நான் வில்லனாக இருந்த சில கணங்கள்
-மாதவி யேர்மனி
“உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்”
யேர்மனியில் ஒருவருக்கு நோய் வந்தால் டாக்டர்கள் விரைந்து செயற்படுவார்கள், அதுமட்டுமல்ல! இடையில் தாதிமார் நோய்க்கு மருந்து, அல்லது ஆலோசனை சொல்லாது டாக்டர் நேரடியாக நோயாளியுடன் தொடர்பில் இருப்பார்.
அவசர சிகிச்சை என்றால் அம்புலன்ஸ் அடுத்த வினாடி வாசலில் நிற்கும். பேரூந்து கூட 4.மணி 7 நிமிடத்திற்கு என்றால் பேரூந்து சரியா அந்நேரம் தரிப்பில் நிற்கும். மணிக்கூடு நேரம் கூட பார்த்து சரியான நேரம் விடலாம் என்னும்போது அம்புலன்ஸ் வண்டி விரைந்து வருவது ஒன்றும் அதிசயம் இல்லையை!
இங்கிலாந்தில் இப்படி எல்லா நேரங்களிலும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இங்குவாழ்பவர்கள் எவரும் அதற்காக நோயினால்; இறந்து விடுகிறார்களோ என்றால் இல்லவே இல்லை. இங்கிலாந்து வைத்தியமுறை வேறு. இங்கிலாந்தில் வாழ்பவர்களுக்கு அந்த முறை ஒரு கஸ்டம் என்று சொல்வதற்கு இல்லை. அவர்களது ஒப்பீடு இலங்கையோடு இருக்குமே அன்றி யேர்மனியோடு இருக்காது.
நான் யேர்மனியில் 40 வருடங்கள் இருந்து, தற்போது இங்கிலாந்தில் வசிப்பதால், எனக்கு ஒப்பீடு பேரூந்து மட்டுமல்ல, பார்ப்பது, கேட்பது, உண்பது, பேசுவது எல்லாவற்றிலும் ஒப்பீடு தலைதூக்கி நிற்கும். “யேர்மனியில் என்றால்” என்றே எனது ஒவ்வொரு பேச்சும் தொடங்கும்.
ஒரு நாள் முதுகு நோகுது என்று டாக்டரிடம் போனேன், கனிவாகக் கதைத்து, எனக்கு ஒரு வாரத்தில் மாறிவிடும், பயப்பிடத் தேவையில்லை. கீறீமுக்கு எழுதுகிறேன் நாளை பாமசியில் எடுங்கள் என்று சொன்னபடி, எழுந்து வழியனுப்பி வைத்தார். இங்கிலாந்தில் வைத்தியம் சரி இல்லை என்றார்கள்! எனக்கு நன்றாகவே இருக்கிறது என்று எண்ணியபடி வீடுவந்தேன்.
சரியாக ஒருவாரம். இரவு 3 மணி இருக்கும், கண்விழித்ததும் காதுக்குள் இரைந்தது. காட்டுக்குள் படுப்பதுபோல் பூச்சிகளின் சத்தம் கேட்டது. காலை மீண்டும் அதே டாக்டரிடம் ஓடினேன். அவர் காது டாக்டர் அல்ல. ஆனால் அவர் பார்த்து காது டாக்டரிடம் போக வேண்டும் என்றால்தான் போகலாம். என்னிடம் சில கேள்விகள் கேட்டார். உங்களுக்கு வந்திருப்பது ஒருவகையான காது இரைச்சல். இரு காதுக்குள்ளும் கேட்பதால் பயமில்லை. அந்த நோய் இதுதான் என்று ஆணித்தரமாக நோய்க்கு ஒரு பெயரும் சொன்னார். நான் அவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, அவர் காதுகொடுத்துக் கேட்ட மாதிரி இல்லை.
எனக்கு இப்போ அவர் முகத்தைப்பார்க்க டாக்டர்மாதிரி இல்லை. எவ்வளவு சுகமாக இரண்டு காதுக்குள்ளும் கேட்பதால் பிரச்சினை இல்லை என்கிறார். இவர் படிச்ச டாக்டரா? சென்ற முறை கதாநாயகனாகத் தெரிந்தவர், இப்போ நம்பியார் போல் தெரிந்தார்.
மனதை அடக்கியபடி அப்ப இது மாறாதா? என்றேன். இல்லை ஆனால்! போகப் போகப் பழகிவிடும், உங்களுக்கு எது மிகவும் பிடிக்கிறதோ அதைச் செய்யுங்கள். இரைச்சல் தெரியாமல் இருக்கும் என்றார்.
இன்னும் கோபம்! எனக்கு உச்சத்தை தொட்டது. இந்த வருத்தம் வரக் காரணம் என்ன என்றேன். அவர் சொன்ன காரணம், என் வாழ்வில் நான் நேரடியாக அப்போதுதான் முதல் தடவை கேட்டேன்.
அவர் சொன்னது என் முதுமையை.
வீடுவந்தேன் காதுக்குள் இரைச்சல் சாகும்வரை கேட்குமா? இனி வாழ்வில் அந்த அமைதி தெரியாதா? என எண்ணியபடி இருந்தபோது, டாக்டர், ‘உங்களுக்கு பிடித்ததைச் செய்யுங்கள்” பின் இரைச்சல் கேட்பதே தெரியாது என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
என்னோடு சித்திரம்; இருக்கிறதே! வரையலாம் என்று வரைந்தேன். இரைச்சல் நிற்கவில்லை, ஆனால் காணவில்லை.
முதுகு நோ மாறிவிடும், என்று சொல்லும்போது கதாநாயகனாகத் தெரிந்த டாக்டர், இரைச்சல் வாழ்கைபூராக இருக்கும் என்ற உண்மையைச் சொன்னபோது நம்பியாராகிவிட்டார். இப்போ டாக்டர் முகம் நாயகனாவே தெரிந்தது.
என்னோடு இருப்பது கலையல்ல! கடவுள் என்பேன். என்னைப் பல நேரங்களில் காப்பாற்றிய கடவுளாக கலையே இருந்தது.
838 total views, 3 views today