உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல
கௌசி யேர்மனி
செல்வங்களிலே தலைசிறந்த செல்வம் குழந்தைச் செல்வம். குழந்தைகள் எமக்கு திரவியம் போன்றவர்கள் என்றும் தம்முடைய சொத்து என்றும் பெற்றோர்கள் கருதுகின்றார்கள். தம்முடைய சொத்துக்களைப் பாதுகாப்பது போலவே பிள்ளைகளை தமக்குள்ளே பூட்டி வைத்து பிள்ளைகளின் எண்ணங்களுக்குத் தாமே வேலி போட்டுத் தம்முடைய உணர்வுகளை அவர்களிடம் புதைக்கின்றார்கள். அளவுகடந்த பாசத்தை அவர்களில் கொட்டி வளர்க்கின்றார்கள். அவர்களுடைய எதிர்காலம், அவர்களுடைய சிந்தனை என்று எதனையுமே சிந்திப்பதில்லை
குழந்தைகள் பற்றி 1902 ஆம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற சூஃபிக் கவிஞர் கலீல் ஜிப்ரான் அவர்கள் எழுதிய ஒரு கவிதை இருக்கின்றது. இந்தக் கவிதையை டென்மார்க் வைத்தியசாலையில் விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் இயற்கையின் (கடவுளின்) குழந்தைகள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களே அன்றி உங்களிடம் இருந்து அல்ல. உங்களுடன் இருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல. உங்களுடைய அன்பை அவர்களுக்குத் தரலாம். உங்களுடைய எண்ணங்களை அல்ல. அவர்களுக்கு என்று தனிச்சிந்தனைகள் உண்டு. உடலுக்குத்தான் பாதுகாப்புத் தர முடியும் ஆன்மாக்களுக்கு அல்ல. இதில் அற்புதம் என்னவென்றால், நீங்கள் வில். உங்களிடம் இருந்து எய்யப்படும் உயிருள்ள அம்பு குழந்தைகள். அம்பு எதை அடைய வேண்டும் என்ற இலக்கை வில் தீர்மானிப்பதில்லை. அம்பை எய்பவன்தான் தீர்மானிப்பான். நீங்கள் அம்பை எய்பவன் அல்ல. நீங்கள் அந்த வில்லுத்தான். அந்த அம்பை எய்பவரை நீங்கள் இயற்;கை என்று எடுத்துக் கொண்டால் இயற்கை. கடவுள் என்றால் கடவுள். இதனையே இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களும் கூறுகின்றார்.
இந்த வாசகங்களைப் பாhத்த பின்னும் கூட எமது பெற்றோர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த எமது பெற்றோர்கள் தோளிலே பிள்ளைகளின் புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு சுமை சுமைதாங்கியாவதுடன் பிள்ளைகள் படிக்க வேண்டி சங்கீத சுரவரிசைகளைத் தாமும் பாடம் பண்ணிப் பிள்ளைகளுக்குக் கொடுக்கின்ற வலிகள் ஏராளமாக இருக்கின்றன. தம்மால் முடியாதவற்றைப் பிள்ளைகளில் ஏற்றித் துன்புறுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. ஆம் இங்கு வசதி வாய்;புக்கள் இருக்கின்றன, முடியாதவற்றை முடித்துக்காட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அதிகமான பிள்கைள் வெளியே தெரிந்தும் தெரியாமலும் மனநோய்க்கு உட்பட்டிக்கின்றார்கள். தம்முடைய கைகளை பிளேட்டினால் கீறிக் கொள்ளுகின்றார்கள். மனநிலைத் தாக்கங்கள் உடனே வருவதில்லை. சிறுவயதுப் பாதிப்புக்கள் வளர்ந்த பின்னே பாரிய விளைவுகளைத் தருகின்றன. என்னுடைய Ilakkiya Maalai யூரியூப் சனலில் இருவரைப் பற்றி கூறியிருக்கின்றேன். திரும்பவும் அவற்றை எழுத வேண்டாம் என்று நினைக்கின்றேன்.
