்றியையும், தோல்வியையும் சின்ன வயதிலேயே பழக்க வேண்டும். அரவணைப்பையும், கண்டிப்பையும் மழலைப் பருவத்திலேயே அறிமுகப்படுத்த வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் வாழ்க்கையின் இரண்டு பக்கங்களையும் பெற்றோரே அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.

அது தவறும் போது தான் சிக்கல் ஆரம்பமாகிறது. குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் போது நினைப்பதெல்லாம் கிடைப்பதில்லை. எல்லோரும் அரவணைப்பதில்லை. வெற்றிகள் மட்டுமே வசமாவதில்லை. அங்கே அவர்கள் வாழ்வின் எதார்த்தத்தை அச்சத்தோடு எதிர்கொள்ள வேண்டிய சூழல் வருகிறது. குழந்தைகளுக்கு பெற்றோரே அவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தால் அவை மிக எளிதாக அத்தகைய சூழல்களை எதிர்கொண்டு விடுகின்றன.

ஒரு சின்ன உதாரணமாக, வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் ஒரு விஷயத்துக்காக குழந்தை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். அக்காக்கு இப்போ, உனக்கு அடுத்த மாசம். அல்லது, நீ எக்ஸாம் முடி உனக்கு வாங்கித் தரேன். என காத்திருப்பு சூழல்கள் இயல்பாகவே உருவாக்கப்படும். அது குழந்தையை பக்குவப்படுத்தும். ஒற்றைக் குழந்தையெனினும் காத்திருக்கும் குணாதிசயத்தைப் பெற்றோரே கற்றுக் கொடுக்க வேண்டும்.

இன்றைக்கு ‘எமோஷனல் சூயிசைட்’ அதிகம். காரணம் அளவுக்கு அதிகமாய் பிள்ளைகளைக் கொஞ்சி வளர்த்தும் பெற்றோர். அவர்களுக்கு தோல்வி என்ன என்பதை அறிமுகம் செய்து வைக்காத பெற்றோர். வாழ்க்கை மேடு பள்ளங்களின் கூட்டுத் தொகை என்பதைக் கற்றுக் கொடுக்காத பெற்றோர்.

இன்றைக்கு மண முறிவுகள் வெகு சகஜம். ஏன் ? வாழ்க்கையின் எதார்த்ததையும், நடைமுறை சிக்கல்களையும் அறிந்திராதவர்களே மணமகளாகவோ, மணமகனாகவோ வருகின்றனர். அவர்களுக்கு புதிய உறவும், பொறுப்புணர்ச்சியும் பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் தருகிறது.

சின்ன வயதிலேயே குழந்தைகளுக்குத் தேவையான சுதந்திரம் கொடுத்து, அவர்களை சுயமாய்ச் செயல்பட வைத்தால் குழந்தைகள் பக்குவமடைந்து விடுவார்கள். சின்ன வயதில் பெற்றோர் பிள்ளைகளுக்கு பொறுப்புகளைக் கொடுத்தால் அது அவர்களுக்குப் பழகி விடுகிறது.

‘பொத்திப் பொத்தி வெச்சேன், இப்படி பண்ணிட்டாளே’ என புலம்பும் பெற்றோர் புரிந்து கொள்வதில்லை, அவர்கள் செய்த தப்பே பொத்திப் பொத்தி வெச்சது தான் என்பதை. பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமான பாதுகாப்புக் கவசங்கள் போடுவது தவறு. ஒரே ஒரு குழந்தையெனில் இந்த சிக்கல் அதிகமாக வந்து விடுகிறது. அத்தகைய குழந்தைகள் திருமணத்தின் போது சட்டென அத்தனை கட்டுகளும் அவிழும் போது குழம்பி விடுகின்றனர்.

ஒற்றைக் குழந்தையாய் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் பேசிக் கொண்டே இருப்பார்கள். கேட்கும் திறன் குறைவாக இருக்கும். அதை பெற்றோர் கவனத்தில் கொண்டு அவர்களிடம் அந்த திறமையை வளர்க்க முயற்சி எடுக்க வேண்டும். குழந்தையுடன் அன்பாகவும், நேசத்தோடும் இருக்க வேண்டும். அதே நேரம், அவர்களுக்குத் தேவையான கண்டிப்பை வழங்கத் தவறவே கூடாது.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் வீட்டிலேயே பிள்ளைகள் பகிர்தல், மற்றும் இணைந்து வாழ்தலில் பழகி விடும். ஒரே குழந்தையெனில் அவற்றையெல்லாம் பெற்றோர் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அருகிலுள்ள குழந்தைகள், ஆலய குழுக்கள், சமூக குழுக்கள் போன்றவற்றில் இணைத்து விடலாம்.

கலைகளில் குழந்தையை நிச்சயம் சேர்த்து விடுங்கள். அதிலும் கிரிக்கெட், டென்னிஸ், டான்ஸ் போன்ற பலரோடு இணைந்து செய்யும் கலைகளில் ஈடுபடுத்துவது அதிக பயனளிக்கும். குழந்தையின் தனிமையை அது குறைக்கும். அது போல பெற்றோரும் அதிக நேரம் குழந்தையோடு செலவிட்டு தனிமையை இனிமையாக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் ஸ்மார்ட் போன், கணினி என டிஜிடலுக்குள் நுழைந்து நிஜ ஆனந்தத்தை இழந்து விடுவார்கள்.

“நீ எனக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு”, “நீ தான் என் உலகம்” எனும் அதீத மனநிலையையோ, “இன்னொரு குழந்தை எனக்கு இல்லாம போச்சே” எனும் இயலாமை மனநிலையையோ குழந்தையிடம் எந்தக் காரணம் கொண்டும் நுழைக்கவே நுழைக்காதீர்கள். அது அவர்களை மன கிளர்ச்சிக்கோ, மன இறுக்கத்துக்கோ இட்டுச் செல்லும். இரண்டுமே நல்லதல்ல.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், எந்த ஒரு செயலை உங்கள் குழந்தைக்காகச் செய்ய நினைத்தாலும் ஒரு கேள்வியைக் கேளுங்கள். “எனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்திருந்தாலும் இந்த நிலையைத் தான் எடுத்திருப்பேனா ?

குழந்தைகள் குயவன் கை மண் போல. அதை எப்படி வனைவது என்பதை பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டும். பெற்றோர் வனையத் தவறினால் யாராரோ வந்து தப்புத் தப்பாய் வனைந்து விடும் அபாயம் உண்டு.

எனவே ஒரு குழந்தையோ, பல குழந்தைகளோ, அவர்களை குழந்தைகளாய் வளரவிடுங்கள். தன்னம்பிக்கை, சமூக ஈடுபாடு, அன்பு, பகிர்தல், கீழ்ப்படிதல் போன்ற நல்ல குணாதிசயங்களோடு வளர்த்துங்கள். அவர்கள் நாளை வீட்டுக்கு ஆனந்தமும், நாட்டுக்கு பெருமையும் தேடித் தருவார்கள்.

1,062 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *