மருத்துவப் பழம்

ஒரு காலத்தில வாழை இல்லாத வீடு யாழ்ப்பாணத்தில இல்லை.
வாழை தனிய,குலை தனிய வாங்கி கட்டிற நிலமையும் வந்திட்டுது!

  • Dr. T. கோபிசங்கர்-யாழப்பாணம்

வாழை இறக்க வந்தவன் ஆக்களே இல்லாத வீட்டை மாறி வந்திட்டனோ எண்டு யோசிக்க , “ஓம் தம்பியவை இங்க தான் இறக்குங்கோ”எண்டு வந்த பெரியவரை, “ அப்பா நீங்க சும்மா இருங்கோ வந்தவனுக்கு கொஞ்சம் கூடத் தாறம் எண்டா இறக்கி கட்டி விடுவாங்கள்” எண்ட மகளின்டை குரல் அவரை அடக்கிச்சுது.

வாழை கட்டிக் கொண்டிருக்கேக்க வந்த வானில இருந்து பத்துப் பெடியள் இறங்க வீடே பரபரப்பானது. வந்தவங்கள் கமராவைத்தூக்கிக் கொண்டு போய் லைட்டைப் போட பொம்பிளை ஒரு மார்க்கமா வெளிக்கிட்டு வர, கலியாணம் தொடங்கப் போகுது நாங்கள் பிந்தீட்டம் எண்ட படி வாழைக்காரன் அந்தரப்பட்டான். “ஏன் இப்பிடி அரக்கப் பறக்க நிக்கிறீங்கள் கலியாணம் நாளைக்குத்தானே “ எண்ட படி ஐயா milo packet ஓட வந்து, “ஒண்டும் இல்லை இது ஏதோ pre wedding shooting ஆம் எண்டார். பத்தாததுக்கு பொம்பிளையின்டை மச்சாள் காரி “ என்டை கலியாணத்தில கொரனா எண்டு இப்பிடிச் செய்யேல்லை, இதோட நானும் எடுத்து அல்பத்தில பிறகு சேக்கிறன் “ எண்டு தானும் வெளிக்கிட்டு வந்தா.
படம் எடுத்த வீடியோக்காரன் படத்தோட நாளைக்ககு ஆர் ஆர் எப்பிடி படம் எடுக்கேக்க என்னென்ன செய்யோணும் எண்ட “முறை தலையை “ எல்லாம் விளங்கப்படுத்த, “அண்ணை என்ன எண்டாலும் பரவாயில்லை நீங்கள் சொல்லிறபடி செய்யிறம் படங்கள் முக்கியம்” எண்டு சொல்லிக்கொண்டிருந்த பொம்பிளைகளை சிரிப்போட பாவமாப் பாத்தாங்கள் வாழை கொண்டு வந்த பெடியள். வெளியில வந்த வீடியோக்காரன் குலையாப் பாத்து பச்சையும் மஞ்சளும் கலந்திருக்கு படத்துக்கு எடுப்பா இருக்காது எண்டான். நாங்கள் வேணும் எண்டால் மருந்து அடிச்சு விடிறம் நாளைக்கு முழு மஞ்சளா இருக்கும், ஆனால் என்ன வெட்டி வித்தால் ஒருத்தனும் வாங்க மாட்டான் எண்டான் வாழைக்காரன். “ஆனாலும் மஞ்சள் spray paint அடிச்சா படத்துக்கு நல்லா இருக்கும்“ எண்டு எல்லா முறையும் சொல்லித்தாற வீடியோ அண்ணா சொல்ல, வீட்டுக்காரர் painterகுச் சொல்லி அனுப்பிச்சினம்.

