பாரதி காட்டிய தொழில் செயும் வழி

-கலாசூரி திவ்யா சுஜேன் -இலங்கை

“செய்யும் தொழில் உன் தொழிலே காண் சீர்பெற்றிட நீ அருள் செய்வாய்“ என்ற பாரதியின் மந்திரச் சொல் அறநெறி நின்று உழைக்கும் உளங்களுக்கு மேலும் மேலும் வலிமை சேர்க்கிறது.
செய்கின்ற தொழில் அனைத்துமே இறைவனது செயல் என எண்ணும் போது “ நான் “ எனும் அகந்தை அழிகிறது. செய்கின்ற செயல்கள் அனைத்திலும் உண்மை ஒளி வீசிகிறது. அச்செயல் மீது நம்பிக்கை பிறக்கிறது.
நம்மை இயக்கும் பரம்பொருளின் முன் முழுவதுமாய் சரணடையும் தன்மை எழுகிறது.
இவ்வண்ணம் செயல் புரியும் போது உயர்விற்கான வழியினை அப்பரம்பொருளே எமக்கு அருளும் எனும் திண்மை மலர்கிறது.
இதுவே பாரதி காட்டிய தொழில் செயும் வழி.

பாரதியின் விநாயகர் நன்மணிமாலையின் சுவை எல்லையற்றது. அதில் பொருட்சுவை சொற்சுவை என அத்தனையும் நிரம்பி நிரதி போல் நிற்கும்.ஒவ்வொரு சொல்லிலும் பொதிந்துள்ள தத்துவச்சுவை அபாரமானது.ஆழச் சிந்திக்கத் தூண்டி அகத்தூய்மை தரவல்லது. உணரும் ஞானம் வந்தால் இன்பம் வரமாகும்.

இங்கு பாரதி தன் அடிப்படைத் தொழிலாக எதனைக் குறிப்பிடுகிறார் பாருங்கள்.
“ நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்”

ஆம்,நம் ஆத்மாவை மகிழ்விக்கக் கூடிய செயலைச் செய்ய வேண்டும். அதாவது நம்மை நாம் மகிழ்விக்கத் தெரிய வேண்டும். அதே சமயம் பிறருக்காகவும் நாட்டுக்காகவும் பணியாற்ற வேண்டும்.உளத்தையும் உடலையும் சோரவிடாது எக்கணத்திலும் சக்தியுடன் இயக்கப் பழகவேண்டும். இம்மூன்று செயல்களுமே எம்முள் எழவல்ல எதிர்மறை எண்ணங்களைத் தூரவிரட்டவல்லது என்று அறிந்து தெளிந்து சொல்லியிருப்பார் நம் ஞானபாரதி.

நம் பேராசைகள் எல்லாம் நிறைவேற வேண்டும் என்ற சுயநல வேட்கையோடு இறையுடன் வணிகம் செய்து பக்தர் என்று தம்மைச் சொல்லித் திரிவோர்க்கு இறைவனிடத்தே நாம் வைக்கக் கூடிய பெரும் பிரார்த்தனை என்னவாக இருக்க முடியும். ? என்ற விசாலத்தைக் காட்டுகிறார்.

எல்லா உயிர்களும் இன்பமெய்த வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்பதே தொழிலெனக் கொண்டு மகிழ்ந்து வாழ்வேன் என்று பாரதி கூறும் மெய்த்தொழில் எல்லோரும் ஒன்றெனும் அத்வைதம் காட்டி நிற்கிறது.

“ உயிரெலாம்
இன்புற்றிருக்க வேண்டி இருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே”

“ பக்தி யுடையார் காரியத்திற்
பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல்
மெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே அனைத்துமெனிற்
சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக் கிறவா!கணநாதா!
மேன்மைத் தொழிலிற் பணியெனையே.”

துன்பத்திற்கான மூலமே நம் மனம் தானே.யாவுமே இறை செயல் என்று வாழ்ந்தால் துன்பம் நம்மை ஒருபோதும் அணுகாது.அதே போல் நாம் செய்யும் தொழில் மேன்மையுடையதாக இருக்க வேண்டும்.நன்மையும் இன்பமும் தரவ்லதாக அமைய வேண்டும். அத்தகு தொழிலில் என்னை இயங்கச் செய்வாய் என இறைவனைப் பணிகிறார்.

“செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி
செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள்,
கையா ளெனநின் றடியேன்செய்
தொழில்கள் யாவும் கைகலந்து
செய்வாள்;”
தாம் செய்யும் தொழிலால் செல்வம் செழிக்கும் என்ற நம்பிக்கை மட்டுமா சரஸ்வதி இனிய கவிதைகளை தந்து கொண்டே இருப்பாளாம்,சக்தி துணை நிற்பாளாம். முப்பெருந்தேவிகளையும் ஒருசேர ஆரதித்துப் பணிந்தேத்திய வரல்லவா.
தன்னறத்துடன் தொழில் புரிந்தால் வேண்டியன யாவும் கிட்டும், சகல தெய்வங்களும் துணை நிற்கும்.

ஆகவே அன்பானவர்களே! நாம் எப்படி இருக்க வேண்டும் என்றால் பரம்பொருளைப் பணிந்து பக்தியுடன், நல்லனவற்றை மட்டும் தொழிலாகச் செய்ய வேண்டும். அதன்வழி நாம் எதிர்கொள்வதும் நமக்கு வருவதெல்லாமே அந்தப் பரம்பொருள் தருவன. ஆதலால் வருவதை இன்பமுடன் ஏற்றுக்கொண்டால் வாழ்தல் இனிதாகும்.

“ திருவைப் பணிந்து, நித்தம் செம்மைத் தொழில் புரிந்து, வருவது வருக என்றே மகிழ்வுற்று இருக்க வேண்டும்’ “

“வேர்ப்ப வேர்ப்ப பொருள் செய்வதொன்றையே மேன்மை கொண்ட தொழிலெனக் கொண்டன ன் “
வியர்க்க வியர்க்க வேலை செய்து பொருள் சம்பாதிப்பது மட்டுமே உயர்வான தொழில் என்று கொண்டவர்களே!
இத்தரை மீதினில் அமரசுகம் பெறும் உயர்வான தொழில் யாதெனக் காட்டித்தரும் பாரதியின் வழியை சற்று சிந்திப்போமா ??
அனைத்துக்கும் மேலாய் நாம் எல்லோரும் இயல்பாகவே செய்ய வேண்டிய தொழில் ஒன்று உண்டு .
“ உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்! “

1,192 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *