உலகின் தலை சிறந்த கட்டிடக்கலைகளுள் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்வதால் துரதிருஷ்டம் வருமா?
பிரியா.இராமநாதன்.இலங்கை.
(பொன்னியின் செல்வன் ஸ்பெஷல் )
கடைச்சோழ வம்சத்தில் உதித்த விஜயாலயன் பரம்பரையினர் வழியில் வந்த மாமன்னன் ராஜராஜன் 1003ம் ஆண்டுக்கும் 1010ம் ஆண்டுக்கும் இடையே எழுப்பிய தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரியகோயில் தமிழர்களின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவுக்கு ஒரு உன்னத எடுத்துக்காட்டாக காலங்காலமாக திகழ்கிறது என்றால் மிகையில்லை . தென்னிந்திய கோயில்களில் மிகவும் பெரியதும், புகழ் பெற்றதுமான இக் கோயிலை ‘தட்சிண மேரு’ என்றழைக்கின்றனர். போர்களில் கிடைத்த வெற்றிகளை இறைவனுக்கு அர்பணிப்பதற்காகவே இராஜராஜன் இந்தக் கோவிலை கட்டியதாக கூறப்படுகின்றது.
இக் கோயிலின் கட்டுமானம் பொறியியல் துறையில் ஓர் அற்புதம் என்று போற்றப்படுகிறது. கண் எட்டிய தூரம் வரை மலைகளோ, குன்றுகளோ இல்லாத பெரும் செம்மண் சமவெளியே தஞ்சை. ஆனால் பெரும் கற்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டது எப்படி? இந்தக் கோவிலுக்கான கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? எப்படிக் கொண்டு வந்து சேர்த்தார்கள் ? போன்ற கேள்விகள் மனதில் எழுவது இயல்பானதே. திருச்சிக்கு அருகே மாமலை என்றொரு மலை இருந்ததாகவும், அந்த மலையை முற்றிலும் அறுத்து எடுத்து, யானைகள் மூலம் கொண்டு வரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. (புதுக்கோட்டை பகுதி மற்றும் திருக்கோவிலூர் என்ற ஊருக்கு அருகிலிருந்தும் கொண்டு வரப்பட்டதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன ). லிங்கமாக வீற்றிருக்கும் பாறையை, குஜராத்தில் உள்ள சௌராஷ்ட்ரா என்ற இடத்தில், நர்மதா நதிக்கரையிலிருந்து கிட்டத்தட்ட இருநூற்று ஐம்பது டன் எடையுள்ள அந்த பாறையை, விந்திய மலைகளைக் கடந்து கொண்டு வந்ததாகக் கூறுகிறார்கள். இந்திய நிலப்பரப்பில் உள்ள ஆலயங்களிலேயே தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியே இரண்டாவது பெரிய நந்தி. நந்தியின் உயரம் 12 அடி. நீளம் 20 அடி. தஞ்சை நந்தியின் வேலைப்பாடும், கலை அழகும் தனித்துவமானது , பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட நந்தியே இது. மேலும் , தஞ்சை கோவில் கட்டப்பட்டபோது வைக்கப்பட்ட நந்தி சிறு சேதாரம் அடைந்ததால் நாயக்கர் காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நந்தியே இது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உலகின் பாரம்பரியச் சின்னமாகவும், தமிழகத்தின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி, அதில் பருமணலை நிறைத்து, அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது. தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளுமாம் . இதனை “zero settlement of foundation” என்கின்றனர்.
இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. மேலும் தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல் என்பதால் அஸ்திவாரத்தில் இடப்பட்டிருக்கும் இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல என்றும், கோயிலின் அடியில் கிடைத்த இந்த மூன்று மடங்கு பெரிய பருமணலானது (மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல் )மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து தஞ்சைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஐந்து முதல் ஆறு டன் எடையுள்ள ஒவ்வொரு கல்லையும் எப்படி உயரே கொண்டு சென்றார்கள்? என்கிற வியப்பு இன்றும் பலருக்கு இருக்கிறது அல்லவா?கோவிலின் உயரம் எவ்வளவு உயர்கிறதோ அந்த அளவிற்கு சுற்றிலும் மண்ணை சாய்வாக கொட்டி அந்த மலை போன்ற சாய்ந்த பகுதிகளில் கற்பாறைகளைக் கொண்டு செல்லும் “மண்சாரம் ” என்கிற சிஸ்டத்தின் பிரகாரம் இந்த கற்கள் மேலே கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இரண்டாம் உலகப் போரின்போது இக்கோயிலுக்குள் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட ஒரு படை அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நுற்பமான கட்டிடக்கலையினை தன்னகத்தே கொண்டிருக்கும் தஞ்சை பிரதோட்ச்சவர் கோவில் பற்றிய மக்களின் தவறான கட்பித்தங்களை இங்கே நாம் அவசியம் குறிப்பிட்டேயாகவேண்டும். இன்றும் கூட, தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்வதால் துரதிருஷ்டம் வரும் என்று மக்கள் நம்புகிறார்கள் என்பதே வேதனையான விடயம். ஆட்சியாளர்கள்கூட இந்த கோயிலுக்கு ஏதாவது நன்மை செய்தாலோ அல்லது திருத்த வேலைகளை செய்தாலோ , தங்களுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்கிற சென்டிமென் கொண்டவர்களாக இருப்பதுதான் வேடிக்கையின் உச்சம். தற்போது கோயிலின் ஒருசில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெரியகோயிலின் வழிபாட்டு முறைகள் திட்டமிட்டு மாற்றப்படுவதாகவும், கோயில் கட்டுமானங்கள் சிதைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கோவிலை சுற்றியுள்ள அகழிகளில் உள்ள பாறைக் கற்கள் அந்தப் பகுதி மக்கள் சிலரால் தமது சொந்த கட்டுமானங்களுக்காக கொண்டுசெல்லப்படுவதும் கவலைக்குரியவொன்றே.
அதுமட்டுமன்றி பெரியகோவில் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் சொல்லப்பட்டு வருகின்றது. ஏன் இவ்வாறான கட்டுக்கதைகள் உலவுகின்றன என சிந்தித்துப்பார்த்தால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விஞ்ஞான அறிவை இருட்டடிப்பு செய்வதன் மூலம் ஆதிக்கச் சிந்தனையாளர்களால் மூடத்தனங்களை பரப்புவதில் சுயநலம் அடங்கி யுள்ளது என்பதும், பழமை குறித்த கதைகளை விஞ்ஞானம் மறுக்கும் போது, மக்கள் உண்மையை அறியவிடாமல் மூடத்தனங்களை ஊதிப் பெருக்குவது காரணமாக அமைவதையும் அவதானிக்கலாம். இவ்வாறு தஞ்சை கோவில் பற்றி நிலவும் தவறான கருத்துக்களில் ஒன்றுதான் கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்பது.
ஆனால் காலை நேரத்தில் கோபுரத்திற்குப் பின்பக்கமும், மாலை நேரத்தில் கோபுரத்தின் முன்பக்கமும் கோபுரத்தின் நிழல் தரையில் விழும் என்றும், விமானத்தின் உயரத்தில் இருக்கும் கல் 80 டன் கொண்ட ஒற்றைக் கல் என்கிற தவறான கருத்திற்கு, உயரே இருப்பது 80 டன் உள்ள ஒரே கல் அல்ல என்றும் பல கற்களை ஒன்றாக ஒட்டி வைத்திருக்கும் நுட்பமான வேலைப்பாடான அவ்வமைப்பானது ஆரஞ்சு பழம் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருப்பதைப் போன்ற நுட்பமே அது என்றும், கோவிலில் உள்ள நந்தி வளர்கிறது என்பதோடு இரவு நேரத்தில் நந்தியானது எழுந்து மேய்வதற்குச் செல்கிறது என்றும் அப்படி வளராமலும் மேயச் செல்லாமலும் இருப்பதற்காக முதுகில் கடப்பாரை கொண்டு ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள் என்கிற புரளிகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அவையெல்லாம் தவறான கட்டுக்கதைகள் என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் மணிமாறன்.
உலகின் மிகச் சிறந்த பொக்கிஷங்களில் ஒன்றான இந்த கோவில் இனி வரும் தலைமுறையினர்களுக்கும் சரியான தகவலோடு அதன் பெருமையானது கொண்டுசேர்க்கப்படவேண்டும் என்கிற கடப்பாடு நம் ஒவ்வொருவருக்குமே உண்டு .
982 total views, 3 views today