எல்லாத்தையும் பாத்துக்கொண்டிருந்த ஐயாவுக்கு அந்தக் காலத்துக் கலியாணத்தில வாழை கட்டிறது ஞாபகம் வந்திச்சுது. படலைக்கு ரெண்டு பக்கமும் இடம் பாத்து அலவாங்கு போடேக்க மண் கல்லு மாதிரி இருந்திச்சுது. தண்ணி விட்டு வைச்சிட்டு பிறகு கிடங்கை அலவாங்கால கிண்டி ஆழப்படுத்தி வைக்க வண்டில்ல வாழை வந்திறங்கிச்சுது. வாழையைப் பாத்திட்டு காத்தடிக்குது இன்னும் அரையடி தோண்டவேணும் எண்டு சொல்ல வேலை தொடந்திச்சுது. பெரிய தேவைக்கு எல்லாம் நீரவேலி சிறுப்பிட்டி தான் வாழைக்கு. அங்க கிணத்து இறைப்பில தான் வாழைத்தோட்டம் எல்லாம். கன இடத்தில பங்குக்கிணறு எண்டாலும் மூண்டு நாளைக்கு ஒருக்கா தண்ணி காட்டிற படியா தண்ணிச்சண்டை இல்லை. தண்ணி இறைக்கத் தொடங்கி பாத்தி நிரம்பி வழிய பாத்தியை மாத்தித் தண்ணி கட்டீட்டு கடைசிப் பாத்தி நிரம்பி வழிய இறைப்பு நிக்கும். வீட்டு மூலைக்க குளிக்கிற தண்ணீல வளருற மாதிரி இல்லை; வாழைத்தோட்டம் இறைக்கேக்க பாத்தி நிரம்பி வழிஞ்சோடும் வரை இறைக்கோணும். இரண்டு நாளைக்கு முதல் நீர்வேலித் தோட்டத்தில முத்தினகுலையாப் பாத்துச் சொல்ல, வெட்டிப் புகைபோட்டு பழுக்கப் பண்ணி அனுப்பி இருந்தான் தோட்டக்காரன். விசேசங்களுக்கு வாழையோட குலை வாங்கப்போனா குலை மஞ்சளா இருக்காது அளவான குலை, நிமிந்த வாழை முத்தின குலை எண்டு தேடிப்பாத்து வாங்க வேணும். பழுக்காத குலையை வாங்கிப் புகை போட்டுப் பழுக்க வைச்சுத்தான் கட்டிறது. புகை போடிறதுக்கு எண்டே தோட்டத்தில ஒரு இடம் இருக்கும்.

வாழையை வெட்டி கிடத்திப்போட்டு குலையை மாத்திரம் கிடங்குக்க இறக்கி அடியிலேம் மேலேம் வாழை மடலைப் போட்டு மேல வாழைச்சருகால போட்டுப், பிறகு ஈரமண்ணைப் பரவிப் போட்டு மூட வேணும். கிடங்கின்டை ஒரு மூலையில இருக்கிற இன்னொரு சின்னக் கிடங்கில பொச்சு சருகு எல்லாம் வைச்சு தணல் கட்டையை வைச்சு மூடி விட சூட்டடுப்பு மாதிரி ரெண்டு கிடங்குக்கும் உள்ள Connectionஆல புகை மட்டும் போகும்.

சூடு போனால் பழம் வெந்து போடும். உள்ள போன புகை கிடங்கெல்லாம் நிரப்பி வழையை பழுக்கப் பண்ணீட்டு கடைசீல எங்கயோ ஒரு மூலையால வெளீல வரத்தொடங்கும். கிடங்கில இருந்து புகை வரத் தொடங்க சின்னக்கிடங்கின்டை அடுப்பை அணைக்கோணும். இப்பிடி மூண்டு நேரம் புகை போட அரை மஞ்சள் நிறத்தில குலை இருக்கும். சாப்பிட பழம் வேணும் எண்டால் ரெண்டு நாளைக்குப் புகை போட வேணும்.

இறக்கின வாழையை நிமித்தி உயரம் பாத்து அடியால குறைச்சு நிமித்திக் கட்டீட்டு இலையைக் கட்டி இருந்த வாழைச் சருகை வெட்ட வாழை விரிஞ்சு நிண்டுது. நல்லது கெட்டது எண்டு வீட்டில, வெளீல நடக்கிற காரியங்கள் ,கோயில் காரியங்கள் எண்டு எல்லாத்திலேம் வாழை இருக்கும்.

கலியாணம் கோயில் எண்டால் கதலி, செத்தவீட்டுக்கு மொந்தன் வாழை,வாழை வெட்டுக்கு குலையோட வாழை எண்டு பாத்துப் பாத்து கட்டிறது.

அதோட வாழை கட்டிறதுக்கு எண்டு ஒரு குறூப்பும் இருக்கும், பழத்தைக் களவெடுக்கவும் ஒரு குறூப் திரியும்.
மதில் இல்லாத காலத்தில படலை இல்லாட்டி ஒழுங்கை வாசலில பனைமரம் நட்டு அதோட வாழையைச் சேத்துக்கட்டிறது. வாழையைக் கட்டீட்டு வாழை நாரால கட்டி இருக்கிற இலையை அவிட்டு விட, இலை எல்லாம் விரிஞ்சு வடிவா நிக்கும். பிறகு என்னெண்டால் வாழை கட்டினவன் பக்கத்து வீட்டை களவா புடிங்கி இளநீர் குடிச்சுப் பிடிபடப் போய் சமாளிக்கத்தான், குலை நுனியில இளநீர் கட்டத் தொடங்கிச்சினம் வடிவெண்ட பேரில. இப்ப கடைசியா வாழை தனிய, குலை தனிய வாங்கி கட்டிற நிலமையும் வந்திட்டுது. ஆனா இப்ப என்னெண்டால் வீடியோக்காரன் சொல்லிறான் எண்டு என்னென்ன எல்லாம் செய்யினம் எண்டு யோசிச்ச படி நிண்ட ஐயாவுக்கு உள்ள வந்து Coatஐ போடுங்கோ படம் எடுக்கவாம் எண்டு கூப்பிட ஓடிப் போனார்.

ஒரு காலத்தில வாழை இல்லாத வீடு யாழ்ப்பாணத்தில இல்லை. எங்கயாவது ஒரு குட்டியைக் கிளப்பிக்கொண்டு வந்து கிணத்து தண்ணி ஓடிற இடமாப்பாத்து வைக்க அது தானா வளரும். ஒண்டும் பராமரிக்கத்தேவை இல்லை. குலை போடுதா இல்லைப் பழுத்திட்டுதா எண்டு கூடப் பாக்கத் தேவையில்லை. காகம் குலையைக் கொத்தேக்க போய் வெட்டினாச் சரி. வெட்டின குலை உடனயே சீப்பாகி அக்கம் பக்கம் எல்லாம் போயிடும் எண்ட படியால மிஞ்சிறதும் இல்லை அழுகியும் போறேல்லை. ஏனோ தெரியாது,வேலிச்சண்டை இருந்த காலத்திலேயும் வாழைச்சண்டை இருக்கேல்ல.

பள்ளிக்கூடம் போற ஒவ்வொரு நாளும் மாஜரின் பூசின பாணுக்கு வாழைப்பழம் தான் காலமைச் சாப்பாடு. ஒரு றாத்தல் பாண்,மாஜரின் பக்கற்,ஒரு சீப்புக் கதலிப்பழம் இப்ப சாப்பிட” எண்ட சம்பாசணை எல்லா வாழைப்பழக்கடையிலும் காலமை கேக்கலாம். வாங்கிற அரைக்கிலோ பழத்துக்கு கடையில பழம் ஒண்டு தாங்கோ சாப்பிட்டுப் பாப்பம் எண்டு கேக்க முடியாது, ஆனாலும் வாழைப்பழம் வாங்கிறதுக்கும் ஒரு முறை இருக்கு. எல்லாக் கடையிலேம் வாழைப்பழம் வித்தாலும் ஊருக்குள்ள ஒரு வாழைப்பழக்கடை இருக்கும். “ இப்ப சாப்பிட, இரவுக்கு, நாளைக்கு கோவிலுக்கு, ரெண்டு மூண்டு நாள் வைச்சுச் சாப்பிட “ எண்டு தேவைக்கு ஏத்த மாதிரி எல்லா ளவயபந லும் வாழைப்பழம் அங்க எப்பவும் இருக்கும். தலைகுனிஞ்சு போற சின்னக்கடை மிச்சச் சுண்ணாம்பு பூச்சில வெள்ளையான குறுக்க மரத்தில தொங்கிற முடிச்சுக்களில வாழைக்குலைகள் தொங்கும்.

கோயில் தேவைக்கு இடைப்பழம் பழுத்த கதலிக் குலையில வாங்கிற சீப்பு இரண்டாம் நாள் நிறத்து சரியா இருக்கும். கோயில் அருச்சனைக்கு எண்டாக் கதலி தான். கதலிப்பழம் எவ்வளவு பழுத்தாலும் காம்பில இருந்து கழராது அழுகும்வரை. ஆனால் தோல் டக்கெண்டு கறுக்க வெளிக்கிட்டிடும். சுடச்சுட இறக்கின அரிசிமாப் புட்டுக்கு திருவின செத்தல் தேங்காயப் பூவோட ரெண்டு பழத்தை உரிச்சு சீனியும் கொஞ்சம் போட்டுக் குழைச்சுச் சாப்பிட கதலி தான் சரி. பழம் கூடப்பழுத்திருந்தா வாய்ப்பன் சுடலாம். வயித்தாலை போகாட்டி இதுதான் மருந்து. சபையில வைக்கிறதும் இந்தக் கதலிப் பழம் தான்.

கப்பல் பழம் முழுக்க மஞ்சளா இருக்கும். கலியாண வீட்டுத் தட்டத்துக்கு தேடி வாங்கிறது. அதோட நல்லாப் பழுத்த பழம் சிலநேரம் முத்தி வெடிச்சும் இருக்கும். நுனீல இருக்கிற கறுப்பு விழுந்தாத் தான் அது பழம். கப்பல் பழம் எவ்வளவு பழுத்தாலும் லேசில கறுக்காது, சீப்பில இருக்கிற ஒரு பழத்தில கையை வைக்க அது கையோட கழண்டு வந்தால் சரியான பதம். கப்பல் சாப்பிட்டாப்பிறகும் வாய் ஒரு கரகரப்பா இருக்கும். கப்பல் பழம் சூடு எண்டு சொல்லி வயித்தாலை அடிக்கு தேடி வாங்குவினம்.

கூவக்கட்டு, பொக்குளிப்பான் எண்டால் குளிர்மை எண்டு இதரை தருவினம். அப்ப இதரை பெரிய பழம், தாரை விட்டு தோலை மட்டும் உரிச்சு சாப்பிடுறது. சாப்பிட்டு முடிக்க ஐஞ்சு நிமிசம் வேணும். ஆனாலும் இப்ப வாறது பழைய இதரை இல்லை. தொங்கவிட்ட குலையில இருந்து பழுக்கத் தொடங்க இதரைப்பழம் பொத்துப் பொத்தெண்டு விழும். சாப்பிடேக்கேம் சாப்பிட்டாப் பிறகும் ஒரு புளிப்புத் தன்மை இருக்கும்.

ஏதோ மருத்துவப் பழம் புதுசா ஒண்டை சனம் ஏமாந்து வாங்குது.
சீனிக்கதலிக்கு நடுவில சின்னச்சின்ன கொட்டைகள் இருக்கிறதால பெரிசா னநஅயனெ இல்லை.பச்சையா இருக்கிற யானை வாழை எண்பதுகளின் கடைசீல தான் ஊரப்பக்கம் கூட வரத்தானது. ஆனாலும் எங்கடை ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொரு மரு(க)த்துவத் தன்மை இருக்கிறது தெரியாம இப்ப ஏதோ மருத்துவப் பழம் புதுசா ஒண்டை சனம் ஏமாந்து வாங்குது.

645 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *