செப்பேடுகளில் எழுதி வைத்ததாகக் கல்வெட்டுகள் கூறிய தேவாரத் திருமுறைகள் இப்போதுதான் கிடைத்துள்ளன!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த சட்டநாதர் கோயிலில், 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம், 100க்கும் மேற்பட்ட செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுப்பு; 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

திருஞானசம்பந்தப் பெருமானின் திருவருள் எங்கும் பொலிகிறது !எங்கள் சைவ மரபின் தலைமைக் குரவரான சம்பந்தப் பெருமான் அவதரித்தருளிய சீர்காழியில் தேவாரப் பாடல்கள் எழுதப்பட்ட 400க்கும் மேற்பட்ட செப்பேடுகள் கிடைத்துள்ளன.

தமிழக வரலாற்றிலேயே இத்தகைய அற்புத நிகழ்வு இதற்கு முன் நடந்ததில்லை என்று சொல்கிறார்கள்.தேவாரத் திருமுறைகளை செப்பேடுகளில் எழுதி வைத்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆனால் இப்போதுதான் முதன் முறையாக தேவாரத் திருப்பாடல்கள் எழுதப்பட்ட செப்பேடுகள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.

இவற்றில் இதுவரை கிடைக்காத தேவாரப் பாடல்கள் உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். புதிய பாடல்கள் கிடைப்பின் அவை நம் பன்னிரு திருமுறை அச்சுப் பதிப்பில் சேர்க்கப்பட்டு பரப்பப்பட வேண்டும். பொதுவாக, ஞானசம்பந்தப் பெருமான் சைவ மரபின் தலைமை குருநாதராகவும் ஸ்கந்த வடிவமாகவும் குறிப்பிடப்பட்டாலும், எம் அளவில் எம் கௌணிய (கௌண்டின்ய) கோத்திர முதல்வருமாவார்.

மேலும் இந்த சீர்காழிப்பதியே எம் பூர்வீகமாகவும் எம்மிடையே குறிப்புகள் உண்டு. இந்த அளவில் சீர்காழி மகா கும்பாபிஷேகம் எம்மால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும். தருமை ஆதீன Dharumapuram Adheenam அருளாட்சியில் இந்த சீர்காழிப் பெரிய கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வருகிற மே 24-ஆம் தேதி நடைபெறுவதற்காக கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் யாகசாலை அமைப்பதற்காக களிமண் எடுக்க மேற்கு கோபுர வாயிலில் கோயில் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது 2 அடியில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர்,வல்லி தேவசேனா சமேத சுப்ரமண்யர்,வீர சக்தியோடு கூடிய சோமஸ்கந்தர்,பூர்ண புஷ்கலா சமேத ஐயனார், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும்,(அரை அடி முதல் 2 அடி உயரம் உடையது ) மேலும் 400க்கும் மேற்பட்ட திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழி பதிகம் தாங்கிய தேவார செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேரில் பார்வையிட்டு அவைகள் எந்த காலத்துக்குரிய சிலைகள் என கேட்டறிந்தார். இதுவரையில் இதுபோன்று எங்கும் கிடைக்காத வகையில் ஒரே இடத்தில் 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால், பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவாரம் எழுதப்பட்டச் செப்பேடுகள்…
இன்றைய நாளில் தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தகுந்த தொல்லியல் சான்று பெரும் ஆவணமாகக் கிடைத்துள்ளது.சீர்காழி சட்டநாதர் கோவில் புனரமைப்புப் பணியின்போது பூமிக்கடியில் இருந்து பஞ்சலோக சுவாமி சிலைகளும் செப்பேடு தொகுதிகளும் கிடைத்தன.இந்த செப்பேட்டில் தேவாரப்பதிகங்கள் எழுதப்பட்டிருப்பதுதான் மிகப்பெரும் வியப்பு.

அரியதொரு வரலாற்று ஆவணம்.

சைவத்தின் மிக பிரம்மாண்ட எழுச்சிக்கு அடித்தளமிட்டவர்கள்அப்பர்,சுந்தரர்,ஞானசம்பந்தர் என்னும் மூவர். இவர்கள் தீந்தமிழில் பாடிய பதிகங்கள் திருமுறைகள் என்றும் தேவாரம் என்றும் அழைக்கப்பட்டன. காலம்.. கிபி 6-9ஆம் நூற்றாண்டு. வாய்வழியாகமட்டும் பாடப்பட்ட தீந்தமிழ் பதிகங்களாம் தேவாரத் திருமுறைகளின் மூலம் எங்கே.? பதிகங்கள் எழுதப்பட்ட சுவடிகள் எங்கே.? தேடலைத் தொடங்கினார் பேரரசர் இராஜராஜர்.