- ஆண்களைத் தொடர் கொலை செய்த Jeffrey Dahmer
- Serial Killer Charles cullen அமெரிக்காவை உலுக்கிய சம்பவம் காரணம் என்ன
தற்போது புலம்பெயர்ந்த நாடுகளிலே நடைபெறுகின்ற தற்கொலைகள், கொலைகளுக்கு போர் பாதிப்பினால், அடங்கிக் கிடந்த உள்மனப் போராட்டங்களே காரணங்களாக கருதப்படுகின்றது.இப்போது அந்தத் தாக்கம் பெரியவர்களிடம் இருந்து வெளிப்படுவதாகவும் அவர்களின் பிள்ளைகளுக்கு இவர்கள் மூலமாகக் கடத்தப்படுவதாகவும் கருப்படுகின்றது.
பிள்ளை சாப்பிட வேண்டும் என்றால், பிள்ளைகளுக்கு கைத்தொலைபேசியைப் போட்டுக் காட்டியபடி உணவு ஊட்டும் வழக்கம் எம்மவர்களிடம் இருக்கின்றது. அப்பிள்ளை கைத்தொலைபேசி இல்லாவிட்டால் உணவருந்த மாட்டாது. இவ்வேளை திடீர் ஞானம் வந்த பெற்றோர், கைத்தொலைபேசியை மறைத்து வைத்துவிட்டு உணவு கொடுக்கும் போது பிள்ளை அடம்பிடிக்கின்றது. சிறிது நேரம் பார்த்து விட்டு பிள்ளை சாப்பிடவில்லை என்று கைத்தொலைபேசியை மீண்டும் பிள்ளையின் கையில் கொடுக்கின்றனர். பிள்ளையும் சிரித்து மகிழ்ந்து தன்னை மறந்து உணவருந்தும். ஒரு பழக்கத்தை ஒருவர் மறப்பதற்கு 21 நாட்கள் எடுக்கும் என்று உளவியலாளர்கள் கருதுகின்றார்கள். ஆனால், 10 நிமிடம் பார்த்துவிட்டு மீண்டும் கொடுக்கின்ற போது தான் அடம்பிடித்தால், மீண்டும் பொருள் கிடைக்கும் என்னும் உத்தியைப் பிள்ளை புரிந்து கொள்ளும். கட்டுப்பாடு முள்ளந்தண்டு போன்றது என்பதைப் பெற்றோர் அறிந்திருக்க வேண்டும். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும். இந்தப் பழக்கம் நாளடைவில் வளர்ந்து பெரியவர்களான பின் பெரிய விடயங்களுக்குத் தொடரும்.
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும் தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.
பலவற்றையும் படைத்துப் பலரோடும் சேர்ந்து உண்ணும் பெருஞ்செல்வம் உள்ளவரானாலும் என்ன? மெல்லமெல்லக் குறுகுறு நடந்து சென்று தம்முடைய சிறிய கையை நீட்டி, உணவருந்துகின்ற பாத்திரத்திலிருக்கின்ற நெய்யுள்ள சோற்றிலே கையை வைத்து அந்தக் கையாலேயே பெற்றோரைக் கட்டிக்கொண்டும், வாயாற் கவ்வியும், கையால் அளைந்தும், பிள்ளையானது தம்முடைய உடம்பெல்லாம் சிதறடிக்கின்ற போது உணவு வீணாகப் போகிறதே என்ற நினைவை பெற்றோருக்குத் தோன்றாது மயக்கி இன்பத்தால் மகிழச் செய்யும் மக்களை இல்லாதவர்க்கு தாம் வாழுகின்ற நாட்களெல்லாம் பயனில்லாத நாட்கள். இப்படியான குறும்பு செய்த குழந்தையை சமூகக் குற்றவாளியாக மாற்றாமல் இருப்பது பெற்றோர்களின் கையிலேதான் தங்கியிருக்கின்றது.
1,059 total views, 4 views today