திருநாரையூர் நம்பியாண்டர் நம்பி என்பவரின் துணையோடு சிதம்பரம் கோவிலில் பூட்டியிருந்த அறையில் இருந்த தேவாரச் சுவடிகளை மீட்டு திருமுறைகளாகத் தொகுத்தார் இராஜராஜர். திருமுறைகண்ட செல்வன் என்ற பெயரையும் பெற்றார். தான் எழுப்பிய தஞ்சை பெரியகோவிலில் தேவாரம் பாட 48 ஓதுவார்களை நியமித்து உடுக்கை வாசிப்பவர் ஒருவரையும் மத்தளம் கொட்டும் ஒருவரையும் நியமித்து தினமும் திருமுறைப் பதிங்கள் ஒலிக்கச் செய்தார்.
அவ்வகையில்..
திருமுறைச் சுவடிகளை மீட்டுத்தந்த சிதம்பரம் கோவில் தேவாரப் பெருங்கோவிலாக அறியப்பட்டது. ஆடவல்லான் முன்பு தினந்தோறும் தேவாரம் பாடப்பட்டன. தேவாரம் பாடிய மூவரின் திருவுருவங்கள் வீதியுலா வந்தது. தேவாரம் பாட மண்டபங்கள் எழுப்பப்பட்டன. தேவாரம் பாடுவோருக்கும் கேட்போருக்கும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள் இச்செய்தியை உறுதி செய்கின்றன.

கங்கைகொண்ட சோழன் இராஜேந்திரரின் 24 ஆம் ஆட்சியாண்டு. நக்கன் பரவை நாச்சியார் என்பவர் கோவிலுக்கு பல்வேறு அறப்பணிகள் செய்கிறார். அவற்றில் ஒன்று.. கோவிலில் நாள்தோறும் திருத்தொண்டத்தொகை பாடுவோருக்கு தானம் அளிப்பது. சிவனின் அடியார் வரலாற்றை செந்தமிழில் கூறும் திருத்தொண்டத்தொகை தேவார மூவரில் ஒருவரான சுந்தரர் எழுதியது.

விக்ரமச்சோழன் காலம்.அவரது முதன்மை அதிகாரியாக இருந்தவர்.” அரும்பாக்கிழான் மனையிற் கூத்தன் காலிங்கராயன் “இவர் தில்லை திருச்சிற்றம்பலமுடையாருக்குச் செய்த அறப்பணிகள் ஏராளம்..தான் செய்த செயல்களை செந்தமிழ் செய்யுட்களாக கல்வெட்டில் வடித்துள்ளார்.தமிழ் பதிகங்களான தேவாரத்தை சிதம்பரம் கோவிலில் பாட விரிவான ஏற்பாடுகளைச் செய்தார்.ஞானசம்பந்தர் முதலிய தேவார மூவரும் பாடியருளிய தேவாரத்
திருப்பதிகங்களை தடையின்றி எல்லாரும் இருந்து கேட்பதற்கு தேவார மண்டபத்தைத் தில்லையிலே எடுப்பித்த செய்தியை கூறும் கல்வெட்டு..

‘நட்டப் பெருமானார் ஞானங் குழைத்தளித்தசிட்டப் பெருமான் திருப்பதியம் – முட்டாமைக் கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்.தெவ்வேந்தர் கெட வாட்போக்குந் தொண்டையர்கோன் மன்”
(தெ. இ. க. தொகுதி ஐஏ. பக்கம், 34 ..செய்யுள் 15)
திருக்கோயிலில் நாள்தோறும் இளங் குழந்தைகளுக்குப் பாலும் எண்ணெயும் வழங்குமாறு ஏற்பாடு செய்த செய்தி..
“செல்வி திருந்தறங்கள் தென்னகரித் தில்லைக்கேநல்லமகப் பால்எண்ணெய் நாடோறுஞ்- செல்லத்தான் கண்டான் அரும்பையர்கோன் கண்ணகனீர் ஞாலமெல்லாங் கொண்டானந் தொண்டையார் கோன்” (தெ. இ. தொகுதி ஐஏ. பக்கம் 34, செய்யுள் 18) திருமுறைப் பதிகங்கள் சுவடியில் இருந்தால்தானே அவைகள் செல்லரித்து அழியும். எப்போதும் திருமுறைப் பதிகங்கள் அழியாதவாறு சுவடியில் இருந்தப் பாடல்கள் அனைத்தையும் செப்பேட்டில் எழுதச் செய்தார். செப்புப் பட்டையத்தில் ஆவணமாக பதிவு செய்தார்..

‘முத்திறத்தார் ஈசன் முதற்றிறத்தைப் பாடியவாறு ஒத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி – இத்தலத்தின் எல்லைக் கிரிவாய் இசையெழுதினான் கூத்தன் தில்லைச்சிற் றம்பலத்தே சென்று’ (தெ. இ. க. தொகுதி ஐஏ, பக்கம் 34, செய்யுள் 21) இவ்வாறு தேவராப்பாடல்கள் முழுவதையும் காலத்தால் அழியா ஏற்பாடாக செப்பேட்டில் எழுதப்பட்டது

இந்த தேவாரம் எழுதப்பட்ட செப்பேடுகள் இன்று எங்கு யாரிடம் உள்ளது என்ற விபரம் அறியக்கிடைக்கவில்லை..
இந்த சூழலில்தான்..இன்று சீர்காழி கோவிலில் தேவாரம் எழுதப்பட்ட செப்பேடுகள் கிடைத்துள்ளது. முதல் பார்வையில் தேவாரப் பதிகங்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளன.செப்பேடு யார்.காலம்.?எத்தனை இதழ்கள்..? என்னென்ன பாடல்கள்.?விபரங்கள் விரைவில் வெளிவரும்.
நன்றி: ஈழத்து வரலாறும் தொல்லியலும்

1,043 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *